Tuesday, June 29, 2010

மண்ணடியில் திரண்ட மக்கள் கூட்டம்


பயங்கரவாத எதிர்ப்புப் பொதுக் கூட்டம் வட சென்னை மாவட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மண்ணடி, தம்புச் செட்டித் தெருவில் ஞாயிறன்று மாலை 7 மணியளவில் நடைபெற்றது.
வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்க, மண்ணடி ஜாகிர் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் துவக்கமாக உரையாற்றிய மாநிலப் பேச்சாளர் மசூதா ஆலிமா, அழைப்புப் பணியின் அவசியம் குறித்து உரை நிகழ்த்தினார். அவர் பேசும்போது, ""அழைப்புப் பணியை ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் இருந்தே துவங்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.
அடுத்து பேசிய மாநிலச் செயலாளர் அப்துல் ஹமீது, கல்வியின் அவசியம் குறித்து பேசினார். ""அல்லாஹ் திருமறையில் கூறும் கல்வி, நாம் விளங்கி வைத்துள்ள உலகக் கல்விதான். பூமி விரிக்கப்பட்டிருப்பதையும், வானம் உயர்த்தப்பட்டுள்ளதையும், மலைகள் நாட்டப்பட்டிருப்பதையும் இறைவன் திருமறையில் விவரிப்பதை எடுத்துரைத்தார். 
அவரைத் தொடர்ந்து பேசிய மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான் ஐஎன்டிஜே கடந்து வந்த பாதை எனும் தலைப்பில் பேசினார். கடந்த 18 மாத காலங்களில் ஐஎன்டிஜே ஆற்றிய பணிகளையும், சமுதாய ஒற்றுமைக்கு இன்று அழைப்பு விடுபவர்களின் சந்தர்ப்பவாதத்தையும் எடுத்துரைத்தார். மேலும் சமுதாய ஒற்றுமைக்கு இன்று அனைவருக்கும் விடுக்கும் அழைப்பு உண்மையானால், அனைவரும் தங்கள் கொடியோடு வரலாம் என அழைக்கட்டும். இதுபோல் பொதுப் பிரச்சினையில் மற்றவர்கள் அழைத்தால் நாங்கள் வருவோம் என கூறட்டும் என இடித்துரைத்தார்.
இறுதியாக பேசிய தலைவர் எஸ்.எம். பாக்கர், ""உலக அளவிலான பயங்கரவாதிகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வரலாற்றை எடுத்துரைத்தார். உலக முஸ்லிம்களுக்கு ஒன்றுபட்ட ஒரு தலைமையை தர இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு கூறி உரையை நிறைவு செய்தார்.
தீர்மானங்களை புளியந்தோப்பு பீர் முகம்மது வாசிக்க வண்ணை பாஷா நன்றியுரை நிகழ்த்திய இக்கூட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக் கூட்டங்களிலும், செயற்குழு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பிறமத சகோதரர்கள் கலிமாச் சொல்லி இஸ்லாதை ஏற்பது வழக்கமாகிவிட்ட நிலையில், மண்ணடி கூட்டத்திலும் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றார். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற அந்த இளைஞர் உமர் என பெயரிடப்பட்டார். அல்ஹம்து லில்லாஹ்!
========
கல்வி உதவிப் பணியில் ஐஎன்டிஜே
மத்திய அரசின் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவி (ஸ்காலர்ஷிப்) பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, அதை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் பணியை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருகிறது. சென்னையில் ஐஎன்டிஜேவின் திருவல்லிக்கேணி, வேளச்சேரி, பெரம்பூர் வீனஸ், சேப்பாக்கம் ஆகிய கிளைகளை சேர்ந்த நிர்வாகிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். (படத்தில் பெரம்பூர் வீனஸ் கிளை நிர்வாகிகள் விண்ணப் படிவங்களை பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.)

0 comments:

Post a Comment