Friday, February 11, 2011

கணிணியுகத்திலும் கற்கால நம்பிக்கையுடன் கர்நாடக முதல்வர்!


கணிணியுகத்திலும் கற்கால நம்பிக்கையுடன் கர்நாடக முதல்வர்!

உலகம் விஞ்ஞானத்தின் உச்சத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்திலும், இந்துத்துவ பாரதீய ஜனதாக் கட்சி மட்டும் இன்னும் அஞ்ஞான நம்பிக்கையில் ஆணி அடித்தது போல் அசைக்கமுடியாத உறுதியுடன் இருக்கிறது.

மாந்த்ரீகம் என்ற பெயரில் வயிறுவளர்க்கும் போலிச்சாமியார்கள், எலுமிச்சம் பழத்தில் குங்குமத்தை தடவி சில  வித்தைகளை காட்டி பாமரர்களை நம்பவைத்த காலம் உண்டு. ஆனால்  இன்று அத்தகைய மூட நம்பிக்கைகள் ஓரளவு குறைந்துள்ள நிலையில், ஒரு மாநிலத்தின்  பிரதான முதல்வர் அந்த நம்பிக்கையில் ஊறியுள்ளது வேதனைக்குரியதாகும்.

ஆட்சிக்கு வந்த நாள் முதலாக ஆட்டம்  கண்டு கொண்டிருக்கும் தனது நாற்காலியை  நிலைப்படுத்துவதற்கே தனது முழு நேரத்தையும்  செலவிடும் ஒரே முதல்வர் எடியூரப்பா என்றால் அது மிகையில்லை. எதிர்கட்சிகளை விட அவரது கட்சியினரால்தான் அவர் அடிக்கடி  நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தும் நிலைக்கு தள்ளப்படுவதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதற்கிடையில் அவ்வப்போது மாந்த்ரீக  கதையளக்கவும்  அவர் தவறுவதில்லை.

சில மாதங்களுக்கு  முன், ''நான்  ரத்தம் கக்கி சாகவேண்டும் என்று  நினைத்து எதிர்கட்சியினர் கழுதை போன்ற  விலங்குகளை பலிகொடுத்து எனக்கு எதிராக  மாந்த்ரீகம் செய்து உள்ளனர்'' என்று கூறி பரபரப்பை உண்டாக்கினார். இப்போது  இப்போது கவர்னருடன் உச்சகட்ட மோதல் அரசியல் நடத்திவரும் எடியூரப்பா,  தனக்கு மாந்த்ரீகம் செய்து கொல்ல சதி நடக்கிறது கூறியதுதான்  இந்த ஆண்டின் மிகச்சிறந்த ஜோக்காகும்.

ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ''மாந்திரீகம் வைத்து என்னை கொன்று விட வேண்டும் என்ற சதி நடக்கிறது. நான் எனது வீட்டில் இருந்த விதானசவுதாவுக்கும், விதானசவுதாவில் இருந்து வீட்டுக்கும் சென்று திரும்பி வருவேன் என்ற நம்பிக்கை இல்லை. அந்த அளவுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டு உள்ளது. என்னை உயிரோடு கொல்ல முயற்சிக்கிறார்கள். நான் கடவுள் மீது பாரத்தை போட்டு எனது வாழ்க்கையை நடத்தி வருகிறேன். இதுபோன்ற சதிகளுக்கு நான் பயப்பட மாட்டேன். புறமுதுகு காட்டி ஓடிவிட மாட்டேன் என்று பேசியுள்ளார்.

இவர் சொல்வது  போல் அவ்வாறு  மாந்த்ரீகம் செய்திருந்தால் கூட  இவர் ரத்தம் கக்கி செத்துவிடுவாரா என்ன?  சில மந்திரங்களை ஓதிவிட்டால், ஒருவனை சாக வைக்கமுடியும் என்றால், நாட்டில் துப்பாக்கி, அரிவாள், கம்பு போன்ற ஆயுதங்களை  வைத்து எவரும் யாரையும் கொல்ல வேண்டியதில்லையே?  எடியூரப்பா சொல்வது போன்று ஒருவனை கொல்வது சாத்தியம்  என்றால், அவனவன் இருந்த இடத்தில் இருந்தே மாந்த்ரீகம்  மூலம் சில மந்திரங்களை ஓதி எதிரியை காலி செய்துவிடுவானே? இவ்வாறு செய்யும்போது காவல்துறையாலும் கண்டு பிடிக்க  முடியாதே? அவ்வளவு ஏன்? எடியூரப்பாவின் பா.ஜ.க மத்தில் ஆட்சியில் இருந்தபோது தானே  கார்கில் யுத்தம் நடந்தது. அப்போது ராணுவத்தை பயன்படுத்தாமல் இது போன்ற மாந்த்ரீகத்தை  செய்து, எதிரிகளை ரத்தம் கக்கி சாக வைத்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை?

ஆக, இதுபோன்ற அறிவுக்கு எட்டாத, அறிவியலும் ஒத்துக் கொள்ளாத ஒரு மூடநம்பிக்கையை நம்பும் முதல்வர் இனியாவது 'பகுத்தறிவை' பயன்படுத்தட்டும்.
-முகவையார்.
 
 

0 comments:

Post a Comment