Wednesday, February 2, 2011

மகரஜோதி தெரியும் நட்சத்திரமல்ல; ஏற்றப்படும் ஜோதியே- திருவாங்கூர் தேவசம் போர்டு ஒப்புதல்!



மகரஜோதி தெரியும் நட்சத்திரமல்ல; ஏற்றப்படும் ஜோதியே- திருவாங்கூர் தேவசம் போர்டு ஒப்புதல்!
 
தானாக ஜோதி தெரிகிறது என்று நம்பி, அய்யப்பன் சக்தியோடு இந்த ஜோதியையும் முடிச்சுப் போட்டு பாமர மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.அந்த ஜோதி எப்படித் தோன்றுகிறது? யார் எங்கே எப்படி உருவாக்குகிறார்கள்? என்பதை பம்பாயில் இருந்து வெளிவரும் பிளிட்ஸ் வார ஏடு (16-1-82) அம்பலப்படுத்தி விட்டது.[அதை நமது மக்கள் ரிப்போர்டரிலும் வெளியிட்டிருந்தோம்].
 
இதற்கிடையில், இந்த ஆண்டு சபரிமலைக்கு சென்றவர்கள், கடந்த மாதம் 14ஆம் தேதி புல்லுமேடு பகுதியில் ஏற்பட்ட விபத்தில், மகர ஜோதியை தரிசித்து விட்டு ஊர் திரும்பிய அய்யப்ப பக்தர்கள் 104 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை கேரளா உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.சமீபத்தில் நடந்த விசாரணையின் போது, பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி மனிதர்களால் ஏற்றப்படுகிறதா? அல்லது வானத்தில் தோன்றும் நட்சத்திரமா? என்பதை திருவாங்கூர் தேவசம் போர்டு விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. நீதிமன்றத்தின் கிடுக்கிப்பிடியைத் தொடர்ந்து மகரஜோதி பிரச்சினை மீண்டும் பரபரப்பு செய்தியானது. இந்நிலையில், 
 
''பொன்னம்பலமேட்டில் மகர ஜோதியை மனிதர்கள் தான் ஏற்றுகிறார்கள். இது எல்லோருக்கும் தெரியும். அதை திருவாங்கூர் தேவசம் போர்டும் அங்கீகரித்து உள்ளது. மகர ஜோதி ஏற்றப்படும் விஷயத்தில் இந்துக்களிடையே ஒரு நம்பிக்கை உள்ளது.
அந்த நம்பிக்கையில் தேவசம் போர்டு தலையிட விரும்பவில்லை. மனிதர்களால்தான் மகர ஜோதி ஏற்றப்படுகிறது என்று பிரசாரம் செய்யவும் தேவசம் போர்டு விரும்பவில்லை'' என்று தேவசம் போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர் செய்தியாளர்களிடம்  கூறியுள்ளார்.
 
இதன்மூலம் மகரஜோதி என்றபெயரில் மக்களை ஏமாற்றியுள்ளது அப்பட்டமாக புலப்படுகிறது. மக்களின் ஆன்மீக நம்பிக்கையை பயன்படுத்தி, இல்லாத விசயங்களை மிகைப்படுத்திக் காட்டி, அதன் மூலம் மக்களை ஈர்த்து, பலனடையும் கூட்டம்   குறித்து மக்கள் கவனமாக் இருக்கவேண்டும். மேலும் பக்தியின் பெயரால் ஏமாற்றும் பேர்வழிகள் மீது நடவடிக்கை உண்டா? என்பதையும் அரசு விளக்குமா..? 
 

0 comments:

Post a Comment