Saturday, September 18, 2010

'பஞ்ச் பட்டிக்காட்டான்' [5 ]


தமிழக வருகையின் போது, கர்நாடக முதல்வர் எடியூரப்பா; கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. எனவே அடுத்த 5 தினங்களுக்குள் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும்.
பட்டிக்காட்டான்; அதாவது காவிரி நீர் பத்தி சும்மா பேசிக்கிட்டு இருக்கிறதுனால எந்த புண்ணியமும் இல்ல; மழை பெய்தால் நாங்களே திறந்து விடுவோம்னு சொல்றீங்க!

மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன்; இந்தியாவில்தான் பெரும்பான்மையான இந்துக்கள், சிறுபான்மையினரால் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
பட்டிக்காட்டான்; பாதிப்பை ஏற்படுத்துபவர்களே பாதிக்கப்படுவதாக கூறுவதும், அதுவும் ஒரு மூத்த வழக்கறிஞர் அவர்களே இவ்வாறு கூறும் நிலையும் இந்தியாவில் தான் உள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்; வருகிற தேர்தலில் மக்கள் ஏற்றுக் கொள்ளும் கூட்டணி அமைப்பேன்.
பட்டிக்காட்டான்; இவ்வளவு நாளாக 'கடவுளோடும்- மக்களோடும் கூட்டணி' அப்பிடீன்னுதான சொல்லிக்கிட்டு இருந்தீங்க. இந்த தடவை என்ன கடவுளை காணோம்; கூட்டணி பேரம் படியலையா..?

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்; இந்த தேர்தலுக்குள் தமிழகத்தில் 'டாஸ்மாக்' கடைகளை மூடவேண்டும். அப்படி மூடாவிட்டால், 1 லட்சம், 2 லட்சம் பெண்களை திரட்டி சிறை செல்லவும் தயங்கமாட்டோம். தேர்தலுக்குள் ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளையும் அடித்து நொறுக்குவோம்.
பட்டிகாட்டான்; ஏற்கனவே இப்படித்தான், குறிப்பிட்ட நாட்களுக்குள் வணிக நிறுவனங்கள் தங்களின் பெயர்பலகைகளை தமிழில் மாற்றவேண்டும், 'இல்லையேல்..? என்று சில அமைப்புகளோடு சேர்ந்து மிரட்டுனீங்க! என்ன ஆச்சு..? எல்லாக் கடைகளும் தமிழில் பெயர் பலகைகளை மாத்திவிட்டாதாக்கும்..! அது மாதிரித்தான் இதுவும்; இதெல்லாம் மருத்துவரின் அரசியல் மிரட்டல் என்று மக்களுக்கு தெரியாதாக்கும்!!

நோன்புக் கஞ்சி குடிக்கும் போது விஜயகாந்த் சொன்னது; முஸ்லிம்கள் அன்பு நிறைந்தவர்கள்.
பட்டிக்காட்டான்; சூடா நோன்புக் கஞ்சி குடிக்கும்போது அன்பு நெறஞ்சவங்களா தெரியிற முஸ்லிம்கள்; சூட்டிங்கில் மட்டும் உங்க கண்ணுக்கு 'தீவிரவாதிகளாக' தெரிவது எப்படி..?

முன்னாள் மத்திய கண்காணிப்புத் துறை ஆணையர் பிரதியுஷ் சின்கா; ஊழல் செய்தவர்கள், மற்றவர்களுக்கு அது தெரியவந்தால் வெட்கப்படும் காலம் முன்பு இருந்தது; இப்போது அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவதில்லை.
பட்டிக்காட்டான்; 'முழுக்க நனைஞ்ச பின்னாடி முக்காடு எதுக்கு..? அப்டீன்ற மாதிரி; சுருட்டுறதே பொதுவாழ்க்கைன்னு சிலர் முடிவு செய்த பிறகு வெட்கத்தையெல்லாம் பார்த்தா வேலைக்கு ஆகுமா..?

0 comments:

Post a Comment