Friday, August 12, 2011

மீண்டும் திரும்புகிறதா அறியாமைக்காலம்..?

றைவனின் தூதர்[ஸல்] அவர்கள் தூதராக அனுப்பப்பட்ட அந்த காலகட்டம் 'அறியாமைக் காலம்' என்று வரலாற்றில் சொல்லப்படும் அளவுக்கு மூடநம்பிக்கை மலிந்து காணப்பட்ட காலகட்டமாகும். பெண் குழந்தை பிறந்து விட்டால் அதை அவமானமாக கருதி பத்துமாசம் சுமந்து பெற்ற குழந்தையை உயிரோடு புதைத்த சம்பவங்கள் நடந்தேறின. அதை பெரும்பாவமாக கருதி அம்மக்களுக்கு உபதேசம் செய்த நபிகளார், பெண் குழந்தையை அவமானமாக கருதி கொன்று குவித்த அம்மக்களை பெண் குழந்தையை போட்டி  போட்டு வளர்க்கும் அளவுக்கு இஸ்லாத்தின் மூலம் மாற்றிக் காட்டினார்கள்.
 
ஆனால் இன்று நவீன உலகில், பெண்குழந்தைகளை கருவிலேயே கொல்வது, பிறந்த பின் கள்ளிப்பால் ஊற்றிக்  கொல்வது, பெற்ற குழந்தையை  அரசுத் தொட்டிலில் போட்டுவிட்டு ஓடுவது, இவ்வாறான காட்டுமிராண்டி தனங்கள் நடந்த நிலையில், அரசின் கடுமையான கட்டுப்பாடுகளால் ஓரளவு இத்தகைய குற்றங்கள் குறைந்துள்ள நிலையில், மீண்டும் அந்த அறியாமைக் காலம் திரும்புகிறதோ என்ற சந்தேகம் எழும் வண்ணம் ஒரு சம்பவம் நடந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
 
ஆந்திராவில் அனந்தப்பூரை அடுத்த காமக்க பல்லி என்ற கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி லதா 2 நாட்களுக்கு முன் பெண் குழந்தை ஒன்றை பெற்றார். அந்த குழந்தைக்கு உடல் ரீதியாக சிறிய குறைபாடு இருந்தது. எனவே அந்த குழந்தையை இருவரும், அவர்கள் வீட்டின் அருகே உள்ள காட்டு பகுதிக்கு, அதிகாலை நேரத்தில் எடுத்துச்சென்றனர். அங்கு குழி தோண்டி உயிரோடு புதைத்து விட்டனர். அவசர அவசரமாக புதைத்ததால், குழந்தையை முழுமையாக புதைக்காமல் சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து அந்த வழியாக மாடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்ற ஒரு பெண், புதைக்கப்பட்ட குழந்தையின் அழுகுரலை கேட்டார். உடனே அந்த குழந்தையை, குழியில் இருந்து மீட்டு, தனது கிராமத்துக்கு எடுத்து வந்தார். அப்போது அந்த குழந்தை சேகர்-லதா தம்பதிக்கு பிறந்தது என்பது தெரிய வந்தது. பின்னர் அந்த குழந்தையை சேகர்-லதா தாங்களே வளர்ப்பதாக கூறினார்கள். இதைத்தொடர்ந்து பெற்றோரிடமே, குழந்தை ஒப்படைக்கப்பட்டது என்கிறது செய்தி.
 
இரண்டு நாளே ஆன ஒரு பாலகனை கொஞ்சமும் இரக்கமின்றி, உயிரோடு புதைத்த இந்த இரக்கமற்ற பெற்றோர்களை கடுமையாக தண்டிப்பதன் மூலம் , இதுபோன்ற தவறை செய்பவர்களுக்கு பாடம் புகட்டவேண்டிய அரசு, பரிதாபப்பட்டு அக்குழந்தையை அவர்களிடமே வழங்கி கருணை கட்டுவது எந்த வகையில் நியாயம்? முதுமையாலோ, நோயாலோ வாழ்வதற்கு இயலாதவர்களை கருணைக் கொலை செய்வதை கூட தண்டனைக்குரிய  குற்றமாக கருதும் சட்டம், ஒரு இளந்தளிரை கொல்ல முயன்றவர்களை கண்டு கொள்ளாதது இதுபோன்ற குற்றங்கள் அதிகரிக்க காரணமாகிவிடாதா? சில விசயங்களில் சட்டத்தின் கருணையும்- சலுகைகளும்- பாராமுகமும் புரியாத புதிராகவே உள்ளது.
-முகவை  அப்பாஸ் 

0 comments:

Post a Comment