Tuesday, September 28, 2010

மீண்டும் பாபர் மசூதி தீர்ப்பு! சகோதர யுத்தங்கள் தேவையில்லை! -



எல்லாச் சாலைகளும் ரோமாபுரியை நோக்கி என்கிற சொற்றொடர் மிகவும் பிரபலமானது. ஆனால் ஒட்டுமொத்த இந்திய மக்களின் கவனம் அனைத்தும் மீண்டும் அலஹாபாத் தீர்ப்பை நோக்கித் திரும்பியுள்ளது.
60 ஆண்டுகாலமாக இந்திய மக்களை ஆட்டி வைத்துக் கொண் டிருந்த தலையாய பிரச்சனையின் தீர்வுக்கான நேரம் நெருங்கியுள்ளது. அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கான தேதியை அறிவித்தவுடன் இந்தியா முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
பாபர் மஸ்ஜித் நிலம் வக்ஃபு சொத்து தான் என்பதை நிரூபிக்கும்படியான ஆதாரங்கள் முஸ்லிம்கள் தரப்புக்கு வலுவைச் சேர்த்துள்ள படியால் தீர்ப்பு எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்கிறோம் என்று முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மத நம்பிக்கை என்ற சொல்லைத் தவிர வேறு ஆதாரங்கள் ஏதும் இல்லாதபடியால் இந்துத்துவாவினர் தீர்ப்பை எதிர்நோக்கும் திறனற்று திசை திருப்பும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

பாபர் மஸ்ஜித் இடம் குறித்து புதிய சட்டம் இயற்றி அந்த இடத்தை ஒப்படைக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. தீர்ப்பை தாமதப்படுத்தும் வழக்கை நிராகரித்த உயர்நீதிமன்றம், உச்ச நீதி மன்றத்தின் உத்தரவை அடுத்து செப்டம்பர் 30 அன்று கண்டிப்பாக தீர்ப்பு வெளிவரும் என்கிற அறிவிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம் என்று இந்துத்துவா அமைப்புகள் உறுதியாக அறிவிக்காத காரணத்தினால் தீர்ப்பு வெளியாகும் தினத்தில் கலவரம் நிகழ்த்தப்படுமோ? என்கிற அச்சம் மக்கள் மனத்தில் எழுந்துள்ளது.

மக்களின் அச்சத்தைத் தீர்க்கும் வகையில், சட்டத்தின் முன் அனைவரும் சமம். தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்று அறிவிக்க வேண்டிய மத்திய அரசு அதைவிடுத்து இந்துத்துவாவினரை கெஞ்ச ஆரம்பித்துள்ளது.
வேண்டுகோள் என்ற தலைப்பில் மத்திய அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று அறிவிப்பதற்கு பதிலாக உயர்நீதிமன்றத் தீர்ப்பு பாதகமாக வரும் பட்சத்தில் உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது. ஆகவே வேறு நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விளம்பரத்தை படித்த மக்கள் இது வேண்டுகோளா? அல்லது சரணாகதியா? என்று அறிய முடியாமல் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர். மத்திய அரசின் சாடையை புரிந்து கொண்ட அத்வானியும், தீர்ப்பு வந்தவுடன் ஒரு தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று தனது கட்சியின் நிலையை எடுத்துரைத்து விட்டார்.
தீர்ப்புக்குப் பிறகு மேல்முறையீடு என்ற பெயரில் வழக்கை மேலும் ஒரு ஐம்பதாண்டுகளுக்கு இழுத்துச் செல்வது மற்றும் பாபர் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்காமல் காலதாமதம் செய்வது என்ற புதிய திட்டத்தை சங்பரிவாரங்கள் வடிவமைத்து விட்டதையே அத்வானியின் அறிவிப்பு காட்டுகிறது.
தீர்ப்பை ஒரு சாக்காக வைத்து சங்பரிவாரத்தினர் கலவரத்தை உருவாக்கி முஸ்லிம்களின் உயிருக்கும், உடமைக்கும் சேதம் விளைவிக்கும் வாய்ப்புகளும் இருக்கத்தான் செய்கிற்ன.
சங்பரிவாரத்தின் சூழ்ச்சி மற்றும் சதிவலைகளிலிருந்து காத்துக் கொள்வதற்கான முன்னேற்பாடுகள் ஏதும் இஸ்லாமிய சமுதாயத்தி னரால் மேற்கொள்ளப்பட்டதாக எங்கேயும் காண முடியவில்லை

இந்நிலையில், மேலும் ஒரு சோதனையாக தமிழகத்தில் முஸ்லிம் சமுதாயத்திற்குள் நிலவும் மோதல்கள் சங்பரிவாரத்திற்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது வேதனைக்குரியது.
சில நாட்களுக்கு முன்னால் திருவாரூர் மாவட்டம் திருவிடைச்சேரி கிராமத்தில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல், துப்பாக்கிச் சூடு வரை சென்று இரண்டு பேர் கொலை செய்யப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள்ளாக பெரியண்ணன் அவர்கள் தன்னை கொலை செய்ய சதி ஆலோசனை நடந்துள்ளதாக தன்னுடைய சொந்த இணையதளத்தில் தெரிவித்திருப்பது பேரதிர்ச்சி ஏற்படுத்துகிறது.

திருவிடைச்சேரி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்ந்து பேசப்படுவது தனக்கும், தனது இயக்கத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது என்பதனால் - தன்னைக் கொல்ல சதி என்று கூறி அனுதாபம் தேட முயற்சிக்கிறார் என்றும், திருவிடைச்சேரி சம்பவத்திலிருந்து மக்களை மறக்கடிக்க திசை திருப்பும் செயல் இது என்றும் ஒரு சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இருந்தபோதிலும், பெரியண்ணனை கொலை செய்ய ஒரு சிலர் முடிவு எடுத்துள்ளனர் என்கிற செய்தி உண்மையாயிருக்கும் பட்சத்தில் அது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். இம்மாதிரியான நிகழ்வுகள் சமுதாயத்தின் முன்னேற்றத்தை பின்னோக்கித்தான் கொண்டு செல்லும்.
முஸ்லிம்களின் உயிருக்கும் - உடமைக்கும் கேடு செய்ய சங்பரிவாரத்தினர் முஸ்தீபுகளை செய்து வரும் வேளையில், சமுதாயத்திற்குள்ளே முட்டல் மோதல்கள் நிகழ்த்துவதாக செய்திகள் வெளிவருவது வேதனையான ஒன்று.

சிறைவாசிகள் விடுதலை குறித்து தமிழகம் முழுவதும் ஆதரவு கருத்துக்கள் பெருகி வரும் நிலையில், இது போன்ற செய்திகள் பரவலாக பரப்பப்படுமானால் அது அவர்களின் விடுதலைக்கு பாதிப்பைத்தான் ஏற்படுத்தும்.
சகோதரர்களிடையே நடக்கும் சண்டைகள், அதனால் ஏற்படும் இழப்புக்கள் சமுதாயத்திற்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏகத்துவ இயக்கங்கள் நடத்திய இடஒதுக்கீட்டுப் போராட்டங்களில் பெருமளவில் சுன்னத் ஜமாஅத்தினர் கலந்து கொண்டதால் கிடைத்த வெற்றியையும், அனைத்து இயக்கங்களும் போராடியதால் கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தில் திருத்தம் செய்ய தமிழக அரசு இறங்கி வந்ததையும் சிந்தனையில் செலுத்துங்கள்.
சமுதாய சகோதரர்களுக்கிடையே ஏற்படும் சண்டைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் நம்மை இறை நிராகரிப்பில் கொண்டு போய்ச் சேர்க்கும் என்பதை நெஞ்சத்தில் பதிய வையுங்கள்.

ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும், அவனை கொலை செய்வது இறை நிராகரிப்பாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி)

உங்களுக்கு என்ன நேரப் போகிறதோ! (அல்லது) அந்தோ பரிதாபமே! கவனமாக இருங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்வதன் மூலம் இறை மறுப்பாளர்க(ளைப் போன்றவர்க)ளாய் நீங்கள் ஆகிவிடாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இஸ்லாமிய மக்கள் பெரும் பாவச் செயலான கொலையின் பக்கம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய போதனைகளை சிர மேற்கொள்ளுங்கள். சகோதர யுத்தங்கள் நரகிற்கு கொண்டு செல்லும் காரணிகளாக மாறும் என்கிற உண்மையை உணருங்கள்.
சகோதர யுத்தம் சாய்ப்போம், ஒற்றுமைப் பாலம் அமைப்போம், எதிரிகளின் செயல் அறவே ஒழிய நித்தம் உழைப்போம்.

நன்றி - மக்கள் ரிப்போர்ட்

==========

0 comments:

Post a Comment