காங்கிரஸ், ஆட்சியின் போது தான் அதிக அளவில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான துரோகங்கள் நடந்து வருகின்றன. காங்கிரஸ், முஸ்லிம்களுக்கு நண்பன் என்று கூறிக் கொண்டு, பாரதிய ஜனதா கட்சியை விட அதிக அளவில் துரோகம் இழைத்து வருகிறது,'' என சேலத்தில், இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைவர் பாக்கர் தெரிவித்தார். இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், தலைவர் பாக்கர் தலைமையில் நேற்று( 03.10.10) சேலத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அயோத்தி தீர்ப்பு, அநீதியாக வழங்கப்பட்ட தீர்ப்பு. அமைதி காத்து இருக்கிறோம்; இன்னும் அமைதியை காப்போம். ஒருபோதும் வன்முறைக்கு இடம் அளிக்க மாட்டோம். அதே நேரத்தில் எங்களின் உரிமையை மீட்க ஜனநாயக ரீதியாக மத்திய, மாநில அரசுகளுக்கு எங்களின் உணர்வுகளை போராட்டங்களின் வாயிலாக தெரிவிப்போம்.
இதில், முதல்கட்டமாக எங்களின் பொதுக்குழுவில் எந்த நீதிமன்றம் எங்களுக்கு அநீதி இழைத்ததோ, அந்த நீதிமன்றத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். தற்போது உள்ள சூழலில் அங்கு செல்ல சாத்தியமில்லை என்பதால், எங்களின் போராட்டத்தை சென்னை ஐகோர்ட்டில் நடத்த இருக்கிறோம்.
வரும் 19ம் தேதி காலை 11 மணிக்கு எங்களின் மனைவி, குழந்தைகளுடன் நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மேற்கொள்வோம். எங்களின் தொப்புள்கொடி உறவுகளான இந்து, கிறிஸ்தவர்கள், மத சார்பற்ற சக்திகள், சமூக ஆய்வில் வழிநடத்தும் தலைவர்களின் ஆதரவுடன் ஜனநாயக ரீதியாக இந்த போராட்டங்கள் மேற்கொள்ள உள்ளோம்.
கோர்ட்டை நாங்கள் முற்றுகையிடும் நிலையில் கைது செய்யப்பட்டால், சிறை செல்லவும் தயாராக உள்ளோம். அடக்கு முறைக்கு உட்படுத்த நினைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினால் உயிரை விடவும் அஞ்ச மாட்டோம்.
இந்தியாவை, காங்கிரஸ் ஆண்ட போதெல்லாம் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டு வருகிறது. முஸ்லிம்களின் எதிரியாக கருதப்படும் பாரதிய ஜனதா கட்சியை விட, காங்கிரஸ் நண்பனாக இருப்பது போல் நடித்து, தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. பாபர் மசூதி தீர்ப்புக்கு பின் முஸ்லிம் சமூக மக்களிடம் காங்கிரஸ் குறித்த வெறுப்பு அதிகரித்துள்ளது. காங்கிரசுக்கு நாங்கள் சிறிது காலம் அவகாசம் கொடுக்கிறோம். அதற்குள் அது தன் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல், தேர்தலில் எங்களின் சக்தியை அக்கட்சிக்கு காட்டுவோம். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. தேர்தல் நேரத்தின் போது அப்போதைய சூழ்நிலையை வைத்து எங்களின் ஆதரவு யாருக்கு என்பதை தெரிவிப்போம். இவ்வாறு பாக்கர் கூறினார்.
போட்டியின் போது, இந்திய தவ்ஹீத் ஜமாத் பொதுச் செயலர் முஹம்மது சித்திக், துணைப் பொதுச் செயலர் செய்யது இக்பால், மாநில செயலர் முஹம்மது ஷிப்லி, உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
விரிவான செய்திகள் விரைவில் இன்ஷா அல்லாஹ்...
(நன்றி:தினமலர்)
0 comments:
Post a Comment