Saturday, August 7, 2010

பின்பற்ற தக்க இமாம்

அஸ்ஸலாமு அலைக்கும் இப்றாஹிம் அவர்களே ! இதை படிப்பதற்கு முன்னர் உங்களுடைய தவ்ஹீத் ஜமாத்தின் இயக்க கொள்கையை சிறிது நேரம் உங்கள் மனதில் இருந்து இறக்கி வைத்து விட்டு ஒரு முஸ்லிமாக (குர் ஆன் மற்றும் ஹதீஸ் ) சொந்த கருத்துக்களுக்கு இடம் கொடுக்காமல் இதை படிக்கவும்.

இதை சொல்லி வெளிபடையான செயல்களை வைத்து அவர்களை காபிர் என்று சொல்ல முடியும் என்று சொல்லி இருக்கிறீர்கள் . இதைத்தான் நீங்கள் தமிழ் நாடு முழுவதும் சொல்லுகிறீர்கள. அதாவது 'தவ்ஹீத்வாதிகள் நாங்கள் இணை வைக்கும் இமாமை பின்பற்றி தொழமாட்டோம் என்று' ஆனால் இந்த கொள்கை எங்கு எல்லாம் நீங்கள் தனி பள்ளி வைத்து இருக்கிறீர்களோ அங்கு மட்டும் பொருந்தும் , தனி பள்ளி இல்லாத இடங்களில் இணை வைப்பவர் என்று நீங்கள் யாரைசொல்கிறிர்களோ அவர்களை பின்பற்றி தொழுகிறிர்கள் !

இப்பொழுது மட்டும் உங்களுடைய தொழுகை கூடுமா ? பின்னர் அதே ஊரில் தனி பள்ளி கட்டி விட்டால், இணை வைக்கும் இமாமைமை பின்பற்ற கூடாது என்று பிதற்றுகிறீர்கள் இதுஎந்த விதத்தில் நீயாயம் ? இதற்கு என்ன பெயர் சொல்வீர்கள் ?

பின்னர் வெளிபடையான செயல்களை வைத்து தீர்மானிக்க முடியாது என்பதற்கு இதோ ஆதாரம் .

மறுமை நாளின்போது முறையே புனிதப் போரில் ஷஹீதானவரில் ஒருவரையும், தானும் கற்று பிறருக்குத் கற்பித்துக் கொடுத்த ஆலிம் - அறிஞரில் ஒருவரையும், நிறைய செல்வங்கள் அளிக்கப்பட்ட செல்வந்தரில் ஒருவரையும் கொண்டு வரப்பட்டு முதன் முதலாக இவர்களுக்கு தீர்ப்பளிக்கப்படும். இவர்களில் ஒவ்வொருவருக்கும் தான் செய்துள்ள அருட் கொடைகளை அல்லாஹ் அவர்களுக்கு எடுத்து உணர்த்துவான். அப்போது அவர்களும் அதை உணர்ந்து கொள்வார்கள். அப்போது அவர்களை நோக்கி நீங்கள் இவற்றிற்காக என்ன கைமாறு செய்தீர்கள் என்று கேட்பான். அதற்கு ஒருவர் (யா அல்லாஹ்) நான் உனக்காக குர்ஆனை ஓதினேன். இல்மை நானும் கற்று பிறருக்கு கற்பித்தும் கொடுத்தேன் என்பார். மூன்றாம் நபர் நீ விரும்பும் அத்துனை விஷயங்களுக்கும் நான் உனக்காக அனைத்துப் பொருள்களையும் செலவு செய்தேன் என்பார்.

அப்போது அல்லாஹ் முதலாம் நபரை நோக்கி நீர் பொய் சொல்கிறீர். உண்மையில் நீ ஒரு மாவீரன் என்று அழைக்கப்படுவதற்காக வெட்டப்பட்டு ஷஹீதாகியுள்ளீர். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று கூறி முகம் கவிழ இழுக்கப்பட்டு நரகத்தில் தள்ளப்படுவார். மற்றொருவரை நோக்கி நீர் பொய் சொல்கிறீர் உண்மையில் நீ ஓர் ஆலிம் - அறிஞர் அழகாக ஓதுபவர் என்று அழைக்கப்படுவதற்காக செயல்பட்டுள்ளீர். அவ்வாறு கூறப்பட்டு விட்டது என்று கூறி இவரும் முகம் கவிழ இழுக்கப்பட்டு நரகத்தில் தள்ளப்படுவார். மூன்றாமவரை நோக்கி, நீரும் பொய் சொல்கிறீர். உண்மையில் நீர் ஒரு கொடை வள்ளல் என்று அழைக்கப்படுவதற்காகவே செலவு செய்துள்ளீர். அவ்வாறு அழைக்கப்பட்டு விட்டது என்று கூறி முகம் கவிழ இவரும் இழுக்கப்பட்டு நரகில் தள்ளப்படுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஹதீஸ் சுருக்கம்: அபூஹுரைரா (ரழி) முஸ்லிம்)

சத்தியத்தை நிலை நாட்டுவதற்காக ஒருவர் அந்த சத்தியத்தை எதிர்த்து போராடுபவர்களை எதிர்த்து சண்டையிட்டு மரணிக்கிறார். அதனை நாம் கண்ணால் காணுகிறோம். அந்த சண்டையில் வெட்டுப்பட்டு மரணிப்பதும் நமக்கு தெரிகிறது. நம் காணும் அறிவின் படி அவர் வெட்டுப்பட்டு ஷஹீதாகியுள்ளார். ஆனால் அப்படிப்பட்ட ஷஹீதை முதன் முதலில் அல்லாஹ் நரகில் எறிகிறான் என்பதை இந்த ஹதீஸ் கூறுகிறது.

அடுத்து ஆலிம் ஒருவர் தனது அறிவைக்கொண்டு மக்களை அல்லாஹ்வின்பால் அழைக்கிறார். அவரது உபதேசங்களைக் கேட்டு ஆயிரக்கணக்கானோர் உண்மையை உணர்ந்து தங்களின் தவறுகளை விட்டு தெளபா செய்து நேர்வழிக்கு வந்து விடுகின்றனர். அவரைப் பெரும் சீர்த்திருத்தவாதி என உலகமே போற்றுகிறது. அப்படிப்பட்ட ஒரு ஆலிமையும் அல்லாஹ் நரகில் எறிவதாகவும் இந்த ஹதீஸ் கூறுகிறது.

அதே போல் மிகப் பெரிய செல்வந்தர் தமது செல்வங்களில் பெரும் பகுதியை அல்லாஹ்வுடைய பாதையில் அள்ளித் தருவதை நமது கண்களாலேயே பார்க்கிறோம். அவர் பெரும் கொடை வள்ளல் என்று அனைவரும் கூறுகின்றனர். ஆனால் அல்லாஹ் அவரையும் நரகில் எறிவதாக இந்த ஹதீஸ் கூறுகிறது.

இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? நாம் நமது கண்களால் திட்டமாகப் பார்ப்பதை வைத்தோ, அல்லது நமது அறிவு ஆராய்ச்சியால் திட்டமாக விளங்கியோ ஒருவனுடைய உள்ளத்தில் இருப்பது ஈமானா - இறை விசுவாசமா, குஃப்ரா - இறை நிராகரிப்பா என்று முடிவு கட்டிவிட முடியாது. அந்த இரகசியம் அல்லாஹ்வுக்கே வெளிச்சம். கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் பார்ப்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று நம் நாட்டு பழமொழி. ஆயினும் இங்கு ஒருவனுடைய உள்ளத்திலிருப்பதை தீர விசாரித்தும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. இந்த நிலையில் தொழ வைக்கும் ஒரு இமாமின் குப்ரை பற்றித் திட்டமாகத தெரிந்து கொள்வது எப்படி சாத்தியம்?

பின்னர் நீங்கள் ,நபி காலத்திலும் சரி நபிக்கு பிறகும் சரி, முஸ்லிம்கள் இணைவைப்பவர்களை தொழுகையில் பின்பற்றியதற்கு எந்த ஆதாரமும் இல்லை, நபிகளின் வழிகாட்டுதல் இல்லாத அனைத்து இபாதத் விசயங்களும் நிராகரிக்கபடும். இணைவப்பவர்களை பின்பற்றலாம் என்றால் நீங்கள் ஆதாரத்தை எடுத்து வைங்கள். என்று கேட்டு இருக்கிறீர்கள்.

இதோ அதற்கு ஆதாரம்:

அதிய்யு பின் கியார் என்பவர் உஸ்மான்(ரழி) அவர்களிடம் வந்து, நீங்கள் அனைவருக்கும் பொது இமாமாக இருந்து கொண்டிருந்தீர்கள். இப்போது நாங்கள் காணும் நிலையில் உங்களுக்குத் துன்பம் வந்து சம்பவித்துள்ளது. (இப்போது) எங்களுக்குக் குழப்பவாதியான இமாம் தொழுகை நடத்துகிறார். அவரைப் பின்பற்றி தொழுதால் நாமும் பாவிகளாகி விடுவோமோ என்று கருதி சங்கடப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்கள். அதற்கு அவர்கள் \'தொழுகைதான் மக்களுடைய அமல்களில் மிக்க அழகானதாகும். மக்கள் அதை அழகுறச் செய்யும்போது, அவர்களுடன் சேர்ந்து நீரும் அதை அழகுறச் செய்து கொள்வீராக! அவர்கள் தீமை விளைவிப்பவர்களாய் இருப்பின் அவர்களின் அத்தீமையை நீர் செய்யாமல் உம்மை தற்காத்துக் கொள்வீராக\' என்றார்கள். (அதிய்யு பின் கியார்(ரஹ்) புகாரி)

இப்னு உமர்(ரழி) அவர்கள் ஹஜ்ஜாஜுபின் யூசுப் எனும் மிகக் கொடிய அநியாயம் செய்தவனுக்குப் பின்னால் தொழுதுள்ளார்கள் என்று இமாம் புகாரி(ரஹ்) அவர்களும், அபூஸயீதில் குத்ரி(ரழி) அவர்கள் பெரும் குழப்பவாதியாக இருந்த \'மர்வான்\' என்பவருக்குப் பின்னால் பெருநாள் தொழுகை தொழுதுள்ளார்கள் என்பதாக இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்களும், மற்றும் திர்மிதீ, அபூதாவூத், நஸயீ முதலியோரும் தமது நூல்களில் வெளியிட்டுள்ளார்கள்.

அப்துல்லாஹ் பின் ஜுபைர்(ரழி) அவர்கள் காலத்தில் இப்னு உமர்(ரழி) அவர்கள் கஷ்பிய்யா, காரிஜிய்யா ஆகிய பெரும் குழப்பவாதிகளுக்குப் பின்னால், அவர்கள் தமக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தொழுதார்கள்.

அது சமயம் அவர்களை நோக்கி, தமக்குள் சண்டை செய்து கொண்டும் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தாருக்கு பின்னால் நின்று தொழுகிறீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், யார் \'ஹய்ய அலஸ் ஸலாஹ்\' (தொழுகைக்கு வாருங்கள்) என்று அழைப்பு விடுகிறாரோ, அவருக்குப் பதில் அளிப்பேன். யார் \'ஹய்ய அலல் ஃபலாஹ்\' (வெற்றியடைவதற்கு வாருங்கள்) என்று அழைப்பு விடுகிறாரோ, அவருக்கும் பதில் அளிப்பேன். ஆனால் யார் \'ஹய்ய அலாகத்லி அக்கீல் முஸ்லிமி வ அக்தி மாலிஹீ\' (உமது சகோதர முஸ்லிமை வெட்டி அவருடைய பொருளை அபகரிப்பதற்காக வாருங்கள்) என்று அழைப்பு விடுகிறாரோ, அதற்கு மாட்டேன் என்று கூறிவிடுவேன் என்றார்கள் (நாபிஊ(ரழி), ஸூனனு ஸயீது பின் மன்சூர்)

ஒரு முறை அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) அவர்களிடம் ஒளூவில்லாமல் ஒருவர் மக்களுக்கு தொழ வைத்து விட்டால் என்ன செய்யவேண்டும்? என்பதாக கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அவர் மட்டும் தொழுகையை மீட்ட வேண்டும்; அவரைப் பின்பற்றி தொழுதவர்கள் மீட்ட வேண்டியதில்லை என்றார்கள். (ஸாலிம்(ரழி), தாரகுத்னீ)

ஒரு முறை உமர்(ரழி) அவர்கள் தாம் ஜுனுபாளி - குளிப்புக் கடமை உள்ளவர்களாயிருக்கும் போது (விஷயம் தெரியாமல்) மக்களுக்குத் தொழ வைத்து விட்டார்கள். பின்னர் (விஷயம் தெரிந்ததும்) மீட்டித் தொழுதார்கள். ஆனால் தொழுகையை மீட்டும்படி மற்றவர்களுக்கு அவர்கள் ஏவவில்லை. (அஷ்ஷரீதுஸ்ஸகஃபி, தாரகுத்னீ)

மேற்காணும் ஹதீஸ்கள் அஃதர்- ஸஹாபாக்களின் சொற்செயல்கள் வாயிலாக தொழ வைக்கும் ஓர் இமாம் அவர் தொழுகையிலோ அல்லது வெளியிலோ என்ன கோளாறுகள் செய்திருந்தாலும் அவற்றால் அவருடைய தொழுகைக்கு மட்டும்தான் பாதிப்பு ஏற்படுமே தவிர, அவரைப் பின்பற்றித் தொழுவோர் முறையாக தொழுதிருக்கும் போது, அவற்றால் இவர்களின் தொழுகைக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்பதை அறிகிறோம். தொழுகையில் இமாம் செய்யும் தவறுகளே மற்றவர்களின் தொழுகையைப் பாதிக்காது எனும்போது, தொழுகைக்கு வெளியில் அவர் செய்யும் தவறு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்த முடியும்?

நன்றி-இதுதான் இஸ்லாம்

0 comments:

Post a Comment