எங்கெங்கு காணினும் சக்தியடா என்றான் பாரதி. இன்றைய கவிஞன் பாட்டெழுதினால் எங்கெங்கு காணினும் ஆபாசமடா என்று கூறுமளவுக்கு எங்கும் ஆபாசம் கொடிகட்டிப் பறக்கிறது.
ஆபாசத்தை அரங்கேற்றியது பல துறைகளாக இருந்தபோதிலும், தாராளமயமாக்கிய பெருமை சினிமாவுக்குத்தான் சேருகிறது. நாட்டுப் புற பெண்ணின் பாத்திரமாக இருந்தாலும் கனவில் பாடுவதாக காட்டி அரைகுறை ஆடையில் ஆட வைத்து விடுகிறார்கள்.
முந்தைய காலங்களில் திரைப்படத்தின் ஒரே ஒரு பாடலுக்கு வரும் நடிகைகள் தான் ஆடைக் குறைப்பில் ஈடுபடுவார்கள். இப்போதோ கதாநாயகிகளுக்கு கூட உடைப் பஞ்சம் ஏற்பட்டு விடுகிறது.
திரைப்படத்தில் வரும் காட்சிகளை கவனமாகப் பார்த்து, ஆபாசக் காட்சிகளை நீக்க வேண்டிய சென்சார் அதிகாரிகள் சிறிய அளவு கெடுபிடி செய்தாலும் முக்கால்வாசி படமும் வெட்டுப்பட வேண்டிய சூழ்நிலை.
இதனால் தான் ஒரு கவிஞன் பாடினான்...
அந்தக் காலத்து நடிகைகள் நடித்துக் காட்டினார்கள், இந்தக் காலத்து நடிகைகள் காட்டி நடிக்கிறார்கள் என்றான்.
பெரிய திரையின் கதை இதுவென்றால், சின்னத் திரையோ உருவத்தில் சிறுத்தாலும் ஆபாசப் போட்டியில் பெரிய திரையை பின்னுக்கு தள்ளி விடுகிறது.ஆரம்பத்தில் தூர்தர்ஷனாக இருந்த காலகட்டத்தில் பெரிய திரையின் ஆதிக்கம் வெள்ளிக்கிழமையில் ஒளியும் - ஒலியும் நிகழ்ச்சியிலும், ஞாயிற்றுக் கிழமை திரைப்படத்திலும் மட்டுமே இருந்தது. கேபிள் டிவியின் வருகையும், தனியார் சேனல்களின் படையெடுப்பினாலும் முழு நேரமும் திரைப்படங்களின் ஆதிக்கமாகவே மாறிவிட்டது சின்னத்திரை.
வீட்டின் வரவேற்பறைக்கே வந்துவிட்டன தொலைக்காட்சிகள். அறிவுப்பூர்வமாக செய்திகளை மட்டும் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் உட்கார்ந்தாலும், இடையில் விளம்பரம் என்ற போர்வையில் அரைகுறை ஆடைகளை அணிந்த பெண்களை கண்ணில் காட்டத் தவறுவதில்லை.
சேலை விளம்பரத்திலும், பெண்களின் ஆடைகள் குறித்த விளம்பரத்திலும் மட்டும் கவர்ச்சி ஆடை பெண்கள் வந்த நிலை போய், மோட்டார் பைக் விளம்பரங்களிலும், ரியல் எஸ்டேட் விளம்பரங்களிலும், ஷேவிங் கிரீம் விளம்பரங்களிலும் கவர்ச்சி உடை பெண்கள் அணிவகுத்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா அறிமுகப்படுத்தியுள்ள குத்தாட்டம் சினிமாவை மட்டு மல்லாமல், பல துறைகளிலும் தனது ஆக்டோபஸ் கரத்தை நீட்ட ஆரம்பித்துள்ளது.
தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்று கடை பரப்பிய குத்தாட்டம், முதல்வருக்கு நடத்தப்படும் பாராட்டு விழாக்களில் எல்லாம் கட்டாயமாக ஆட வேண்டிய தேசிய ஆட்டமாக மாறிவிட்டது.
அரசியல் கட்சி மேடைகளில் பெரிய தலைவர்கள் வரும் வரை கூட்டத்தை கலைய விடாமல் செய்ய நகைச்சுவை, மிமிக்ரி போன்றவை நடந்தது அந்தக் காலத்தில்.
இப்போதோ, பெரிய தலைவர்கள் வரும் வரை கூட்டத்தைக் கலைய விடாமல் வைத்திருப்பது ஆபாச அசைவு காட்டும் குத்தாட்டங்கள்தான். குத்தாட்டத்தின் மகிமை பள்ளி ஆசிரியைகளுக்கும் தெரிந்து விட்டது. அதனால் தான் பள்ளி ஆண்டு விழாக்களில் மாணவ - மாணவிகள் குத்தாட்டம் ஆடுவதற்கு பயிற்சியளிக்கிறார்கள்.
இந்த ஆட்டம் இப்படியென்றால், இன்னொரு ஆட்டமான விளையாட்டிலும் ஆபாசம். ஆடைக் குறைப்பு புகுந்துவிட்டது. உடல் ஆரோக்கியத்திற்கும், மன வலிமையை உருவாக்குவதற்கும் விளையாடப்படுவது தான் விளையாட்டு. இதன் நோக்கமும் மாறிவிட்டது.
டென்னிஸ் விளையாட்டு வேகத்திற்கும், விவேகத்திற்கும் எப்படி பெயர் போனதோ, அதேபோல் குட்டைப் பாவாடைக்கும் பிரசித்தி பெற்றது.பெண்கள் டென்னிஸ் விளையாட்டில் குட்டைப் பாவாடையுடன் விளையாடுவதாலும், அதனை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய காரணத்தினாலும்தான் அந்த விளையாட்டுக்கு ரசிகர்கள் அதிகம் பேர் உருவானதாக நாட்டில் ஒரு கருத்து நிலவுகிறது.
ஆவேசத்துடன் பாய்ந்து மட்டையால் பந்தை அடிக்கும்போது அடிக்கும் காட்சியை காட்டும் தொலைக்காட்சி, பந்தை அடிக்கப் பாய்கிறபோது குட்டைப் பாவாடை பறந்து உள்ளாடை தெரிவதை ஸ்லோமோஷனில் காட்டத் தவறுவதில்லை.
இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியைவிட பிரபலமான கிரிக்கெட்டிலும் இந்த ஆபாசம் அரங்கேற ஆரம்பித்து விட்டது. ஐபிஎல் போட்டியில் அறிமுகமான அசிங்கம் எல்லாப் போட்டிகளிலும் கடை பரப்பத் துவங்கி விட்டது.
பந்து எல்லைக் கோட்டை தாண்டும்போதும், வீரர்கள் ஆட்டமிழக்கும் போதும் முன் காலங்களில் ரீப்ளே போடுவார்கள். இப்போது அதனுடன் சேர்த்து "சியர் கேர்ள்ஸ்' என்னும் அரைகுறை ஆடைகள் அணிந்த பெண்களின் அசிங்க ஆட்டத்தையும் சேர்த்துக் காட்டுக்கிறார்கள்.
ஆபாசங்களை விளையாட்டில் அள்ளிக் குவிப்பதில் முதலிடம் எதற்கு என்றால் சந்தேகமில்லாமல் பீச் வாலிபாலுக்குத்தான். விளையாட்டு என்ற போர்வையில் டூ பீஸ் உடையில் இவர்கள் குதிக்கும் கன்றாவியைப் பார்க்க நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிப்பதாக பெருமை வேறு.
இந்த நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞான கண்டுபிடிப்புகளைப் பற்றி கூறுவதென்றால் பிரதான இடம் பிடிப்பது செல்போனும், இணைய தளமும் தான். இவைகளையும் இந்த ஆபாச அசிங்கங்கள் விட்டு வைக்கவில்லை.
எந்தத் துறைகளைப் பற்றிய தகவல்களையும், எந்த நாட்டைப் பற்றிய தகவல்களையும் இருந்த இடத்திலேயே பெற உதவுவது இணைய தளத்தின் சிறப்பு. அறிவியலின் அற்புதமாகவும், அறிவுச் சுரங்கமாகவும் விளங்க வேண் டிய இணைய தளத்தையும் ஆபாச ஆக்டோபஸ் விட்டு வைக்கவில்லை ஆபாசங்கள் இணைய தளங்கள் முழுவதும் வியாபித்து பரவியுள்ளன.
காட்சி ஆபாசங்கள் ஒருவகை என்றால், செல்போனில் நிகழ்த்தப் பெறும் ஆபாச உரையாடல்கள் இன்னொரு வகை. இந்த இரண்டு ஆபாசங்களிலும் சிந்தையைப் பறிகொடுத்து, பெரும் தொகையை இழந்தவர்க்ள பலர். ஆபாச நிறுவனங்களுக்கு டெலிபோன் நிறுவனங்கள் மூலம்தான் பணம் செல்கின்றது என்பதுதான் வேதனை. அரசு தொலைபேசி நிறுவனங்கள் மூலமாகவும் ஆபாச நிறுவனங்களுக்கு பணம் செலுத்தப்படுகின்றது என்பது வேதனையிலும் வேதனை.ஆபாசமும், ஆடைக் குறைப்பும் தான் விபச்சாரத்தின் ஆணி வேர்கள், ஊற்றுக் கண்கள், பிரதான வாயில்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை.
ஆதமுடைய மக்களே! மெய்யாகவே நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (இறை பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும். (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக. (அல்குர்ஆன் 7:26)
நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள், நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன் 17:32)
என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்கிறது திருமறைக்குர்ஆன்.
ஆபாசமும், அசிங்கமும்தான் இன்றைய இளைய தலைமுறையை வழி கேட்டில் கொண்டு செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சமுதாயத்தில் ஒழுக்கக் கேட்டை வளர்க்கின்றன. தீய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. வெறுமனே சினிமா போஸ்டர்களின் மீது தார் பூசுவதினால் மட்டும் ஆபாசம் ஒழியாது.
ஒரு அநீதியைக் கண்டால் அதனை கையால் தடுக்க வேண்டும், அதற்கு சக்தி பெறாவிட்டால் வாயால் தடுக்க வேண்டும், அதுவும் முடியாவிட்டால் மனதளவில் வெறுத்து ஒதுங்கி விட வேண்டும் என்கிற இஸ்லாமிய போத னையை கடைபிடிப்பதன் மூலமாகத்தான் இதற்கு தீர்வு காண முடியும்.
ஒரு தீமையைத் தடுக்க வேண்டுமென்றால் அது நிகழ்வதற்கான அத்தனை வாசல்களையும் மூட வேண்டும். சமூகத்தின் மிகப் பெரிய தீமையான விபச்ôரத்தை ஒழிக்க வேண்டுமென்றால், அதன் பிரதான வாசலான ஆபாச ஆடைக் குறைப்பை உடனடியாக ஒழிக்க வேண்டும். அதுதான் விபச்சார ஒழிப்பிற்கான சம்மட்டி அடி என்பதை உணர வேண்டும்.
=============
0 comments:
Post a Comment