Tuesday, June 14, 2011

வீரமணிக்கு மக்கள் ரிப்போர்ட் பதிலடி!

வீரமணிக்கு மக்கள் ரிப்போர்ட் பதிலடி!

ண்மையிலேயே தூங்குபவர்களை எழுப்பி விடலாம்; தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது ' என்ற சொல் வழக்கிற்கு சாலப் பொருத்தமானவர்கள் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்ளும் நாத்திகர்கள். வீட்டில் உள்ள மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க வீட்டையே கொளுத்திய அறிவாளி[!] போன்று, இவர்கள் கடவுளின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கையை ஒழிக்கிறேன் என்ற பெயரில் கடவுளையே ஒழிக்க முற்பட்டவர்கள். 'கோயில் கூடாது என்பது என் வாதமல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரமாக்கி விடக் கூடாது என்கிறேன்' என்று கி.வீரமணியால் இன்றும் புகழப்படும் மு.கருணாநிதி எழுதிய பிரபல்யமான திரை வசனமாகும். கோயில் கொடியவர்களின் கூடாரமாகாமல் தடுக்கப் புறப்பட்டவர்கள், பின்னாளில் கோயிலே கூடாது என்று கொள்கை பேசினார்கள்.

சரி அதிலாவது உறுதியாக இருந்தார்களா என்றால் அதுவும் இல்லை. பெரியார் நினைவு இல்லம் எழுப்பினார்கள். கல்லால் செய்யப்பட்ட சாமிக்கு மாலை போட்டால் அது காட்டுமிராண்டித்தனம்; அதே கல்லால் செய்யப்பட்ட பெரியாருக்கு மாலை போட்டு கையெடுத்து கும்பிட்டால் அதற்கு பெயர் பகுத்தறிவு என இவர்களின் இலக்கணம் மாறியது. இவர்களது இந்த கடவுள் மறுப்புக் கொள்கை பெரியாரோடு அடக்கம் செய்யப்பட்டு விட்டது என்பதை விட பெரியார் வாழும் காலத்திலேயே அதற்கான சவக்குழி தோண்டப்பட்டது என்பதுதான் உண்மை. பெரியாரின் வழி வந்த அண்ணா, 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று கூறி நாத்திக கொள்கையை சவக்குழிக்கு அனுப்பி தனது கையால் ஒரு பிடி மண்ணையும் அள்ளி போட்டார். அண்ணாவிற்கு பின்னால் வந்த, 'ஈரோடு பாசறையில் படித்தவன் என முழங்கும் மு.கருணாநிதி, `கடவுளை நான் ஏற்கிறேனா என்பது முக்கியமல்ல; அவர் என்னை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் நான் இருக்கிறேனா என்பதே முக்கியம்` என்று பகுத்தறிவு பேசி நாத்திக கொள்கைக்கு நாலாந்தர அர்த்தம் தந்தார். மாற்றொரு புறம் அண்ணாவின் வழி வந்த எம்.ஜி.ஆர். மூகாம்பிகை கோயிலை வணங்கினார். அவரது அரசியல் வாரிசு ஜெயலலிதா, பிரபல்ய மதவாதிகளின் ஆலோசனைப்படியே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறார். இவ்வாறு பெரியார் வழி வந்தவர்கள் 'பெரியவா' வழியில் சற்றேறக்குறைய பயணிக்க தொடங்கிவிட்ட நிலையில், மண்ணோடு மண்ணாக மக்கிப்போன நாத்திக கொள்கையை இருப்பதாக காட்டிக்கொள்ள அவ்வப்போது பகுத்தறிவு கேள்விகள் என வீரமணியார் அடுக்குவார்.

ஆனால், இறந்து போன பெரியாருக்கு சிலை வைப்பதும், இறந்து போன பெரியாருக்கு பிறந்தநாள் கொண்டாடுவதும், பெரியார் சிலைக்கு மாலையிடுவதும் எந்தவகை பகுத்தறிவு என்ற சாதாரணக் கேள்விக்கு கூட பதிலளிக்காமல் மறைந்து விடுகிறார். இந்நிலையில் விடுதலை நாளிதழில், 'தமிழர்கள் சிந்தனைக்கு...என்ற தலைப்பில் ஒரு பிரசுரத்தை வெளியிட்டுள்ளார். அதில் பெரும்பாலானவைகள் இந்து-கிறிஸ்தவ மதங்கள் தொடர்பானதாக உள்ள நிலையில், சில விஷயங்கள் இஸ்லாம் குறித்தும் உள்ளன. அவைகளுக்கு மட்டும் நாம் பதிலளிக்கிறோம். [சிகப்பு கலரில் உள்ளவைகள் பிரசுரத்தில் உள்ள கேள்விகள் என்பதை நினைவில் கொள்க]

உலகைப் படைத்தது கடவுள் என்றால் கடவுளைப் படைத்தது யார்?

இக்கேள்வியை கேட்பது எந்தவகை பகுத்தறிவோ தெரியவில்லை. கடவுள் என்பவன் எல்லா நிலையிலும் மனிதனிலிருந்து மாறுபட்டவனாக இருக்க வேண்டும். அவன் படைப்பு உட்பட. மனிதனை கடவுள் படைத்தது போன்று கடவுளை வேறொருவர் படைத்தால் அங்கே கடவுள் பிறப்பு விஷயத்தில் மனிதனுக்கு ஒப்பாகி விடுகிறான். அது மட்டுமன்றி கடவுளையே படைத்தவர்கள் சாமான்யர்களாக இருப்பார்களா? அவர்களும் கடவுளாகி விடுவர். இப்படியே கடவுளர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காமல் போய்விடும். அவற்றின் முடிவு எவராலும் பதில் சொல்ல முடியாத ஒன்றாகிவிடும். வீரமணியாருக்கு புரிவது போல் சொல்ல வேண்டுமென்றால், குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது இவரின் கொள்கை. அது தவறு என்பது தனி விஷயம். நாம் கேட்பது முதல் குரங்கை படைத்தது யார்? தானாக தோன்றியது என வீரமணியார் கூற வருவாரானால், ஆதி குரங்கு தானாக தோன்றும் போது அதி பகவான் தோன்றுவது மட்டும் பகுத்தறிவுக்கு இடிக்கிறதோ?

இறைவனிடம் கையேந்தினால் அவர் இல்லையென்று சொல்வதில்லையாமே! வாங்கியவர்கள் முகவரி எங்கே?

முகவரி தேடி வந்து பணத்தைக் கொடுத்து விட்டு கையெழுத்து வாங்கிச்செல்ல கடவுள் ஒன்றும் தபால்காரர் அல்ல. கடவுளை நம்புபவர்கள் மட்டுமன்றி, கடவுளை நம்பாத வீரமணியார்கள் வரை கடவுளால் பலனடைத்தவர்கள் தான். வீரமணி கேட்கலாம் நான் எப்படி பலனடைந்தேன் என்று.? இவரது ஆசான் கடவுளை திட்டியே பிரபல்யமாகி அதனால் கிடைத்தது தானே பெரியார் நிலையங்களின் பலகோடி சொத்துக்கள்! அதை இன்றைக்கு வீரமணி அனுபவித்து [அல்லது நிர்வகித்து] வருகிறாரே! இது ஒன்றே கடவுள் தரக்கூடியவர் என்பதற்கு சான்றில்லையா? திட்டியவர்களுக்கே தரும் இறைவன், தன்னை நம்புபவனுக்கு தரமாட்டானா?

எல்லாம் அவன் செயல் என்றால், புயலும், வெள்ளமும், நில அதிர்வும், கடல் பேரலையும் எவன் செயல்?

அதுவும் அவன் செயல்தான். மனிதன் வீரமணியார் போன்றவர்களின் வெற்று பகுத்தறிவை கேட்டு வரம்பு மீறி நடக்கும் போது தனது வல்லமையை மனிதனுக்கு காட்ட இறைவன் செய்யும் எச்சரிக்கைதான் அது. அதெல்லாம் கிடக்கட்டும் உங்க பகுத்தறிவை வைத்து இதையெல்லாம் கொஞ்சம் தடுத்து பார்க்க வேண்டியதுதானே?

குழந்தைகளைப் படைப்பது கடவுள் சக்தி என்றால், குடும்பக்கட்டுப்பாடு செய்தபின் அவரால் படைக்க முடியுமா?

மாதவிலக்கு நின்ற பெண்கள் குழந்தை பெறமுடியாது என்பதுதான் மருத்துவம் சொல்லும் உண்மை. ஆனால் மாதவிலக்கு நின்ற வயோதிகமடைந்த பெண் குழந்தை பெற்ற செய்தியெல்லாம் பத்திரிக்கையில் வந்ததை வீரமணியார் படிக்கவில்லையா? இறைவன் நாடினால் வயோதிகர்களுக்கும் குழந்தை தருவான். அவன் நாடினால் வாலிபனையும் மலடாக்குவான். குழந்தை தருவது கடவுளின் செயல் அல்ல என்பது வீரமணியாரின் கொள்கை. அப்படியாயின் குழந்தையை உருவாக்குவது மனிதன் என்றால், குழந்தை இல்லாத தம்பதிகள் எப்படி உருவாகிறார்கள்? எத்துனை வைத்தியம் பார்த்தும் குழந்தையே பிறக்காதவர்கள் வரலாறு வீரமணிக்கு தெரியாதா? இளமைப் பருவத்தில் இருக்கும் தம்பதிக்கு குழந்தை பேற்றை தடுத்த அந்த சக்தி யார் என்று வீரமணியார் கூறுவாரா?

சாத்தானும், சைத்தானும், பைபிளிலும், குர் ஆனிலும் தானே உள்ளது? நேரில் கண்டவர்கள் யார்? ஆண்டுகள் பலவாகியும் ஆண்டவர்களால் இவற்றை ஒழிக்க முடியவில்லையே ஏன்?

சாத்தானை நேரில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். தீய வழிக்கு அழைக்கும் ஒவ்வொரு மனிதனின் வடிவிலும் சாத்தானை அதாவது சாத்தானின் தன்மையை காண்கிறோம். சாத்தனை ஒழிப்பதற்கு கடவுளுக்கு ஆண்டுக்கணக்கில் அவகாசம் தேவையில்லை. அரை நொடி போதும். சாத்தானை அழித்து அனைத்து மனிதர்களையும் வீரமணியார் உட்பட, தன்னை வணங்கக் கூடியவர்களாக மாற்ற கடவுளுக்கு நீண்ட நேரம் தேவையில்லை. ஆனால் இயந்திரத்தனமான மனிதனை இறைவன் படைக்கவில்லை. சிந்திக்கும் அறிவை தந்து, சாத்தானின் வழிகேட்டை புறந்தள்ளி, தன்னை நம்பக்கூடிய அடியார்களை பிரித்தெடுப்பதற்காக சாத்தானுக்கு கடவுள் உலகம் அழியும் நாள் வரை அவகாசம் அளித்துள்ளான்.

எல்லாம் இறைவனால் முடியும் என்றால் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் ஏன் இடிதாங்கி வைத்துள்ளார்கள்? இடியிலிருந்து அவற்றைப் பாதுகாக்க கடவுளுக்கு சக்தியில்லையா?

கடவுள் உலகத்திலுள்ள எல்லாவற்றை யும் படைத்தாரென்றால் தனக்கென கோவில் உண்டாக்க முடிய வில்லையே! காணிக்கை, வரி என்று மனிதர்கள் தானே வசூலித்து உழைத்து, கோவிலை, தேவாலயங்களை, மசூதிகளை கட்டி திருவிழாக்களை நடத்துகின்றனர்?

கோயில்கள்-சர்ச்சுகள் எப்படியோ நமக்கு தெரியாது. பெரும்பான்மை மசூதிகளில் இடிதாங்கி வைக்கப்படவில்லை. நவீனமாக கட்டப்பட்ட சிலவற்றில் வைத்திருக்கலாம். இவ்வாறு இடிதாங்கி வைத்துக் கட்டுமாறு கடவுளும் சொல்லவில்லை. இடிதாங்கி வைக்காமல் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வயதுடைய மசூதி இந்தியாவில் இருப்பதை வீரமணியார் அறியவில்லையா? ஒரு கட்டடம் கட்டும் போது எந்தவகையான பாதுகாப்புகளை செய்வோமோ அதேபோன்றுதான் சில மசூதிகளில் இடிதாங்கி பொருத்தப் பட்டிருக்கலாம். காரணம் மசூதி என்பது அல்லாஹ் குடியிருக்கும் வீடல்ல. அவனை வணங்குவதற்கான ஒரு கட்டிடமே. மேலும் பள்ளிவாசல் கட்டாமல் இறைவனை வணங்க முடியுமா என்றால் இஸ்லாமிய நம்பிக்கைப்படி முடியும். பூமியில் தூய்மையான எந்த இடமும் இறைவனை தொழுவதற்கு ஏற்றவைதான். அதனால்தான் சில போரட்ட களங்களில் முஸ்லிம்கள் ரோட்டில் அணிவகுத்து நின்று தொழுவதை பார்க்கமுடியும். பிறகு ஏன் பள்ளிவாசல் என்றால், அனைவரும் ஓரிடத்தில் குழுமி ஒரு ஒருங்கிணைந்த வணக்கம் செலுத்த ஒரு இடம் தேவை என்ற அடிப்படையில்தான். அதோடு பள்ளிவாசலில் வீரமணியார் கூறுவது போன்று திருவிழாக்கள் எதுவும் நடத்துவதில்லை. அங்கு தொழுகை மட்டுமே நடைபெறும்.

தெருவில் டேப் அடித்து பாட்டுப்பாடி பிச்சை எடுக்கிற பக்கிரிசாக்கள் புனித யாத்திரை (மெக்கா பயணம்) கடமை முடிப்பது எப்போது?
உடலாலும், பொருளாலும் சக்தி பெற்றவர் நீங்கலாக,மற்ற எவருக்கும் மக்கா செல்ல வேண்டிய நிர்பந்தம் எதுவும் இஸ்லாத்தில் இல்லை என்பதை புரிவீராக.
நமக்கு வரும் நோய்களுக்கெல்லாம் பிரார்த்தனை, தொழுகை நேர்த்திக் கடன் செய்தால் மருத்துவரிடம் காண்பிக்காமல் நோய்கள் தீர்ந்து விடுமா?
அப்படி இஸ்லாம் சொல்லவில்லை. மருத்துவமும் செய்யுங்கள்- பிரார்த்தனையும் செய்யுங்கள் என்றுதான் இஸ்லாம் கட்டளையிடுகிறது.
எல்லாம் இறைவன் செயல் என்றால் இறைவனை வழிபட சபரிமலை, திருப்பதி, வேளாங்கண்ணி, நாகூர் தர்கா, மெக்கா செல்லும் பக்தர்கள் விபத்தில் உயிரிழப்பது எவன் செயல்? தன்னைத் தேடிவருபவர்களுக்கு இறைவன் கொடுக்கும் பரிசு இதுதானா?

என்னமோ புனித பயணம் மேற்கொள்ளுபவர்கள் மட்டுமே உயிரிழப்பது போலவும், அவர்களை கடவுள் காக்க தவறிவிட்டார் என்பது போலவும் வாதம் வைப்பவரே! வீட்டில் அடைந்து கிடப்பவருக்கும் மரணம் வருகிறதே! அவ்வளவு ஏன்? கடவுளை நம்பாத நாத்திகர்கள் மரணிக்கக் வில்லையா? அந்த நாத்திகர்களின் மரணத்தை தடுத்துக் காட்டிவிட்டு பின்னர் சொல்லட்டும் புனித பயணிகளை கடவுள் கைவிட்டு விட்டார் என்று. அவ்வாறு செய்ய முடியுமா இவர்களால்? முடியாது எனில்,அந்த நாத்திகர்களை எந்த இறைவன் மரணிக்க செய்தானோ அதே இறைவன்தான் புனித பயணம் மேற்கொள்பவர்களையும் மரணிக்க செய்கிறான். அவர்களை காக்க முடியாமல் அல்ல. மாறாக மனிதன் மரணிக்கக் கூடியவனே; அவன் வீட்டில் இருந்தாலும் கோயிலில் இருந்தாலும், மசூதியில் இருந்தாலும் அவனுக்குரிய தவணை வந்துவிட்டால் அவன் மரணிப்பவனே. மரணிக்காமல் இருப்பவன் கடவுளாகிய நான் மட்டுமே என்ற தத்துவத்தை உணர்த்தவே.
புதிதாக கார் வாங்குபவர்கள், இது கடவுளின் பரிசு என்று எழுது கிறார்கள். பலகோடி பேருக்கு கார் கொடுக்காத கடவுள் இவர்களுக்கு மட்டும் கார் கொடுப்பது நியாயம் தானா?

சென்னை நகரில் ஒண்ட குடிசை இன்றி, மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து பிளாட்பாரத்தில் வாசம் கொள்ளும் லட்சக்கணக்கானோர் இருக்கும் நிலையில், என்னை மட்டும் பணக்காரனாக ஆக்கியது நியாயமா? என்று வீரமணியார் கேட்டால் அது நியாயம். மனிதனுக்கு மத்தியில் பொருளாதார ஏற்றத் தாழ்வு இருப்பதும் இறைவனின் சான்றாகும். அப்படி இருப்பதால்தான் உலகம் இயங்குகிறது. எல்லோருக்கும் வீரமணியார் அளவுக்கு காரும்-வசதியும் தந்துவிட்டால் விடுதலை பத்திரிக்கை வேலையை பார்க்க யார் வருவார் என்று சிந்திக்க மாட்டாரா?
மதங்கள் என்பவை மனித மனதை ஒழுங்குபடுத்தத் தோன்றியவை எனில் கோயில்களும், - மசூதிகளும் ஏன் இடிக்கப்படுகின்றன?
பெரியாரின் சீர்திருத்த பாசறையில் பயின்ற உங்களுக்குள் எப்படி மோதலும், பிரிவும், சொத்து சண்டையும் வந்ததோ அதே போன்று மதத்தில் உள்ளவர்களிலும் உள்ள சில புரியாத மூடர்களால் தான் கோயில்களும்- மசூதிகளும் இடிபடுகின்றன. மோதலுக்கு காரணம் மதம் என்றால், மத நம்பிக்கையற்ற உங்கள் இயக்கம் பிரிவு- சொத்துச்சண்டை- வழக்குகள் ஏன் உருவானதோ..?
மெக்காவிற்குச் சென்றவர்களுக்குப் பணச்செலவு தானே ஆகிஇருக்கும், வேறென்ன பயன் கிடைத்தது?
மத அடிபப்டையில் கிடைக்கும் நன்மையை சொன்னால் நம்ப மாட்டீர். ஆனால் உலகம் நவீனமான பின்னும் ஒழிக்கமுடியாத தீண்டாமையை ஒழித்து, கருப்பனும்-வெள்ளையனும், அரசனும்- ஏழையும் ஒன்று கூடி ஒரே சீருடையில், ஒன்றாக கலந்து, பிறப்பால் மனிதனுக்கு மத்தியில் உயர்வு- தாழ்வு இல்லை என்ற மிகப்பெரிய படிப்பினை பலன் கிடைத்தது. உங்களது நாத்திக பிரச்சாரத்தால் தமிழகத்தில் கூட இரட்டைக் குவளைகளையும், திண்ணியம் சம்பவங்களையும், ஒழிக்க முடியவில்லையே?
இறுதியாக மூடநம்பிக்கைகளை சாடுகிறோம் என்ற பெயரில் போகிற போக்கில் இஸ்லாத்தின் மீது கல்லெறியும் வேலையை விட்டுவிட்டு, இஸ்லாம் குறித்த ஐயப்பாடுகளை திறந்த மனதுடன் கலந்துரையாட வீரமணி அவர்களோ, அவரது கொள்கை வாதிகளோ முன்வந்தால், இஸ்லாம் குறித்த நாத்திகர்களின் எந்த சந்தேகம் குறித்தும் உங்களுடன் கலந்துரையாடல் நடத்திட, சமுதாய மக்கள் ரிப்போர்ட் மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எந்த நேரத்திலும் தயாராக உள்ளது என்பதை அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி; சமுதாய மக்கள் ரிப்போர்ட்

0 comments:

Post a Comment