Friday, October 7, 2011

வந்தது தீர்ப்பு வாச்சாத்தி'க்கு...! வருமா குஜராத்துக்கு?



                      

வந்தது தீர்ப்பு வாச்சாத்தி'க்கு...!

 வருமா குஜராத்துக்கு?

ர்மபுரி மாவட்டம் அரூர் அருகே வாச்சாத்தி மலைக்கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராம பகுதியில் சிலர் சந்தனமரங்களை வெட்டி கடத்துவதாக வனத்துறையினருக்கு புகார் சென்றதையடுத்து வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையை சேர்ந்த கூட்டுக்குழுவினர் 1992 ம் ஆண்டு ஜூன் மாதம் 20 ந் தேதி வாச்சாத்தி கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள்.
 
அப்போது வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த 18 பெண்களை கூட்டுக்குழுவினர் பாலியல் பலாத்காரம் (கற்பழிப்பு) மற்றும் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
 
பாதிக்கப்பட்டோர் தரப்பில் விடுத்த வேண்டுகோளை ஏற்று, கடந்த 1996 ம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.  1996 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பின்பு இந்த வழக்கின் விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
 
இதற்கிடையே, வாச்சாத்தி வழக்கு தொடர்பான விசாரணையை விரைவுபடுத்தி முடிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, வாச்சாத்தி வழக்கின் விசாரணை தர்மபுரி மாவட்ட செசன்சு கோர்ட்டில் நீதிபதி குமரகுரு முன்னிலையில் கடந்த ஜூலை முதல் நடந்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய 269 பேரில் 54 பேர் இறந்துவிட்ட நிலையில் 215 பேர் விசாரணைக்கு ஆஜராகி வந்தனர்.
                                
                               வாச்சாத்தி தீர்ப்பின் மகிழ்வில் பாதிக்கப் பட்ட கிராமத்தினர்.  
இந்த வழக்கின் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பை சேர்ந்த வக்கீல்களின் கருத்தை கேட்டறிந்த மாவட்ட அமர்வு நீதிபதி குமரகுரு, தண்டனை விவரத்தை அறிவித்தார். தண்டனை பெற்றவர்களில், 126 பேர் வனத்துறையையும், 84 பேர் போலீஸ் துறையையும், 5 பேர் வருவாய் துறையையும் சேர்ந்தவர்கள்.
இவர்களில் 12 பேருக்கு கற்பழிப்பு மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ்மக்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி 10 ஆண்டு கடுங்காவல் ஜெயில் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராததொகையை கட்டத்தவறினால் கூடுதலாக 9 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
5 பேருக்கு வன்கொடுமை சட்டத்தின்படி 7 ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் தவிர இந்த வழக்கில் மற்ற 198 பேருக்கும் வன்கொடுமை, சாட்சியங்களை மறைத்தல், கலகம் விளைவித்தல், குற்றத்தின் சாட்சிகளை மறைத்தல், குற்றத்தை பற்றி தவறான தகவல் அளித்தல் உள்பட 10&க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் தலா ரூ.1000 முதல் ரூ.2000 வரை அபராதமும் விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் அபராதத் தொகையில் இருந்து தலா ரூ.15 ஆயிரம் நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என்றும், 15 ஆண்டுகளாக வழக்கை நடத்தி வந்த சி.பி.ஐ.க்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேற்கண்ட வழக்கில் 19 ஆண்டுகள் கடந்த பின்னால் தீர்ப்பு வந்துள்ளது. காலம் கடந்தாலும்  நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இந்த தீர்ப்பு தந்தாலும், அளவு கடந்த தாமதம், இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட 54 பேர் தண்டனை பெறாமலேயே மரணமடைந்து விட்டனர். மேலும் இந்த தணடனைகள் நடந்து விட்ட பாலியல் பலாத்காரங்களுக்கு உரிய நிவாரணமாக இல்லை என்றாலும், அரசு அதிகாரிகளாகவே இருந்தாலும் தவறு செய்தவர் என்றாவது ஒருநாள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்ற கருத்து இந்த தீர்ப்பின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நேரத்தில் அரசின் ஆதரவோடு குஜராத்தில் மற்றொரு வாச்சாத்தி சம்பவம் கடந்த 1992 ல் நடைபெற்றது. கோத்ரா ரயில் எரிப்பை காரணம்  காட்டி நரமோடியின் ஆசியுடன் நடைபெற்ற முஸ்லிம் இனப்படுகொலையில் பல முஸ்லிம் பெண்கள் கற்பழித்து கொல்லப்பட்டனர். மார்ச் மாதம்  3ந் தேதி, 2002- நடந்தேறிய இச்சம்பவத்தில் பில்கிஸ் பானுவின் குடும்பத்தினர் துரத்தப்பட்டு், பில்கிஸ் பானு நிர்வாணப்படுத்தப்பட்டு கும்பலால் கற்பழிக்கப்பட்டார். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மூவருக்கு மரணதண்டனை கோரி, சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் கூட செய்தது.
 
ஒரு பில்கிஸ் பானு மட்டுமல்ல; குஜராத்தில் இந்துத்துவாக்களால் கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கு ஒன்பது ஆண்டுகள் கடந்த பின்னும் நீதி கிடைக்கவில்லை.  காரணம் முக்கிய குற்றவாளி மாநிலத்தின் முதல்வராக வீற்றிருப்பது தான். எனவே, வாச்சாத்தி சம்பவத்திற்கு சற்றும் குறைவில்லாமல் நடந்த குஜராத் கற்பழிப்பு சம்பவங்களுக்கும் நீதிமன்றம் விரைந்து நீதி வழங்கிட வேண்டும் என்பதே நமது வேண்டுகோளாகும்.
-முகவை அப்பாஸ் 

0 comments:

Post a Comment