Friday, September 3, 2010

புதுவையில் முஸ்லிம்களுக்கு 2 சதவீத உள் ஒதுக்கீடு!



இந்திய தேச விடுதலைக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் அயராது பாடுப்பட்ட இந்திய முஸ்லிம்கள் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கி உள்ளனர். அதை ராஜேந்திர சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன்கள் உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது.

அதன் அடிப்படையில் தமிழக முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத தனி இடஓதுக்கீடு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அதன் அருகிலுள்ள புதுவை யூனியன் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தது. இதற்காக நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநில நிர்வாகிகளுடன் தலைமை நிர்வாகிகளும் அம்மாநில முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவ்வாறே தமுமுக உள்ளிட்ட சமுதாய அமைப்புகளும் கடும் முயற்சியினை மேற் கொண்டன.

அதன் விளைவாக அங்குள்ள முஸ்லிம்கள் மற்றும் மீனவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளித்து துணைநிலை ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அமைச்சரவையின் முடிவை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் பிற்பட்டோருக்கு வழங்கப்படும் 13 சதவீத இடஒதுக்கீட்டில் பிற்படுத்தபட்ட இஸ்லாமியர்களுக்கு என்று தனியாக 2 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்பட்டோருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில் மீனவர்களுக்கு 2 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக-பொருளாதார திட்டங்களின் கீழ் பயன்களைப் பெறுவதற்காக அவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இந்த அரசாணைகள் அரசு இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. புதுச்சேரி அரசின் சிறப்புச் செயலர் தேவ நீதிதாஸ் இத்தகவலை பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவித்தார்.

அல்ஹம்துலில்லாஹ். கண்ணியமிக்க இந்த ரமதானில் முஸ்லிம்கள் மகிழ்ச்சி கொள்ளதக்க நிகழ்வுகள் தமிழகத்திலும் அதை ஒட்டியுள்ள புதுவையிலும் நடைபெற்றுள்ளது.

தகவல் : நூருல் அமீன், நாச்சியார் கோவில்

0 comments:

Post a Comment