Friday, December 10, 2010

இறைவழியில் தியாகப்பயணம்.[பாகம்2]


இறைவழியில் தியாகப்பயணம்.[பாகம்2] ...[மறுபதிப்பு]

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
முதல் பாகத்தில் சத்திய சகாபாக்கள் அபிசீணியாநோக்கி தியாகப்பயணம் மேற்கொண்டதை அறிந்தோம். இந்த கட்டுரையில் இஸ்லாமிய வரலாற்றில் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்ப்படுத்திய மதீனா ஹிஜ்ரத் பயணம் பற்றி சில முக்கிய விசயங்களை அறிந்துகொள்வோம்.

ஹபஷாவிற்கு ஹிஜ்ரா செய்த முஸ்லிம்களைத் திரும்பக் கொண்டு வருவதில் தோல்வியுற்ற இணைவைப்பவர்கள் கடுங்கோபத்தாலும் குரோதத்தாலும் பொங்கி எழுந்தனர். மக்காவில் மீதமிருந்த முஸ்லிம்களின் மீது தங்களது அட்யூழியங்களைக் கட்டவிழ்த்து விட்டதுடன் நபி (ஸல்) அவர்களுக்கும் கெடுதிகள் பல செய்யத் துவங்கினர். அவர்களின் செயல்பாடுகளைக் கவனிக்கும்போது அவர்களின் எண்ணப்படி இக்குழப்பத்திற்கு வேராக இருந்த நபி (ஸல்) அவர்களை ஒழித்துக் கட்டவே அவர்கள் முயற்சி செய்தனர் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.


ஹிஜ்ரா செய்தவர்கள் போக மக்காவில் முஸ்லிம்கள் மிகக் குறைவாகவே எஞ்சி இருந்தார்கள். அவர்களில் சிலர் சரியான பக்க பலத்துடனும் கோத்திர பாதுகாப்புடனும் இருந்தார்கள். மற்றும் சில முஸ்லிம்கள் சிலரின் அடைக்கலத்திலும் பாதுகாப்பிலும் இருந்தனர். ஆனால், எவரும் தங்களது இஸ்லாமை வெளிப்படுத்தாமல் மறைத்தும், வம்பர்களின் கண்களிலிருந்து முடிந்த அளவு மறைந்தும் ஒதுங்கியும் வாழ்ந்தனர். இவர்கள் எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்த போதிலும் நிராகரிப்பவர்களின் தொந்தரவிலிருந்து முழுமையாகத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியவில்லை.

இந்நிலையில்தான் அல்லாஹ்,
فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ وَأَعْرِضْ عَنِ الْمُشْرِكِينَ
ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக!15:94என்ற வசனத்தை இறக்கியவுடன்
நபியவர்கள் தன்னுடைய பிரச்சாரத்தை வெளிப்படையாக செய்ய ஆரம்பித்தவுடன் நபியவர்களுக்கும்,ஏனைய சகாபாக்களுக்கும் பல்வேறு இன்னல்களை மக்கத்து குறைசிகள் தந்தார்கள் ஒருகட்டத்தில் குறைசிகளின் தொந்தரவால் அபூபக்கர்[ரலி]அவர்கள் ஹபஷாவை நோக்கி ஹிஜ்ரத் செய்ய தீர்மானித்தார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்;

எனக்கு விவரம் தெரிந்த நாள் முதலாகவே என் பெற்றோர் முஸ்லிம்களாக இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் பகலின் இரண்டு ஓரங்களான காலையிலும் மாலையிலும் எங்களிடம் வராமல் ஒரு நாளும் கழிந்தது இல்லை. முஸ்லிம்கள் (எதிரிகளின் கொடுமைகளால்) சோதனைக் குள்ளாக்கப்பட்டபோது, அபூ பக்ர்(ரலி) தாயகம் துறந்து அபிஸினியாவை நோக்கி சென்றார்கள். 'பர்குல் ஃம்மாத்' எனும் இடத்தை அவர்கள் அடைந்தபோது அப்பகுதியின் தலைவர் இப்னு தம்னா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் அவர்களிடம், 'எங்கே செல்கிறீர்?' என்று கேட்டார். அபூ பக்ர்(ரலி) 'என் சமுதாயத்தவர் என்னை வெளியேற்றிவிட்டனர்; எனவே பூமியில் பயணம் (செய்து வேறுபகுதிக்குச்) சென்று என் இறைவனை வணங்கப் போகிறேன்! என்று கூறினார்கள். அதற்கு இப்னு தம்னா, 'உம்மைப் போன்றவர் வெளியேறவும் கூடாது' வெளியேற்றப்படவும் கூடாது; வெளியேற்றப்படவும்கூடாது! ஏனெனில் நீர் ஏழைகளுக்காக உழைக்கிறீர்; உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்; பிறருக்காகச் சிரமங்களைத் தாங்கிக் கொள்கிறீர்; விருத்தினர்களை உபசரிக்கிறீர். எனவே, நான் உமக்கு அடைக்கலம் தருகிறேன்! எனவே, திரும்பி உம்முடைய ஊருக்குச் சென்று இறைவனை வணங்குவீராக!' எனக் கூறினார்.
[ஹதீஸ் சுருக்கம்,நூல்;புஹாரி,எண் 2297 ]

இதற்கிடையில் நபியவர்கள் தாயிப் போன்ற சுற்றுப்புறங்களில் தன்னுடைய அழைப்புப்பணியை விரிவுபடுத்தியதோடு,ஹஜ்ஜுடைய காலம் நெருங்கியபோது மக்கள் அனைவரும் பல திசைகளிலிருந்து ஹஜ்ஜு கடமையை நிறைவேற்றுவதற்காக மக்காவிற்கு வந்த வண்ணமிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு கோத்திரத்திற்கும் சென்று அவர்களுக்கு இஸ்லாமை அறிமுகப்படுத்தி, அதன்பக்கம் அழைப்புக் கொடுத்தார்கள்.

நபித்துவத்தின் நான்காவது ஆண்டிலிருந்து இப்படித்தான் அம்மக்களை இஸ்லாமின் பக்கம் அழைத்து வந்தார்கள். ஆனால், இந்த பத்தாவது ஆண்டு மேலும் ஒரு கோரிக்கையையும் அவர்களுக்கு முன் வைத்தார்கள். அதாவது, நான் அல்லாஹ்வின் மார்க்கத்தை எடுத்து வைப்பதற்கு எனக்கு இடம் கொடுத்து உதவி செய்து எதிரிகளிடமிருந்து எனக்கு பாதுகாப்பு அளியுங்கள் என்று அம்மக்களிடம் கேட்டுக்கொண்டார்கள்.

அடுத்து நபி (ஸல்) மினாவில் அகபா என்ற இடத்திற்கு சென்றபோது அங்கு சில ஆண்களின் பேச்சுக் குரல் கேட்டவுடன் அவர்களிடம் சென்று பேச விரும்பினார்கள். அவர்கள் கஸ்ரஜ் கிளையாரைச் சேர்ந்த மதீனாவில் உள்ள ஆறு இளைஞர்களாவர்.
அவர்கள்,
1) அஸ்அது இப்னு ஜுராரா (நஜ்ஜார் குடும்பம்)
2) அவ்ஃப் இப்னு ஹாரிஸ் (நஜ்ஜார் குடும்பம்)
3) ராஃபிஃ இப்னு மாலிக் (ஜுரைக் குடும்பம்)
4) குத்பா இப்னு ஆமிர் இப்னு ஹதீதா (ஸலமா குடும்பம்)
5) உக்பா இப்னு ஆமிர் இப்னு நாபி (ஹராம் இப்னு கஅப் குடும்பம்)
6) ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஆப் (உபைத் இப்னு கனம் குடும்பம்)

மதீனாவாசிகளுக்கும் யூதர்களுக்கும் சண்டை மூளும்போது 'கடைசி காலத்தில் ஒரு நபி வருவார். அவருடன் சேர்ந்து நாங்கள் உங்களைக் கடுமையாகக் கொலை செய்வோம்" என்று அந்த யூதர்கள் மதீனாவாசிகளைப் பார்த்துக் கூறுவார்கள். இவ்வாறு யூதர்கள் கூறுவதை பலமுறை மதீனாவாசிகள் கேட்டிருந்தனர். எனவே, இப்போது நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்தியபோது அவர்களை அறிந்து கொள்வது மதீனாவாசிகளுக்கு மிக எளிதாக இருந்தது. (ஜாதுல் மஆது, இப்னு ஹிஷாம்)

இவர்கள் மதீனாவுக்கு இஸ்லாமிய அழைப்பை எடுத்துச் சென்றார்கள். அங்கு மதீனாவாசிகள் ஒவ்வொருவரின் வீட்டிலும் நபி (ஸல்) அவர்கள் பற்றியே பேசப்பட்டது. (இப்னு ஹிஷாம்)

இதை அடுத்து நபித்துவத்தின் பனிரெண்டாம் ஆண்டு ஹஜ் காலத்தில் (கி.பி. 621 ஜூலையில்) மதீனாவிலிருந்து நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாமிய ஒப்பந்தம் (பைஆ) செய்வதற்காக 15 நபர்கள் வந்திருந்தனர். முந்தைய ஆண்டு வந்த ஆறு நபர்களில் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஆபைத் தவிர மற்ற ஐந்து பேர்களும், அவர்களுடன் புதிதாக ஏழு நபர்களும் இச்சமயம் வந்திருந்தனர். அந்த ஏழு நபர்களில் முந்திய ஐந்து பேர் கஸ்ரஜ் கிளையையும் பிந்திய இருவர் அவ்ஸ் கிளையையும் சேர்ந்தவர்கள்.
1) முஆத் இப்னு ஹாரிஸ் (ரழி) - நஜ்ஜார் குடும்பம்.
2) தக்வான் இப்னு அப்துல் கைஸ் (ரழி) - ஜுரைக் குடும்பம்.
3) உபாதா இப்னு ஸாமித் (ரழி) - கன்ம் குடும்பம்.
4) யஜீது இப்னு ஸஃலபா (ரழி) -கன்ம் குடும்ப நண்பர்களில் ஒருவர்.
5) அப்பாஸ் இப்னு உபாதா இப்னு நழ்லா (ரழி) - ஸாலிம் குடும்பம்.
6) அபுல் ஹைஸம் இப்னு தய்ம்ஹான் (ரழி) -அப்துல் அஷ்ஹல் குடும்பம்.
7) உவைம் இப்னு ஸாம்தா (ரழி) - அம்ர் இப்னு அவ்ஃப் குடும்பம்.
இவர்கள் அனைவரும் மினாவில் அகபா என்ற இடத்திற்கு அருகில் நபி (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்தார்கள். (இப்னு ஹிஷாம்)

நபியவர்களிடம் பைஅத் செய்த மேற்கண்டவர்களோடு நபி (ஸல்) தனது முதல் இஸ்லாமிய அழைப்பாளரை மதீனாவிற்கு அனுப்பினார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரப்புவதற்கும் மார்க்க ஞானங்களை கற்றுக் கொடுப்பதற்காகவும் இந்த அழைப்பாளர் அனுப்பப்பட்டார். இப்பணிக்காக முதலாவதாக இஸ்லாமை ஏற்றுக் கொண்டவர்களில் ஒருவரான முஸ்அப் இப்னு உமைர் (ரழி) என்ற வாலிபரை நபி (ஸல்) தேர்ந்தெடுத்தார்கள். இந்தசகாபிதான் முதன்முதலில் மதினாவில் கால்வைத்த முஹாஜிர் ஆவார்.

இப்படி நபியவர்களின் அசுரவளர்ச்சியை பொறுக்கமுடியாத குறைஷிகள் உச்சகட்டமாக நபியவர்களை கொலைசெய்வது என தீர்மானித்தார்கள்.இதற்காக அபூஜஹ்ல் உள்ளிட்ட குறைஷிகளின் முக்கியப்பிரமுகர்களின் ஆலோசனைக்கூட்டத்தில் அபூஜஹ்ல்,

'அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னிடம் ஒரு யோசனை இருக்கின்றது. அது உங்களுக்குத் தோன்றியிருக்காது" என்று அபூஜஹ்ல் கூற, 'அபுல் ஹிகமே! அது என்ன யோசனை" என்றனர் மக்கள். அதற்கு அபூஜஹ்ல் 'நாம் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் நல்ல வீரமிக்க, குடும்பத்தில் சிறந்த, ஒரு வாலிபரைத் தேர்வு செய்து, ஒவ்வொரு வாலிபனுக்கும் மிகக் கூர்மையான வாள் ஒன்றையும் கொடுப்போம். அவர்கள் அனைவருமாக சேர்ந்து அவரை ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து கொன்றுவிடட்டும். அவர் இறந்துவிட்டால் நாம் நிம்மதி பெருமூச்சு விடலாம். கொலை செய்தவர்கள் பல கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவரது உறவினர்களான அப்து மனாஃப் கிளையினர் பழிக்கு யாரையும் கொல்ல முடியாது. முழு அரபு சமுதாயத்தினரையும் பகைத்துக் கொண்டு அப்து மனாஃப் கிளையினர் நம்மீது போர் தொடுக்க முடியாது. எனவே, கொலைக்குப் பகரமாக அபராதத் தொகையை நிர்பந்தமாக ஏற்றுக் கொள்வார்கள். நாமும் அவர்களுக்கு அந்த அபராதத்தைக் கொடுத்து விடலாம்" என்று அரக்கன் அபூஜஹ்ல் கூறிமுடித்தான்.
நஜ்து தேச அயோக்கியக் கிழவன் (அவன்தான் இப்லீஸ்) இதைக் கேட்டுவிட்டு 'ஆஹா! இதல்லவா யோசனை! இதுதான் சரியான யோசனை! இதைத் தவிர வேறெதுவும் சரியான யோசனையல்ல" என்று கூறினான். (இப்னு ஹிஷாம்)


மதீனா ஹிஜ்ரத்திற்கான அல்லாஹ்வின் அனுமதி;


குறைஷிகளின் சதித்திட்டத்தை நபி (ஸல்) அவர்களிடம் அறிவிப்பதற்காக அல்லாஹ்வின் புறத்திலிருந்து வானவர் ஜிப்ரீல் இறங்கி வந்தார். 'நீங்கள் ஹிஜ்ரா செய்ய அல்லாஹ் அனுமதி கொடுத்து விட்டான். அதற்குரிய நேரத்தையும் நிர்ணயம் செய்துள்ளான். குறைஷிகளின் இத்திட்டத்தை முறியடிப்பதற்குரிய வழியையும் தெளிவுபடுத்தி இருக்கின்றான். எனவே, இன்று இரவு நீங்கள் வழக்கமாக தூங்கும் விரிப்பில் தூங்க வேண்டாம்" என்று வானவர் ஜிப்ரீல் கூறினார். (இப்னு ஹிஷாம்)


அபூபக்கர்[ரலி]அவர்களுடன் நபிகளார் ஆலோசனை;


ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்; நபி(ஸல்) அவர்கள் (மக்காவில் இருந்த காலத்தில்) காலையிலோ மாலையிலோ என் தந்தை அபூ பக்ர்(ரலி) அவர்களின் வீட்டிற்கு வராமல் இருந்த நாள்கள் மிகக் குறைவாகவே இருக்கும்! மதீனாவிற்கு (ஹிஜ்ரத் செய்து) புறப்பட நபி(ஸல்) அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டபோது, நண்பகலில் நபி(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. நபி(ஸல்) அவர்கள் வந்திருக்கும் விஷயம் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் கூறப்பட்டது. அபூ பக்ர்(ரலி) 'புதிதாக ஏதோ பிரச்சினை ஏற்பட்டிருப்பதால் தான், இந்நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் நம்மிடம் வந்திருக்கிறார்கள்!" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்ததும், 'உங்களுடன் இருப்பவர்களை வெளியேற்றுங்கள்!" என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அஸ்மா, ஆயிஷா ஆகிய என்னுடைய இரண்டு புதல்வியர் மட்டுமே உள்ளனர்!" என்று அபூ பக்ர்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(மதீனாவிற்குப்) புறப்பட (ஹிஜ்ரத் செய்ய) எனக்கு அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது உமக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! '(தாங்கள் புறப்படும் (ஹிஜ்ரத்தின்)போது நானும் தங்களுடன் வர விரும்புகிறேன்!" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் என்னுடன் வருதை நானும் விரும்புகிறேன்!" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் என்னுடன் வருவதை நானும் விரும்புகிறேன்!" என்றார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நான் பயணத்திற்காகத் தயார்படுத்தி வைத்திருக்கும் இரண்டு ஒட்டகங்கள் என்னிடம் உள்ளன் அவற்றில் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்!' எனக் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அதை நான் விலைக்கு வாங்கிக் கொள்கிறேன்!" என்றார்கள்.
நூல்;புஹாரி,எண் 2138


தனது தோழருடன் தியாகப்பயணத்தை தொடங்கிவிட்ட நபி[ஸல்];


ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள்; (மக்காவைத் துறந்து, ஹிஜ்ரத் செய்து மதீனாவுக்குச் சென்ற போது) நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் பனூ அப்து இப்னு அதீ குலத்தைச் சேர்ந்த ஒருவரை (வழிகாட்டியாகக்) கூலிக்கு அமர்த்தினார்கள். அவர் தேர்ந்த வழிகாட்டியாக இருந்தார். அம்மனிதர் ஆஸ்பின் வாயிலின் குடும்பத்தாரிடம் உடன்படிக்கை செய்திருந்தார். மேலும், அவர் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களின் மார்க்கத்தில் இருந்தார். நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் அவரை நம்பித் தம் ஒட்டகங்களை அவரிடம் ஒப்படைத்து, மூன்று நாள்கள் கழித்து ஸவ்ர் குகையில் வந்து சேரும்படி கூறினார்கள். அம்மனிதர் மூன்றாம் நாள் காலையில் ஒட்டகங்களுடன் அவர்களிடம் வந்தார். உடனே, நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் (மதீனாவை நோக்கிப்) புறப்பட்டார்கள். அவர்களுடன் ஆமிர் இப்னு ஃபுஹைரா என்பாரும் சேர்ந்து கொண்டார். பனூதீல் கூட்டத்தைச் சேர்ந்த அந்த வழிகாட்டி அம்மூவரையும் மக்காவிற்குக் கீழே கடற்கரை வழியாக அழைத்துச் சென்றார்.
நூல்;புஹாரி,எண் 2263


பயனத்திபோது நபியவர்கள் பட்ட கஷ்டங்களும், மதினாவில் நடந்த முக்கிய நிகழ்வுகளும் ...
தொடரும்....
இடுகையிட்டது முகவை எஸ்.அப்பாஸ் நேரம் 3:25 pm 0 கருத்துரைகள்
லேபிள்கள்:
பயணிகளின்தீர்ப்பு;

0 comments:

Post a Comment