Friday, April 29, 2011

பஞ்ச் பட்டிக்காட்டான்[28] just4jokes!


திருனாமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி பேச்சு; "நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கோல்கட்டா நகரத்தை, லண்டன் நகரம் போல், உலகத் தரம் வாய்ந்த வர்த்தக நகரமாக மாற்றுவோம். டார்ஜிலிங்கை, சுவிட்சர்லாந்துக்கு இணையான சுற்றுலா தலமாக்குவோம். துறைமுகங்களை, சிங்கப்பூரில் உள்ளது போன்ற நவீன துறைமுகங்களாக்குவோம். கடற்கரையோர டிகா நகரத்தை, கோவா போல மாற்றுவோம்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; இப்பிடித்தான் எங்க ஊருல ரெண்டு பேரு மயிலாடுதுறையையும், ராமநாதபுரத்தையும் துபாயாக மாத்துவேன்னு சொன்னாங்க. மாத்தீட்டாங்களாக்கும்? அதுனால துபாயாகவும் சிங்கப்பூராகவும் மாத்த வேணாம், இருக்கிறத கெடுக்காம இருந்தா போதும்னு மக்கள் நினைக்கிறாங்க.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேச்சு : கடந்த, 34 ஆண்டுகளாக, மேற்கு வங்க மாநிலத்தை இடதுசாரி கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த காலத்தில், எவ்வித வளர்ச்சிப் பணிகளையோ அல்லது தொழிற்சாலைகள் அமையவோ, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. வேலை தேடி குஜராத் மாநிலத்துக்கு, ஏராளமான வங்காளிகள் வந்துள்ளனர்; பல தொழிற்சாலைகளில் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; ஒரு மாநிலத்தை சேந்தவுக அடுத்த மாநிலத்துக்கு வேலைக்கு போறதுதான் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அளவுகோல்ன்னு சொன்னா, மாநிலத்த விடுங்க; இந்தியாவை சேர்த்த கோடிக்கணக்கானோர் வெளிநாட்டுல வேலைக்கு போயிருக்காங்களே! அப்ப இந்தியாவே தொழில்துறையில் முன்னேறலன்னு சொல்லப் போறீங்களா?

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கபாடியா பேச்சு: மிகவும் அவசியமான காரணங்கள் இருந்தாலன்றி, வக்கீல்கள், அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், அமைச்சர்களுடன் தொடர்பு வைத்து கொள்வதை, நீதிபதிகள் தவிர்க்க வேண்டும். எந்த வகையான ஆதரவையும், முன்னுரிமை தரப்படுவதையும் நீதிபதிகள் ஏற்கக்கூடாது. ஓய்வுக்கு முன், வேறு பணிகளை ஒப்புக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும். இவை தான் ஊழலுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. பாரபட்சமற்ற, அச்சமில்லாத, சுதந்திரமான நீதி வழங்கும் அமைப்பின் அங்கமாக நீதிபதிகள் இருக்க வேண்டும்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; நீங்க சொல்றது கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. அதேமாதிரி நீதிபதியா பதவியேத்தவுடனேயே முதல் வேலையாக முதல்வர சந்திச்சு ஆசி வாங்குறதும் சட்டத்துக்கு உட்பட்டதான்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லாருக்கும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு; எல்லா மாவட்டத்திலும், வட்டார அளவிலும் எனக்கு ஆதரவாளர்கள் உள்ளனர். எனக்கும் தொண்டர்கள் பலம், ஆள்பலம் உண்டு. ஆனால், நான் அமைதியாகவும், அடக்கமாகவும் உள்ளேன். தமிழகம் முழுவதும் எனது ஆதரவாளர்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். அவர்களை நான் அடக்கி வைத்துள்ளேன். நான் ஒரு அறிக்கை வெளியிட்டால் தமிழகமே பற்றி எரியும். ஆனால், எனக்கு கட்சிதான் முக்கியம். தொண்டர்களை தவறாக பயன்படுத்த மாட்டேன்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; ஒரு அறிக்கை வெளியிட்டால் தமிழகமே பற்றி எரியும்னு நீங்க சொல்றது நெசமுங்க. 19 பேரை கட்சியவுட்டு நீக்கி ஒரு அறிக்கைதான் வெளியிடீங்க. தமிழகம் முழுக்க உங்க கொடும்பாவி பத்தி எரியுதே.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேட்டி: காங்கிரஸ் கட்சியை, 1967ல், வீட்டுக்கு அனுப்பினார் அண்ணாதுரை. நாட்டை நாசமாக்கினதே காங்கிரஸ் தான்னு சொன்னார் அண்ணாதுரை. இன்று, தன் குடும்பத்தைக் காப்பாற்ற, காங்கிரஸ் கேட்பதையெல்லாம் தூக்கி கொடுக்கிறார் கருணாநிதி. இவர் அமைத்திருப்பது கொள்கை கூட்டணியா?

பஞ்ச் பட்டிக்காட்டான்; ரெண்டு திராவிடக் கட்சிகளும் மாத்தி மாத்தி ஆட்சி பண்ணி தமிழ்நாட்ட நாசமாக்கிட்டாங்கன்னு நீங்களும் தான் சொன்னீங்க. இப்ப அந்த ரெண்டுல ஒன்னோட போய் சேர்ந்தது மட்டும் கொள்கை கூட்டணியாக்கும்?

லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் பேச்சு: லாலு பிரசாத் ஆட்சியில் இருந்த அதே நிலையில் தான் இப்போதும் பீகார் உள்ளது; ஒரு முன்னேற்றமும் இல்லை. நிதிஷ் அரசின் தோல்விகளை மக்கள் அறியும் வகையில், தீவிர பிரசார இயக்கம் விரைவில் மேற்கொள்ளப்படும்.

பஞ்ச் பட்டிக்காட்டான்; நிதிஷ் ஆட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லன்னு சொல்ற சாக்குல லாலு ஆட்சியிலும் பீகார்ல எந்த முனேற்றமும் ஏற்படலன்னு சொல்றமாதிரி தெரியுதே?


0 comments:

Post a Comment