Monday, April 18, 2011

திருக்குர்'ஆன் எரிக்கப்பட்டதை கண்டித்து, குவைத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற இதஜ வின் கண்டனக் கூட்டம்







































































பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

திருக்குர்'ஆன் எரிக்கப்பட்டதை கண்டித்து, குவைத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற இதஜ வின் கண்டனக் கூட்டம்

அமெரிக்காவில் புனிதக் குர்'ஆன் எரிக்கப்பட்டதைக் கண்டித்து, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக, அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் பங்குபெற்ற கண்டனக்கூட்டம் 15 -04 -2011 வெள்ளியன்று எழுச்சியுடன் நடைபெற்றது. குவைத் மிர்காப் சிட்டியில் அமைந்துள்ள தஞ்சை உணவகத்தில் நடைபெற்றது. இரவு சரியாக 8 மணிக்கு தொடங்கிய இக்கூட்டத்திற்கு இதஜ மண்டலத் துணைத்தலைவர் புகாரி ஹசன் தலைமையேற்க, மண்டல செய்தி தொடர்பாளர் ஜாஹித்ஃபிர்தவ்ஸ் இறைமறை ஓத, மண்டலத் துணைச்செயலாளர் முபாரக் பாஷா வரவேற்புரை நிகழ்த்தினார். கண்டன உரை நிகழ்த்த முதலாவதாக களமிறங்கிய தமுமுக மண்டலத் தலைவர் பேராசிரியர் தாஜுத்தீன் அவர்கள், உலக அளவில் அறியப்பட்ட பிரமுகர்கள் பலரின் இஸ்லாம் மற்றும் திருக்குர்'ஆன் தொடர்பான தவறான புரிதல்களை அவர்களின் வார்த்தைகளை மேற்கோள்கட்டியதோடு, இத்தகைய தவறான புரிதல்களே குர்'ஆன் எரிப்பு போன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என்று எடுத்துரைத்தார்.

அடுத்து மைக் பிடித்த குவைத் இஸ்லாமிய தமிழ் சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லவி. ஹாபிழ். M .முஹம்மது நிஜாமுத்தீன் ஃபாகவி அவர்கள், ஒரு தீமையைக் காணும்போது கையால் அல்லது நாவால் தடுக்கவேண்டும் அதற்கு இயலாதபோது மனதால் வெறுத்து ஒதுங்கிக் கொள்ளவேண்டும் என்ற நபிமொழியை மேற்கோள் காட்டி, திருக்குர்'ஆன் எரிக்கப்பட்ட போது அதை கையால் தடுக்கும் இடத்தில் நாம் இல்லாததால் இங்கே நாம் நாவால் கண்டித்துக் கொண்டிருக்கிறோம். நாளை மறுமையில் எனது வேதம் எரிக்கப்பட்டபோது என்ன செய்தாய்? என்று இறைவன் கேட்கும் போது இறைவா! நாங்கள் அனைத்து முஸ்லிம் அமைப்புகளுகளும் ஒருங்கிணைந்து அச்செயலை கண்டிக்கும் முகமாக கூட்டம் நடத்தினோம் என்று நாம் சொல்லும் வகையில் நமது நிய்யத்தை தூய்மையாக்கிக் கொள்ளவேண்டும் என்றதோடு, திருக்குர்'ஆன் எரிப்பின் மூலம் முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டி விட்டு அதன் மூலம் குளிர் காய நினைக்கும் அமெரிக்காவின் எண்ணம் பின்னணியாக இருக்கலாம் என்றார்.

அடுத்து பேசிய தமிழ் முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் பொதுச்செயலாளர் சகோதரர் திருமங்கலக்குடி அப்துர்ரஹீம் அவர்கள், அமைப்புகள் வேறாகினும் முஸ்லிம்கள் இதுபோன்ற பொதுப் பிரச்சினையில் ஒன்றுபடுவதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, அதற்கான முன் முயற்ச்சியை மேற்கொண்ட இதஜவை பாராட்டுகிறேன் என்றார்.

அடுத்து வந்த K .I .I .F .யின் பிரதிநிதி சகோதரர் அப்பாஸ் அவர்கள், அன்று காரைக்காலில் ஒரு பள்ளிக்கு பிரச்சினை என்றால் துருக்கி தலைமையிலிருந்து ஓலை வரும். அத்தகைய முஸ்லிம்களின் உலகளாவிய தலைமை இஸ்லாமிய எதிரிகளால் என்றைக்கு வீழ்த்தப் பட்டதோ அன்றிலிருந்து இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக செயல்படுவதையே மேற்கத்திய மற்றும் சியோனிச நாடுகள் முன்னெடுத்து செல்வதைக் குறிப்பிட்டு, முஸ்லிம்களின் உலகளாவிய தலைமையின் அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார்.

அடுத்து மைக் பிடித்த தாய்ச்சபையின் அங்கமான காயிதே மில்லத் பேரவையின் தலைவர் ஃபாரூக் அவர்கள், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முஸ்லிம்களின் ஒற்றுமையின்மையையும், கடந்த தேர்தலில் அமைப்புகளின் செயல்பாடுகளையும் குறிப்பிட்டு, இது போன்ற பொதுப் பிரச்சினையில் முஸ்லிம்கள் ஒன்றுபடவேண்டும் என்று பேசினார்.

அடுத்து மைக் பிடித்த சிறப்பு விருந்தினர் டி.வி.எஸ். கார்கோ அதிபர் சகோதரர் ஹைதர் அலி அவர்கள், ஒன்பது கோள்களில் பூமியில் மட்டுமே மனிதன் வாசிக்கமுடியும் என்று திருக் குர்'ஆன் சொல்கிறது. இதை பொய்யாக்க வேண்டும் என்று ஒரு விஞ்ஞானிகள் கூட்டம் அனைத்து கோள்களுக்கும் சென்றதையும், இறுதியில் குர்'ஆன் சொன்னதுபோன்று பூமி மட்டுமே மனிதன் வசிப்பதற்கு ஏற்றது என்பதைக் கண்டறிந்து இஸ்லாத்தை தழுவிய நிகழ்வுகளை சொன்னவர், குர்'ஆனை பொய்ப்படுத்த முடியாததால் ஏற்பட்ட பொறாமையால் பாதிரியார் டெர்ரிஜோன்ஸ் போன்றவர்கள் இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபடுகின்றனர் என்று வலுவாக கண்டனம் செய்தார்.

அடுத்து சிறப்புக் கண்டன உரையாற்றிய தமிழ் இஸ்லாமிய அழைப்பாளர் மவ்லவி. ஜமாலுத்தீன் ஃபாசி அவர்கள், கடந்த ஆண்டு செப்டம்பர் 11 அன்று திருக்குர்'ஆனை எரிக்கப் போகிறேன் என்று இந்த பாதிரியார் சொன்னபோது, 'நீங்க திருக்குர்'ஆனை எரித்தால் இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் அல்-காயிதா வலுப் பெற்றுவிடும் என்று கூறி ஒபாமா தடுத்ததை மேற்கோள் காட்டியவர், இப்போது அதே பாதிரியார் எரித்தவுடன் பெரிய அளவில் கண்டு கொள்ளாதையும் குறிப்பிட்டவர், ஒபாமா கண்டு கொள்ளாதது ஒருபுறம், நமது சமுதாய இயக்கங்களே தேர்தல் என்பதால் குர்'ஆன் எரிப்பை கண்டுகொள்ளாத நிலையில், குவைத் இதஜ, அனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் ஒருங்கிணைத்து இத்தகைய ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது பாராட்டுக்குரியது என்றவர், திருக்குர்'ஆன் எரிப்பு எப்படி கண்டனத்திற்குரியதோ அதேபோன்று திருக்குர்'ஆனோடு தொடர்பில் இல்லாத முஸ்லிம்களின் செயலுக்கும் கண்டனத்திற்குரியது என்றதோடு, ஷாபானு விசயத்தில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு நின்றதால் வெற்றி பெற்றோம். அதே போன்று பொதுப் பிரச்சினைகளில் முஸ்லிம்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதோடு தாமரை இலை தண்ணீராக எதிலும் ஒட்டாமல் வழிந்தோடும் ஒரு குழுவை 'லேசாக' இடித்துரைத்தார்.

இறுதியாக இதஜ மண்டல பொருளாளர் ராஜ்முஹம்மது நன்றியுரை வழங்க, இறைவேதம் முஸ்லிம்களின் இதயத்தை மட்டுமல்ல; இயக்கங்களையும் ஒன்றிணைக்கும் என்ற மனநிறைவோடு, பெருந்திரளாக கலந்து கொண்ட மக்கள் கலைந்து சென்றனர். அனைவரும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மண்டல நிர்வாகிகள் முகவைஅப்பாஸ், சாதிக் சதாம், முஹம்மது சேட் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே!


0 comments:

Post a Comment