Wednesday, January 19, 2011

யார் தவ்ஹிதுவாதி?


யார் தவ்ஹிதுவாதி?
 
அண்மையில் சில நண்பர்களோடு சகஜமாக பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது சொந்த விசயங்கள், பொது விசயங்கள் என்று பலவாறு பேசிக்கொண்டோம்.
 
அப்போது ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். என்னப்பா அகமது இப்ப எந்த அமைப்பிலப்பா இருக்கே என்றார். நான் எப்போதும் ஒரே அமைப்புதான்ப்பா நபிய்யுனா இப்றாகீம் (அலை) அமைப்புப்பா என்றேன். அது சரிப்பா - அதிலேதானே எல்லாரும் இருக்கோம் என்றார். (இதைக் கேட்டவுடன் எனக்கு வெட்கமாக போய்விட்டது இதுபோல நமக்கு பரந்த சிந்தனை இல்லாமல் போய்விட்டதே என்று) இப்ப தமிழகத்தில் இருக்கிற அமைப்புகளில் நீ எதில் இருக்கிற என்றார். சுன்னத் ஜமாஅத்துக்கு என்று தனித் தனி அமைப்பு எங்கே இருக்கு? அந்த அந்த மஹல்லா ஜமாஅத்து தானே என்றேன். அப்படியா? என்றவர் அரசியல் அமைப்புக்களில் நீ முஸ்லிம் லீக்கா, தமுமுக வா என்றார்? எதிலும் இல்லைப்பா அப்போதுள்ள சூழ்நிலைக்கேற்றவாறு ஓட்டு போடுறது மத்தப்படி எந்த அமைப்பிலும் உறுப்பினர் இல்லைப்பா என்று என்னிடம் கேட்ட அந்த நண்பருக்கு பதில் சொல்லிட்டு முடிச்சுட்டேன்.
 
அவர் பக்கத்தில் இருந்த இன்னொரு நண்பரிடம் இது போலவே கேக்க ஆரம்பிச்சார். நீ எந்த அமைப்பிலப்பா இருக்கே என்றார் அதுக்கு அந்த நண்பர் நான் தவ்ஹிது அமைப்புலே இருக்கேன் என்றார். தவ்ஹிது அமைப்பு என்றால் பாக்கர் அணியா? இல்ல பி.ஜே அணியா? என்று கேட்டார். உடனே அவர் கோபமாகி என்ன கிறுக்குத்தனமாக கேக்குற தவ்ஹிதுவாதி என்றால் பி.ஜே அணியில் இருக்கிறவன்தான் தவ்ஹிதுவாதி என்றதும் பக்கத்தில் இருக்கிற மற்றொரு நண்பருக்கு கோபம் வந்துருச்சு. அவர் ஜாக் ஜமாஅத்துக்காரர். அப்ப நாங்க யாரு நாங்களும் தவ்ஹிதுவாதிதான் என்று அந்த ஜாக் நண்பர் சொல்ல ஆரம்பிச்சார்.
 
இதைப்பார்த்து அதிர்ந்துபோன கேள்விக் கேட்ட நண்பர் சொன்னார் நாமெல்லாம் முஸ்லிம்கள் நண்பர்கள் நாம் எல்லாருமே தவ்ஹிதுவாதிகள்தான் இதுக்கு ஏன் நாம் சண்டை போட்டுக்கனும். விடுங்கப்பா என்று சொல்லிட்டு தொடர்ந்தார் நான் எந்த அடிப்படையில் கேட்டேன் என்றால் முஸ்லிம் லீக் உடைந்தப்போ நீ சமது அணியா? லத்தீபு அணியா என்று கேட்பார்கள் அந்த அடிப்படையில்தான்ப்பா நீ பாக்கர் அணியா? இல்ல பி.ஜே அணியா? என்று கேட்டேன் என்று சொல்லிமுடித்தார்.
 
எனவே அன்பு சகோதரர்களே, சுன்னத் ஜமாஅத்வாதிகளாக இருக்கட்டும், சுன்னத் ஜமாஅத் எதிர் அமைப்புக்களிலே இதஜ, ததஜ, ஜாக் போன்ற அமைப்பாகட்டும் நாம் எல்லாருமே தவ்ஹிதுவாதிகள்தான். எனவே விமர்சனங்கள் தொடரட்டும். அது அறிவுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்கட்டும். அடுத்தவர் மனம் புண்படும்படியாக இருக்கவேண்டாம். சுன்னத் ஜமாஅத்காரர்களைப் பார்த்து ஷிர்க்வாதி என்றோ, தவ்ஹிதுவாதிகளிலே இவன் தக்லிதுவாதி என்றோ, மட்டமான பட்டபெயர்கள் சூட்டுவதோ, பாலியல் குற்றச்சாட்டு சுமத்துவதோ, தகாத வார்த்தைகளை பயன் படுத்துவதோ வேண்டாமே.
 
யார் தவ்ஹிதுவாதி யார் நடிப்பு தவ்ஹிதுவாதி என்று அல்லாஹ்வின் சன்னிதானத்திலே நிச்சயமாக தெரியவரும். சுன்னத் ஜமாஅத்காரர்கள் தவ்ஹிதுவாதியா? இல்லை ஷிர்க்வாதியா என்றும் தெரியவரும். தவ்ஹிதுவாதிகள் என்று தன்னைதானே சொல்லிக்கொள்வோர் மற்றவர்களைப் பார்த்து ஷிர்க்வாதி என்றால் அதுவும் அல்லாஹ்வின் சன்னிதானத்திலே நிச்சயமாக தெரியவரும். எதுவுமே விடுபடாது.
 
தகாத குற்றச்சாட்டுக்களை சுமத்தியவர்களும், சுமத்தப்பட்டவர்களும், வக்காலத்துவாங்கியவர்களும், படிக்க நாக்கு கூசும் மெயில்கள் (பெற்றோர் வைத்த பெயரை மறைத்து) அனுப்பியவர்களும் அல்லாஹ்வின் சன்னிதானத்திலே நிச்சயமாக தப்பமாட்டார்கள்.
 
பள்ளம் உள்ள இடத்தில் தண்ணீர் நிற்கத்தான் செய்யும், உப்பை தின்றவன் தண்ணீரை குடித்துதான் ஆகனும்.
 
எனவே பணங்கள் லட்சங்களை தாண்டினாலும் அல்லாஹ் மீதுள்ள அட்சத்தை விட்டுவிட வேண்டாம்.
 
இவன் ஷிர்க்வாதி என்று நாம் யாரையும் சொல்லிவிடவேண்டாம். நாம் எல்லாரையும் முஸ்லிம்களாக பார்ப்போம். ஷிர்க்வாதியா? தவ்ஹிதுவாதியா? என்று அல்லாஹ் பார்த்துக்கொள்வான். உங்களால் ஷிர்க்வாதி - கப்ற் வணங்கி என்று குறிப்பிட்டுசொல்லப்படுவோர் தவ்ஹிதுவாதியாக இருந்தால் அல்லாஹ்வின் தண்டணை இறுக்கமாக இருக்கும்.
 
ஆகவே நாம் எல்லாரையும் முஸ்லிம்களாக பார்ப்போம். 
 
உடல்களின் மணங்களை மனிதனால் அறிய முடியும். மனிதனின் மனங்களை அல்லாஹ் மட்டுமே அறிய முடியும். யாருடைய உரிமையை பயன்படுத்தி வருகிறீர்கள்? இப்போது சொல்லுங்கள் யார் தவ்ஹிதுவாதி? யார் ஷிர்க்வாதி?       
 
வஸ்ஸலாம்
தஞ்சை அகமது   

0 comments:

Post a Comment