Thursday, July 14, 2011

துபையில் முஜீப்.காமிற்கு இ.த.ஜ தலைவர் எஸ்.எம் பாக்கர் அவர்களின் சிறப்பு பேட்டி!.


இந்திய தவ்ஹீது ஜமாத் நிர்வாகிகள் வளைகுடா நாடுகளில் தங்களின் சுற்றுப்பயனத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதின் முதற்கட்டமாக துபைக்கு வருகை புரிந்திருந்தனர். குறிப்பாக சகோதரர் எஸ்.எம். பாக்கர் மற்றும் சகோதரர் செங்கிஸ்கான் ஆகியோர் நம் இணையதளத்திற்கு சிறப்பு பேட்டி அளிக்க முன்வந்தனர். முதலில் பேட்டியளிதமைக்கு நம் இணையத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். மேலும் இந்த பேட்டியை எடுத்து தந்த சகோதரர்கள் அதிரை அமீன், அதிரை அப்துல்காதர் ஆகியோருக்கும் நம் மனமார்ந்த நன்றிகள்.

இனி சகோதரர் பாக்கர் அவர்களின் பேட்டியிலிருந்து....

கேள்வி: வளைகுடா வருகையின் நோக்கம் என்ன?. இந்திய தவ்ஹீது ஜமாத்திற்கு மக்களின் ஆதரவு எவ்வாறு உள்ளது?.

பதில்: இது ஒரு நல்ல கேள்வி!. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் நாம் தனியே பிரிந்து வந்த சமயம் துபை வந்திருந்தோம். அப்போது மக்களிடம் நல்ல வரவேற்பும் ஆதரவும் இருந்தது. பல இடங்களில் கூட்டமும் சிறப்பாக நடத்தப்பட்டது. இப்போது வந்திருப்பதன் நோக்கமே, இ.த.ஜ, தாவா பணிகளை அதிகமாக செய்து வருகின்றது. கடந்த இரண்டரை வருடமாக நாம் இங்குள்ள லேபர் கேம்ப்களில், குறைவான சம்பளம் பெரும் மக்களிடம் எந்த விதமான வசூலும் செய்யவில்லை. இதை ஒரு முடிவாகவே நாம் செயல்படுத்தி வருகின்றோம். ஏனெனில் இங்கு உள்ள மக்கள் ரத்தத்தை சிந்தி மிக குறைவான அளவே வருமானம் ஈட்டுகின்றனர். இவர்களிடம் பெறப்படும் தொகை மூலம், மாநாடு, கூட்டம், பேரணி என்று அந்தப்பணம் விரையம் செய்யப்படுவதாக ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. அதன் காரனமாகவே முதலில் இ.த.ஜ மாநில நிர்வாகிகளிடமும், மாவட்ட நிர்வாகிகளின் மூலமுமே நிதி பெறப்பட்டு வருகின்றது.

ஆனால் நாம் அதிகமதிகம் தாவா பணியில் ஈடுபட்டு வருவதினால் இன்னும் நிதி அதிகமாகவே தேவை படுகின்றது. மேலும் முஸ்லிமல்லாத மக்களிடம் குரானை கொண்டுசென்று சேர்க்க வேண்டிய பொறுப்பு உள்ளது. முதலில் சிறிய அளவில் ஏற்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி இன்று சுமார் 15,000 குரானை மக்களிடம் இலவசமாகவே கொண்டு சென்று சேர்த்திருகின்றோம். மேலும் தாவா பனிகள் மருத்துவமனை, பொது இடங்கள், பஸ் ஸ்டான்ட், பீச் என்று சகோதரர் செங்கிஸ்கான் தலைமையில் நடைபெற்று வருகின்றது. எனவே தாவா பணிதான் இந்திய தவ்ஹீது ஜமாத்தின் அடிப்படை பணியாகும். வளைகுடாவில் நல்ல நிலையில் உள்ள சகோதரர்களிடம் மட்டுமே தாவா பணிக்கு நிதி பெறுவதற்கு முயற்சி செய்து சிலரை சந்தித்தோம். சிலர் உடனே நிதி தந்தார்கள். சிலர் தருவதாக வாக்களித்துள்ளனர்.

கேள்வி: தமிழ்நாட்டில் இயங்கும் அணைத்து இயக்கங்களும் வெளிநாட்டில் தங்களுக்கு என்று ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துவது வழக்கம். அந்த வகையில் இ.த.ஜ வின் கட்டமைப்பு வெளிநாடுகளில் எப்படி உள்ளது?.

பதில்: இ.த.ஜ சார்பில் துபையில் தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. சகோதரர்கள் ஜமீல், அதிரை ஜமாலுதீன், சாகுல்ஹமீது, ஜக்கரியா, கமால் போன்றவர்களை ஒருங்கிணைக்கப்பட்டு அவர்களின் முயற்சியால் தற்போது நல்ல முறையில் இயங்கிவருகின்றது. மேலும் தவ்ஹீது இல்லம் மூலமாகவும் நம் செயல்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இது இன்ஷாஅல்லாஹ் மேலும் வலுப்படுத்தப்படும்.

கேள்வி: தமிழக முதல்வர் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதை பயன்படுத்தி, ஆக்கிரமிக்கப்பட்ட வக்ப் வாரியத்தின் சொத்துக்களை மீட்க இ.த.ஜ நடவடிக்கை எடுக்குமா?.

பதில்: தமிழக முதலமைச்சரை சந்தித்து, வக்ப் போர்டு நில ஆக்கிரமிப்பு, கட்டாய திருமண பதிவு சட்டம், இட ஒதுக்கீடு ஆகியவற்றை வலியுறுத்தி கோரிக்கை வைத்துள்ளோம். அதை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளார்கள். ஆனால் வக்ப் வாரியத்திலே தனி பிரிவு ஏற்படுத்தி, நில ஆக்கிரமிப்பு உட்பட அனைத்தும் தனியாகவே கண்கானிக்கப்பட வேண்டும். வக்ப்போர்டு நிர்வாகிகளையும் கண்காணிக்க வேண்டும். முதல்வரை மீண்டும் நேரிலே சந்தித்து இதை மீண்டும் வலியுறுத்துவோம். ஆனால் ஒருக்காலும் இந்திய தவ்ஹீது ஜமாத், வக்ப்வாரிய பதவியையோ, வேறு எந்த பதவியையோ பெற்றுகொள்ள தயாராக இல்லை!.

கேள்வி: இலங்கை தமிழர்களுக்காக நீங்கள் குரல் கொடுப்பதை புலி ஆதரவு என்று சிலர் கூறி வருவதைப் பற்றி தங்களின் கருத்து என்ன?.

பதில்: இலங்கையில் பாதிக்கப்படும் அப்பாவி மக்களுக்காவே நாம் குரல் கொடுத்து வருகின்றோம். புலிகளுக்கு அல்ல!. புலிகள் முஸ்லிம்களுக்கு இழைத்த கொடுமையை நாம் மறக்கவில்லை. விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன் முன்பு இதற்காக மன்னிப்பு கேட்டாலும் கூட, அந்த வடு நம்மைவிட்டு ஆறவில்லை. ஆனால் அதே சமயம் பாதிக்கப்பட்ட எந்த அப்பாவி மக்களுக்கும் குரல்கொடுப்பது இஸ்லாத்தின் கொள்கை. அதையே இ.த.ஜ செய்கின்றது.

கேள்வி: தவ்ஹீதை முன்னிறுத்தும் இ.த.ஜ, கருத்து வேறுபாடுகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு மற்ற இயக்கங்களோடு இணைந்து செயல்படுமா?.

பதில்: நாம் தனி இயக்கம் கண்டதுமே முதலில் கூறியது, இ.த.ஜ மற்ற எல்லா மேடைகளிலும் கலந்துகொள்ளும்! எங்கெல்லாம், தாவா பணி செய்யமுடியுமோ அங்கெல்லாம் செய்வோம்!. மற்ற இயக்கங்களோடு இணக்கமாக இருப்போம்!. தவ்ஹீதில் உறுதியாக இருப்போம் என்பதே!. அரசியல் ரீதியில் ஒன்றினைப்பதில் முயற்சியும் செய்தோம். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றோம். தற்போது தவ்ஹீதுவாதிகள் சிதறி கிடக்கின்றார்கள். அவர்களை எல்லாம் ஒன்றிணைக்கும் முயற்சியையும் செய்து வருகின்றோம். கூடிய விரைவில் வெற்றியடைவோம்.

கேள்வி: வரும் உள்ளாட்சி தேர்தலில் அணைத்து இஸ்லாமிய இயக்கங்களோடும் ஒன்றிணைந்து செயல்படுவீர்களா?.

பதில்: உள்ளாட்சி தேர்தலை பொருத்தமட்டில், அந்த தேர்தல்கள் ஊர் பிரச்சனைகளை மையமாக வைத்து செயல்படுவது ஆகும். இங்கே அனி, கட்சி வெற்றிகளை தீர்மானிக்காது. ஆங்காங்கே உள்ள நல்லவர்களை, தங்களுக்கு பிடித்தவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். இந்த தேர்தல் தொடர்பாக நம் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடி முடிவு செய்யும்.

கேள்வி: திருச்சி இடைத்தேர்தலில் மீண்டும் ஒரு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தக்கோரி அ.தி.மு.க வை வலியுறுத்துவீர்களா?. ஏனெனில் இங்கு சைதை துரைசாமியை நிறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளதே?.

பதில்: கண்டிப்பாக!. ஏற்கனவே இது தொடர்பாக மீண்டும் அங்கு ஒரு முஸ்லிம் எம்.எல்.ஏ தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று அ.தி.மு.க விற்கு கடிதம் மூலமாகவும் வலியுறுத்தி உள்ளோம். திரு.பன்னீர் செல்வம், திரு.செங்கோட்டையன் மற்றும் திரு.பொன்னையன் ஆகியோரிடமும் வலியுறுத்தியுள்ளோம். இன்ஷாஅல்லாஹ் மீறி செயல்படமாடார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். முஸ்லிமைதான் நிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். ஏனெனில் கடந்த அதிமுக ஆட்சியில் முஸ்லிம் அமைச்சரே இல்லாமல் ஆட்சி செய்தவர்கள், இம்முறை மரியம் பிச்சை அவர்கள் விபத்தில் காலமானதும், உடன் அந்த இடத்தை ஜான் அவர்களை நியமனம் செய்தனர். இவர்களின் வெற்றிக்கு முஸ்லிம்களின் வாக்கும் முக்கிய பங்கு வகுத்துள்ளது. நல்லது நடக்கட்டும்.

கேள்வி: சகோதரர் செங்கிஸ்கானின் எழுத்து மற்றும் ஆக்கம் தொடர்பாக பல விமர்சனங்கள் எழுகின்றதே?. அது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?.

(இந்த கேள்வி கேட்கப்படும் போது சகோதரர் செங்கிஸ்கானும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)

பதில்: அதை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்!.

கேள்வி: (உடன் குறுக்கிட்டு......!.) நீங்கள்தான் இ.த.ஜ மாநில தலைவராக இருக்கின்றீர்கள்!. அவரின் பார்வையில் அது சரியாக இருக்கலாம்!. ஆனால் அவரின் எழுத்து நடை விமர்சனத்திற்கு உரியதாக இருக்கின்றதே?. தலைவர் என்ற முறையில் இதை நீங்கள் எப்படி எதிர்கொள்கிண்றீர்கள்?.

பதில்: இதில் எனக்கு வேறுபட்ட கருத்து உண்டு!. அதே சமயம் நிர்வாகிகளின் சுதந்திரத்தில் தலையிடாமைதான் இ.த.ஜ வின் சிறப்பு!. ஆனால் அதே நேரத்தில் இவர் இ.த.ஜ.வின் கருத்தாக இதை வெளியிடுவதில்லை!. அவரின் சொந்த கருத்தாகவே அவரின் இணையத்தில் வெளியிடுகின்றார். அசிங்கமாக, ஒழுங்கீனமாக பதில் அளிக்கவில்லை!. மாறாக கேட்கின்ற கேள்விகளுக்குதான் பதில் தருவதாக அவரின் கருத்தாக உள்ளது. அதே சமயத்தில் பொதுவாக நெட்டில் ஒருவருக்கொருவர் விமர்சித்து கொள்வதை அனைவரும் தவிர்க்கவேண்டும். மேலும் இந்த கேள்விக்கு நீங்கள் அவரிடம்தான் பதிலை பெறவேண்டும்.

கேள்வி: உயர்கல்வி தொடர்பாக ஏதும் நீங்கள் முயற்சி செய்கிண்றீர்களா?.

பதில்: கடந்த இருவருடங்களாக சிகரத்தை நோக்கி என்ற நிகழ்ச்சி நடத்தினோம். ஆனால் வேறு பல பணிகளினால் இவ்வருடம் நடத்த முடியாமல் ஆகிவிட்டது. இருந்தாலும் சென்ற ஆண்டுகளை போல் இல்லாமல் இருந்தாலும் கூட, தனிப்பட்ட முறையில் வழிகாட்டியிருக்கின்றோம். இன்ஷாஅல்லாஹ் அடுத்தடுத்த வருடம் நடத்தப்படும். மேலும் சட்டப்படிப்பு தொடர்பாக முக்கியத்துவம் கொடுத்து நம் மக்களை ஊக்குவித்து வருகின்றோம். இன்று தலித்மக்கள்தான் அதிகமதிகம் சட்டம் படித்து வருகின்றோம்.

கேள்வி: அதிராம்பட்டினத்தில் AEM மற்றும் AIM சார்பில் கல்விக்கென்று முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தி வருகின்றோம். இது போன்ற இயக்கத்துடன் இ.த.ஜ செயல்படுமா?.

பதில்: எங்களை பொருத்தவரை இது போன்ற ஊர் அளவிலான சிறிய சிறிய இயக்கங்கள் இருப்பதை வரவேற்கின்றோம். இந்த அமைப்புகள் மூலம் ஓர் ஐக்கியம் ஏற்படுகின்றது. இதுபோன்ற அமைப்புகளை சுவாகா செய்ய ஆசைபடமாட்டோம். இந்த இயக்கங்கள் இயக்கங்களாகவே இருக்கட்டும். அவர்களுடன் இணைந்து செயல்படுவோம். அதிரையில் AIM போல கீழக்கரையில் KHT, காயல்பட்டினத்தில் IAFT ஆகிய இயக்கங்களும் உள்ளன. இதுபோன்றவற்றுடன் நாம் இணைந்து செயல்படுவோம்.

கேள்வி: கடந்த வெள்ளிகிழமை துபையில் இ.த.ஜ சார்பில் நடந்த கூட்டத்தில் ஜாக்கின் துணைத்தலைவர் சகோதரர் கோவை. அய்யூப் அவர்களும் கலந்து கொண்டு சிறந்த சொற்பொழிவாற்றி சிறப்பித்தார்கள். இது ஓரு நல்ல முயற்சி!. அல்லாஹ் மென்மேலும் இது போன்று ஒத்துழைப்பை தரவேன்டும்!. என துவா செய்கின்றோம்.

பதில்: அதிராம்பட்டிணம் சகோதரர்களை பொருத்தவரை குறிப்பாக நான் பல நன்றிகளை கூறவேண்டும். ஏனெனில் பல இயக்கங்களிலும் முன்னிலை வகிக்ககூடிய தன்னிலமற்ற சகோதரர்கள் உள்ளனர். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, அல்லாஹ்வின் நன்மையை மட்டுமே நாடி செயல்படக்கூடியவர்கள். தொடர்ந்து அவர்களும் ஆதரவு தரவேண்டும். அவர்களுக்கும் அல்லாஹ் அருள்புரியவேண்டும்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோதரர் செங்கிஸ்கானின் பேட்டி தனிப்பதிவில் இன்ஷாஅல்லாஹ்!.
Posted by அதிரை முஜீப்

0 comments:

Post a Comment