Friday, October 7, 2011

ஆனாலும் இந்தியா மதசார்பற்ற நாடு என்றே நம்புவோம்[!]


ஆனாலும் இந்தியா மதசார்பற்ற நாடு என்றே நம்புவோம்[!]


முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள், 1991  ஆண்டு நடைபெற்ற  தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்தபோது தற்கொலை குண்டுதாரியால் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவோடு சேர்த்து காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேரும் பலியாயினர். இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, சம்மந்தப்பட்டவர்களின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததும், தண்டனைக்கு நாள் குறிக்கப்பட்ட  நிலையில்,  சென்னை உயர்நீதி மன்றத்தில் குற்றவாளிகள் சார்பாக செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் நீதிமன்றம் 8 வாரம் தண்டனையை தள்ளி வைத்ததும் நாமறிந்ததே. 
 
இதே காலகட்டத்தில் புலிகளை கடுமையாக எதிர்க்கும் ஜெயலலிதா, புலிகளின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட ராஜீவ் படுகொலை வழக்கு குற்றவாளிகள் மூவரது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் வேண்டும் என்று சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றினார். இந்த தீர்மானத்தை  காங்கிரஸ் நீங்கலாக, அனைத்து  கட்சிகளும் வரவேற்றன.   
 
அப்போது, தமிழகத்தை முன்மாதிரியாக கொண்டு, டெல்லி பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும்  அப்சல் குருவின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும் என்று காஷ்மீர் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தால் இந்த அரசியல் வாதிகள் அமைதி காப்பார்களா? என்று காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் அறிவுப்பூர்வமான கேள்வியை முன்வைத்தார். உமர்அப்துல்லாஹ்வின் செய்தி வெளியான மாத்திரமே பாஜக குய்யோ- முறையோ என கூப்பாடு போட ஆரம்பித்தது.  
 
இந்நிலையில், ராஜீவ் கொலையாளிகள் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, தமிழக சட்டசபையில் தீர்மானம் இயற்றப்பட்டதுபோல காஷ்மீர் மாநில சுயேட்சை எம்.எல்.ஏ., சேக் அப்துல் ரஷீத் என்பவர், அப்சல் குருவுக்கு மன்னிப்பு அளிக்கக் கோரும் தீர்மானத்தை சட்ட சபையில் கொண்டு வந்தார்.
 
இந்த தீர்மானத்துக்கு பாரதீய ஜனதா, தேசிய பாந்தர் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த தீர்மானத்தை கைவிட வேண்டும் என்று சபாநாயகரிடம் அவர்கள் வலியுறுத்தினர். இதனால் கேள்வி நேரம் பாதிக்கப்பட்டது. ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.
 
பாரதீய ஜனதா உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் மேஜை மீது நின்று கூச்சல் போட்டனர். ஆளும் தரப்பும், எதிர் தரப்பும் வார்த்தை போரில் ஈடுபட்டனர். இதனால் சபையில் கூச்சலும், அமளியும் நிலவியது. உறுப்பினர்களை அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் முகமது அக்பர் லோன் பலமுறை கேட்டுக் கொண்டார்.   ஆனால், அமளி நீடித்ததால், சபை அரை மணி நேரம் ஒத்திவைக்கப்படடது. சபை மீணடும் கூடியதும், அமளி நீடித்தது. எனவே மறுபடியும் ஒரு மணி நேரம் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
 
இதறிடையில் இந்த  தீர்மானம் காலாவதி ஆகிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை கண்டித்து எம்.எல்.ஏ. அப்துல் ரஷித், தனது ஆதரவாளர்களுடன் சட்டசபைக்கு வெளியே ரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். இருப்பினும், அவர் சட்டசபைக்குள் செல்ல மறுத்து விட்டார். அவருடைய ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் தமிழர்கள் என்பதற்காக தமிழக சட்டமன்றம் தீர்மானம்  கொண்டுவந்தால், அமைதி காக்கும் அரசியல்வாதிகள், காஷ்மீரி என்பதற்காக காஷ்மீர் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தால் மட்டும் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கின்றனர். காரணம் அப்சல் நாடாளுமன்ற தாக்குதல் குற்றாவாளி என்று கருதப் படுவதாலா? அல்லது அவர் ஒரு முஸ்லிம் என்பதாலா?  16 உயிர்களை படுகோரமாக கொன்ற வழக்காளிகளுக்கு காட்டப்படும் கருணை; ஒரு கட்டடத்தை தாக்கியதாக கூறப்படுபவனுக்கு இல்லையாம். ஆனாலும் இந்தியா மதசார்பற்ற நாடு என்றே நம்புவோம்.
 
 

0 comments:

Post a Comment