Saturday, December 11, 2010

முஸ்லிம்களை நோக்கிய மதவெறிப் பேச்சு; வருண்காந்தி மீது வழக்கு தொடர உ.பி. அரசு அனுமதி


கடந்த பாராளுமன்ற தேர்தலில், உத்தர பிரதேச மாநிலம், பிலிபிட் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர், வருண்காந்தி. அப்போது தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய வருண்காந்தி, 'கையை வெட்டுவேன்; தலையை வெட்டுவேன்' என்றெல்லாம் பேசியதையடுத்து அவர் மீது, மத உணர்வை தூண்டியதாக புகார் கூறப்பட்டது.


இதையடுத்து தமிழகத்தில் எந்த ஒரு முஸ்லிம் அமைப்பும் இதை கண்டு கொல்லாத நிலையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சென்னை நினைவரங்கம் முன்பு ஒரு மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தியது நினைவிருக்கக்கூடும்!
பின்னர் அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கொத்வாலி போலீஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் வருண்காந்தி எம்.பி. மீது கோர்ட்டில் வழக்கு தொடருவதற்கு உ.பி. மாநில அரசு அனுமதித்து உள்ளது. மாநில உள்துறை செயலாளர் தீபக்குமார் இந்த தகவலை வெளியிட்டார். மத உணர்வை தூண்டும் விதத்தில் பேசியது உள்பட பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

வருண் காந்தி மீது வழக்கு தொடர அனுமதித்துள்ள உ.பி. அரசின் நோக்கம் மத துவேஷத்தை தடுப்பதுதான் எனில், இனிமேல் வருண்காந்தி பாணியில் வன்முறைப் பேச்சை எவரும் கையில் எடுக்காவண்ணம் இருக்கவேண்டுமெனில், வெறுமனே வழக்குத் தொடுப்பது மட்டும் தீர்வாகாது. தொடர்ந்து வழக்கை நடத்தி சம்மந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதே தீர்வாகும்.

ஆனால் பெரும்பாலும் வழக்குகள் பரபரப்பாக பதிவுசெய்யப்படுகிறது. குண்டர் தடுப்பு சட்டம் கூட பாய்கிறது. சில வழக்குகளில் கைது நாடகமும் நடைபெறுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் சில நாட்களிலேயே ஜாமீனில் வெளிவருகிறார்கள். பின்னர் அந்த வழக்கை தொடுத்தவர்களும் மறந்து விடுவார்கள். மக்களும் மறந்து விடுவார்கள். மீண்டும் அந்த குற்றவாளிகள் மற்றொரு இடத்தில அதே மாதிரி பேசுவதையும், செயல்படுவதையும் வாடிக்கையாக கொள்வதைப் பார்க்கிறோம்.

இந்த நிலை மாறவேண்டும். தவறு செய்தவர்கள் தாட்சண்யமின்றி தண்டிக்கப்படவேண்டும். அதுதான் குற்றங்கள் குறைவதற்கு வழி வகுக்கும். அரசு செய்யுமா?

0 comments:

Post a Comment