Sunday, August 29, 2010

மேலும் பல வெடி மருந்து லாரிகளை காணவில்லை


மத்தியப் பிரதேச மாநிலத்தில் வெடிபொருள்களை ஏற்றிச் சென்ற 60 லாரிகளைக் காணவில்லை என்ற அதிர்ச்சியான செய்திகள் அண்மையில் வெளியாகி இருந்த நிலையில், காணாமல் போனவை 60 லாரிகள் மட்டும் அன்று; மொத்தம் 163 லாரிகளைக் காணவில்லை என்ற பேரதிர்ச்சியான தகவலை போபால் நகரக் காவல்துறையினர் கண்டறிந்தள்ளனர்.

டெடனேட்டர்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகளை ஏற்றிக் கொண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு டோல்பூர் தொழிற்சாலையில் இருந்து மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சந்தேரி மற்றும் சாகர் ஆகிய இடங்களில் உள்ள நிறுவனங்களுக்குச் சென்று கொண்டிருந்த லாரிகளைக் காணவில்லை.

இந்த இரு நிறுவனங்களில் உரிமையாளர் ஜெய்கிஷன் அஸ்வானி தற்போது தலைமறைவாக இருந்து வருகிறார். அவரது உதவியாளர் ராஜேந்திர செளபே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாகருக்குச் சென்று கொண்டிருந்த 60 லாரி வெடி பொருள்கள் சாகர் சென்றடையவில்லை. அதுபோல சந்தேரிக்குச் சென்ற 103 லாரி வெடி பொருள்கள் சந்தேரிக்குச் செல்லவில்லை என்று மத்தியப் பிரதேச மாநில ஐஜி ஏ.கே. சோனி கூறியுள்ளார்.

காணாமல் போன லாரிகளின் எண்ணிக்கை மேலும் சில நூறுகள் அதிகரிக்கக் கூடும் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த வெடிபொருள்கள் சட்டத்துக்குப் புறம்பான சுரங்கத்தொழிலில் பயன்படுத்துவதற்காக அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கும் காவல்துறையினர், இவை நக்சல் மற்றும் இதர தீவிரவாதக் குழுக்களுக்கும் விற்பனை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்றும் சந்தேகிக்கின்றனர்.

மிகப்பெரும் அளவிலான வெடிபொருள்கள் காணாமல் போயுள்ள நிலையில், காவல் துறையினரின் அச்சம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை.
-noorul ameen

0 comments:

Post a Comment