Saturday, November 5, 2011

மூவர் தூக்கும் ! முதல்வரின் போக்கும் !


                                  மூவர் தூக்கும் !  முதல்வரின் போக்கும் !





ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை நிராகரித்து ஜனாதிபதி 12.8.11 அன்று உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேருக்கும் 9.9.11 அன்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று 26.8.11 அன்று சிறை நிர்வாகம் தீர்மானித்தது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 3 பேரும் ஆள்கொணர்வு மனு (ஹேபியஸ் கார்பஸ்) தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதிகள் சி.நாகப்பன், எம்.சத்யநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். 3 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இவர்களின் மனுக்களுக்கு மத்திய அரசு, தமிழக அரசு 8 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் 2 மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து 28 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். தமிழக அரசு சார்பில் அரசு பிளீடர் வெங்கடேஷ் பதில் மனு தாக்கல் செய்தார். மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் வாகன்வதி ஆஜராக இருப்பதாகவும், எனவே வழக்கை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என்றும் எம்.ரவீந்திரன் வாதிட்டார்.
 
கொலையாளிகள் தரப்பில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அந்த கட்சியைச் சேர்ந்த வக்கீல்கள் தேவதாஸ், நன்மாறன், ராம.சிவசங்கர் ஆகியோர் ஆஜரானார்கள். கொலை கைதிகளின் மனுவுக்கு பதிலளித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவில், ''ராஜீவ் கொலையாளிகள் தாக்கல் செய்துள்ள மனுக்கள் தகுதியற்றவை என்பதால் அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது தமிழக அரசியல் அரங்கில் மீண்டும் இந்த விவகாரம் பரபரப்பாக அலசப்படுகிறது. 
 
''மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு தமிழக அரசு தரப்பில் உள்துறை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா தாக்கல் செய்த பதில் மனுவில், 3 பேரின் தூக்கு தண்டனையும் ரத்து செய்வது குறித்த எல்லா கேள்விகளுக்கும், 'கருத்து கூற விரும்பவில்லை' என்றே பதிலளித்துள்ளது. மேலும், தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரிய மூவரும் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. அதன்மூலம் 3 பேரையும் தூக்கில் போடுமாறு தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளது என்று அர்த்தமாகிறது'' என்கிறார் வைகோ.
 
''தமிழக அரசின் இந்த முடிவு குடியரசு தலைவர் 3 பேரின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்த போது, அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு, நான் உட்பட பல அரசியல் தலைவர்கள் கேட்டு கொண்டோம். அதை ஏற்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர், தற்போது, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அதற்கு எதிராக செயல்பட்டிருக்கிறார்.இதன்மூலம் மக்களின் எழுச்சியை அடக்கவே சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது என தெளிவாக தெரிகிறது'' என்கிறார் ராமதாஸ்.
 
ஆனால் அரசியல் பார்வையாளர்களோ இந்த விஷயத்தை ஜெயலலிதாவின் அரசியல் ராஜதந்திரமாக கருதுகிறார்கள். முதல்வராக பதவியேற்ற அடுத்த மாதமே ராஜீவ் கொலையாளிகள் தூக்குத் தண்டனை பிரச்சினை கிளம்புகிறது. இதில் காங்கிரஸ் போல, அவர்களை தூக்கில் போடுங்கள் என்று ஜெயலலிதா நேரடியான வார்த்தையில் சொல்லியிருந்தால், அன்றைக்கு தமிழ் ஆதரவாளர்கள் மட்டுமன்றி, ராஜீவ் கொலையாளிகள் மீது இரக்கம் கொண்ட தமிழர்களின் விரோதத்தை ஜெயலலிதா சந்தித்திருப்பார். அது உள்ளாட்சித் தேர்தலிலும் எதிரொலித்திருக்கும். அதை உணர்ந்த ஜெயலலிதா, ஜனாதிபதியால் கருணைமனு நிராகரிக்கப் பட்டவர்களுக்காக, மாற்று வழிமுறை காண முதல்வருக்கு  அதிகாரம் இல்லை என்று சொல்லிப் பார்த்தார். ஆனால் யாரும் விடுவதாக இல்லை. பிறகு காசா- பணமா? ஒரு தீர்மானம் தானே என்று சட்டமன்றத்தில் ராஜீவ் கொலையாளிகளின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி ஒரு தீர்மானத்தை  கொண்டு வந்து வைகோ-சீமான்-ராமதாஸ் போன்ற தமிழ் ஆர்வலர்களின் ஆதரவை அள்ளியதோடு, கொந்தளிப்போடு இருந்த மக்களையும் இந்த தீர்மானத்தின்  மூலம் அமைதிப்படுத்தினார்.  சட்டமன்றத்தில்  இயற்றப்பட்ட தீர்மானம் உப்புச் சப்பில்லாதது; இது யாரையும் கட்டுப்படுத்தாது என்று அன்றைக்கே ஒரு மத்திய அமைச்சர் சொன்னார். ஆனாலும் சீமான் போன்றவர்கள் ஜெயலலிதாவுக்கு பாராட்டுமழை பொழிந்து விட்டார்கள். இதற்கிடையில் உள்ளாட்சித் தேர்தலும் முடிந்து பெருவாரியான வெற்றியையும் ஈட்டிய ஜெயலலிதா, தனது பரம வைரிகளான விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளான இந்த மூவரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வகை செய்யும் வகையில் அரசு பிளீடர் மூலம் அந்தர்பல்டி அடித்து சாதித்து விட்டார். வெளிப்படையாக  பார்க்கும் போது இது ஜெயலலிதாவின் துரோகம் என்றாலும், அரசியலில் இது ராஜதந்திரம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
 
நன்றி; சமுதாய மக்கள் ரிப்போர்ட்.

0 comments:

Post a Comment