ஏர்வாடி : ஏர்வாடியில் தவ்ஹீத் ஜமாத் மற்றும் இந்திய சமூக ஜனநாயக கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர். ஏர்வாடியில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரை கைது செய்யக்கோரி இந்திய சமூக ஜனநாயக கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், "திருவிடைச்சேரியில் துப்பாக்கியால் சுட்டு பள்ளிவாசல் தலைவரை கொலை செய்த தவ்ஹீத் ஜமாத் குண்டர்களையும், அவர்களை ஏவியவர்களுக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும், சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கண்டன போஸ்டரை பார்த்த தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆத்திரமடைந்து அவர்களும் அதற்கு எதிராக போஸ்டர் ஒட்டினர். அந்த போஸ்டரில், "தமிழக அரசே தடைசெய், அப்பாவி இளைஞர்களை மூளை சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்.டி.டி.ஐ. இயக்கங்களை உடனே தடைசெய், தமிழக அரசே கலவர பூமியாக்க அனுமதிக்காதே' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து எஸ்.டி.டி.ஐ. இயக்கம் சார்பில் மகபூப் மகன் முஸ்தபா (30), ஷபிபு (30), ஆசிக் ஆகியோர் தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசல் தலைவர் இமாம் அம்ஜத்அலியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. இதில் தவ்ஹீத் அமைப்பை சேர்ந்த அம்ஜத்அலிக்கும், எஸ்.டி.டி.ஐ. இயக்கத்தை சேர்ந்த ஆசிக்கிற்கும் காயம் ஏற்பட்டது. இதில் அம்ஜத்அலி நான்குநேரி அரசு ஆஸ்பத்திரியிலும், ஆசிக் பாளை.,ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ஏர்வாடி இன்ஸ்பெக்டர் முத்துராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி முஸ்தபா, ஷபிபு ஆகியோரை கைது செய்தார். இச்சம்பவம் ஏர்வாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
dinamalar 24-10-10
0 comments:
Post a Comment