Thursday, April 28, 2011

சாய்பாபாவுக்கு இரங்கல்; சன்மார்க்க சருகலில் மமக!

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

அரசியலில் முஸ்லிம்களின் பங்களிப்பு அவசியம் என்ற அடிப்படையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மமகவை ஆதரித்து நாம் நிறைய ஆக்கங்கள் வரைந்தோம். அரசியலில் ஏற்கனவே இருக்கும் முஸ்லிம் அமைப்புகளில் இருந்து வேறுபட்டு இவர்கள் இஸ்லாமிய அடிப்படையில் அரசியல் நடத்துவார்கள் என்ற நம்பிக்கையில். ஆனால் வாக்கு பதிவு முடிந்த மாத்திரமே பக்கா அரசியல்வாதியாக மாறிவிட்டார் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ். இன்று மரணத்தை தழுவிய கடவுள்[?] சாய்பாபாவின் மரணத்தையொட்டி இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார் பேராசிரியர்.அதை கீழே படியுங்கள்;

சாய்பாபா மறைவு-மனித நேய மக்கள் கட்சி அனுதாபம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

இந்து சமய ஆன்மீக குருவான சாய்பாபாவின் மறைவுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.


இந்து சமய ஆன்மீக வாதியும் சமூக சேவகருமான புட்டபர்த்தி சாய்பாபாவின் மறைவால் வாடும் அவரது பக்தர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ஆன்மீக வாதியாக மட்டுமல்லாது நாடறிந்த சமூக சேவகருமாக சாய்பாபா திகழ்ந்தார். ,அவரது நிறுவனங்கள் வாயிலாக கல்வியையும், மருத்துவ உதவியையும் எண்ணற்றோருக்கு வழங்கி பெரும் சேவையாற்றினார்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடும் தண்ணீர் பஞ்சத்தை நீக்க அவர் பெரும் முயற்சி மேற்கொண்டார் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூர குழாய்கள் அமைத்து 700 கிராமங்களுக்கும் 11 நகரங்களுக்கும் தண்ணீர் பஞ்சத்தை தீர்த்து வைத்ததோடு அதற்காக நிதியுதவி வழங்க முன்வந்த மத்திய அரசின் நிதியுதவியையும் ஏற்க மறுத்தார்.

கல்வி உதவிகள், மருத்துவ உதவிகள் மூலம் ஏராளமான மக்களுக்கு தொண்டாற்றிய சாய்பாபாவின் மறைவினால் வாடும் அவரது பக்தர்களுக்கும்ஆதரவாளர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேற்கண்டவாறு அறிக்கையில் கூறியுள்ளார் ஜவாஹிருல்லாஹ்.

ஒரு முஸ்லிம் மரணித்தால் அவனுக்காக துஆ செய்வதும், கணவன் நீங்கலாக யாருக்காவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது என்பதும் இஸ்லாம் நமக்கு கட்டிய வழிமுறையாகும். அதே நேரத்தில் ஒரு இணைவைப்பாளர் மரணித்து விட்டால் அவருக்காக நாம் பிரார்த்திக்கவோ, வேறு காரியங்களை ஆற்றுவதற்கோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஆனால் சாய்பாபா தன்னை கடவுளாகவும், கடவுளின் அவதாரமாகவும் காட்டிக் கொண்டவர். சில அற்புதங்களை[?] செய்து காட்டி தன்னை வழிபடும் கூட்டத்தை உருவாக்கியவர். சாய்பாபாவின் பக்தர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதன் மூலம் சாய்பாபாவை கடவுள் என நம்பும் அவரது பக்தர்களின் சித்தாந்தத்தை அங்கீகரிக்கிறது மமக. மேலும் சாய்பாபா சமூக சேவகர் என்று புகழாரம் சூட்டுகிறது மமக. அப்படியே இருக்கட்டும் சாய்பாபாவின் சமூக சேவை மறுமையில் அவருக்கு பயனளிக்கும் என்கிறதா மமக? இதோ எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்;

ذَلِكَ هُدَى اللّهِ يَهْدِي بِهِ مَن يَشَاء مِنْ عِبَادِهِ وَلَوْ أَشْرَكُواْ لَحَبِطَ عَنْهُم مَّا كَانُواْ يَعْمَلُونَ

இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்.[6:88 ]

இறைமறை இவ்வாறு கூற, அதற்கு நேர் மாற்றமாக புகழ்மாலை சூட்ட மமகவுக்கு ரொம்பவே துணிச்சல். முஸ்லிம் கட்சி, சமுதாய முன்னேற்றம் என்ற பெயரில் மக்களை தவறான வழிக்கு அழைத்து செல்ல வேண்டாம் என்று மமகவுக்கு குறிப்பாக இந்த அறிக்கை வெளியிட்ட ஜவாஹிருல்லாஹ்விற்கு அறிவுறுத்துகிறோம்.

-அப்துல்முஹைமீன்.


0 comments:

Post a Comment