Tuesday, February 1, 2011

எகிப்தில் அரசுக்கு எதிராக லட்சக்கணக்கானோர் பேரணி! [இதுவே லட்சகணக்கில் தான் என்றால் அப்ப அண்ணன் கூட்டியது?]


எகிப்தில் அரசுக்கு எதிராக லட்சக்கணக்கானோர் பேரணி!
 [ இதுவே லட்சகணக்கில் தான் என்றால் அப்ப அண்ணன் கூட்டியது? ] 

கெய்ரோ, பிப்.1: எதிர்க்கட்சிகளுடன் பேச்சு நடத்தி அரசியல் தீர்வு காண தயாராக இருப்பதாக அதிபர் ஹோஸ்னி முபாரக் அறிவித்துள்ளார். ஆனால் பதவி விலகுவது ஒன்றே தீர்வு என்று மக்கள் போராடி வருகின்றனர். தலைநகர் கெய்ரோவை முற்றுகையிடும் போராட்டத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டனர். கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கத்தில் மக்கள் திரண்டு அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
பொதுமக்களின் நியாயமான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், மக்கள் மீது ராணுவப் பிரயோகம் செய்யப்படமாட்டாது என்றும் ராணுத்தினர் தெரிவித்துள்ளனர். தனது கட்டுப்பாட்டிலிருந்த ராணுவம் இப்போது மக்கள் பக்கம் திரும்பியுள்ளதால், அதிபர் பதவி விலக வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதனிடையே ஆர்ப்பாட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் பொருட்டு துணை அதிபர் ஓமர் சுலேமான் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார். அரசியல் ரீதியில் கொண்டு வர வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்துமாறு அதிபர் முபாரக் தனக்கு உத்தரவிட்டுளளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து பிரச்னைகளையும் பேசி சுமுகமாக தீர்த்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
வேலை வாய்ப்பின்மை, வறுமை, ஊழல் ஆகியவை குறித்து அரசு முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே தலைநகர் கெய்ரோவின் மையப் பகுதியில் ராணுவத்தினர் அணிவகுத்திருக்க, ஹோஸ்னி முபாரக் பதவி விலகக் கோரும் கோஷங்களை மக்கள் எழுப்பினர். இந்த சதுக்கத்துக்குள் நுழைவதற்கு முன்னதாக பேரணியில் பங்கேற்றவர்களை ராணுவத்தினர் முழுமையாக சோதித்த பின்னரே அனுமதித்தனர். எகிப்து மக்களின் உணர்வுகளை மதித்து, மக்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்ட நடத்தப்படும் இந்தப் பேரணியில், மக்களுக்கு எதிராக ராணுவம் ஒருபோதும் நடந்து கொள்ளாது என்று ராணுவத்தினர் தெரிவித்தனர். இந்த அறிவிப்பை டி.வி. மூலமாகவும் ராணுவம் வெளியிட்டது.
தனக்கு எதிராக மக்கள் திரண்டு போராடும் போராட்டத்தை ராணுவத்தின் துணை கொண்டு முறியடிக்கலாம் என்ற அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் முடிவுக்கு முற்றுப் புள்ளி வைப்பதாக ராணுவத்தினரின் அறிவிப்பு அமைந்துள்ளது.
இதனிடையே உள்துறை அமைச்சர் ஹபீப் அல்-அட்லியை பதவிநீக்கம் செய்த அதிபர், அமைச்சரவையை மாற்றியமைத்து உள்துறை அமைச்சராக மஹ்மூத் வாக்தியை நியமித்தார். இவர் காவல்துறை தலைவராகவும், உளவுப் பிரிவு தலைவராகவும் இருந்தவர். நிதி மற்றும் கலாசாரத்துறை அமைச்சர்களையும் பதவியிலிருந்து நீக்கினார் அதிபர். ஆனால் இந்த நடவடிக்கைகள் எதிர்க்கட்சியினரை சமாதானப்படுத்தப் போதுமானதாக அமையவில்லை.
நன்றி -தின மணி   

0 comments:

Post a Comment