Saturday, March 26, 2011

தனிநபர் ஜமாஅத்தின் ஆதரவு; திமுக அவசர சட்டம் பிறப்பித்து விட்டதா?


''அதிமுக வின் துரோகச் செயலுக்கு தக்க பாடம் புகட்டுவதற்காகவும் திமுக தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீடு குறித்து சொல்லி இருக்கிற காரணத்துக்காகவும் அதிமுகவுக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் வாக்களிப்பது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலப் பொதுக்குழு தீர்மானிக்கின்றது என்று அறிவித்துள்ளது ததஜ.
 
தனிநபர் ஜமாஅத்தின் இந்த வாதம் சரியா என்று பார்ப்போம்.
 
அதிமுக தலைவி ஜெயலலிதா தேர்தல்  அறிக்கையில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு தொடர்பாக எதுவும் கூறவில்லை  என்பது உண்மையே. ஆனால் தனது தேர்தல் பிரச்சாரத்தில்,
சிறுபான்மையினருக்குத் தனி இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மூலம் எனது ஆட்சிக் காலத்தில்தான் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. ஆனால், 2006-ம் ஆண்டில் கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, இஸ்லாமியர்கள் இடம் பெறாத வகையில் இந்தச் சட்டம் திருத்தப்பட்டது. மேலும், கருணாநிதி தன்னிச்சையாக இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை அறிவித்தார். என்றாலும், இதுவும் முறையாக அமல்படுத்தப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு விகிதம் உயர்த்தி அறிவிக்கப்படும். மேலும், அது முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதும் கண்காணிக்கப்படும். இஸ்லாமியர்களின் இதரக் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளார். எனவே முஸ்லிம்களின் இடஒதுக்கீடு தொடர்பாக ஜெயலலிதா ஒன்றும் கூறாமல் துரோகம் செய்துவிட்டார் என தனிநபர் ஜமாஅத்  கூறுவது பொய்யாகும்.
 
அதே நேரத்தில் இந்த வார்த்தைஜால வித்தகர்கள் ஒன்று சொல்லலாம். தேர்தல் பிரச்சாரத்தில் சொல்வதெல்லாம் நம்பமுடியுமா என்று. உண்மைதான். தேர்தல் பிரச்சாரத்தில் சொல்வதை எப்படி நம்பமுடியாதோ, அதே போன்று தேர்தல் அறிக்கையில்  சொல்வதையும் நம்பிவிட முடியாது. ஏனெனில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்ன காங்கிரஸ் தொடர்ந்து அல்வா கொடுக்கவில்லையா? இதை தனிநபர் ஜமாஅத் மறுக்குமா? எனவே ஜெயலலிதாவை எதிர்ப்போம் என்பதற்கு இவர்கள் வைக்கும் வாதம் அடிபட்டுவிட்டது. அடுத்து கருணாநிதி தேர்தல் அறிக்கையில் இட  ஒதுக்கீடு குறித்து சொல்லியிருக்கிறார் எனவே ஆதரிக்கிறோம் என்கிறார்கள். கருணாநிதி தேர்தல்  அறிக்கையில்  முஸ்லிம்களின் இடஒதுகீட்டை அதிகரிப்பேன் என்று ஜெயலலிதா போல் உறுதியாக சொல்லியுள்ளாரா  என்றால் இல்லவே இல்லை. இதோ கருணாநிதியின் அறிவிப்பு;
 
''இஸ்லாமிய மக்களுக்கு வழங்கப்படும் மூன்றரை சதவிகித இட ஒதுக்கீட்டினை மேலும் உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.என்கிறார்.
 
ஜெயலலிதாவோ உயர்த்தப்படும் என்று உறுதியாக சொல்கிறார். ஆனால் கருணாநிதியோ பரிசீலிப்போம் என்று அதாவது 'பாப்போம்' என்று சாதாரணமாக சொல்கிறார். இந்த இருவரின் வார்த்தையில் எது வலிமையானது என்பது அறிவுடையோர் அறிந்து கொள்ளலாம். தேர்தல் அறிக்கையில் சொல்லாதது தான் ஜெயலலிதாவை எதிர்ப்பதற்கு காரணம் எனில், தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு வாக்குறுதியாக சொன்னது அனைத்தும் அரசியல்கட்சிகளால்  நிறைவேற்றப் பட்ட ஆதாரத்தை தனிநபர் ஜமாஅத் வைக்கவேண்டும்.
 
அடுத்து கருணாநிதியை ஆதரிக்க வேண்டுமெனில், முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை ஐந்து சதவிகிதமாக ஆக்கி அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்பதே நேற்றுவரை தனிநபர் ஜமாஅத்தின் கொள்கையாகும். அவர்களது உணர்வில்[18 ;24 ];
 
''முஸ்லிம்களின் வாக்கு திமுகவுக்கு விழவேண்டுமெனில் முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டை ஐந்து சதவிகிதமாக அதிகரிப்போம் என்று சொன்ன கருணாநிதி, அதற்காக அவசர சட்ட திருத்தத்தை பிறப்பித்திருந்தால் ததஜ திமுகவுக்காக களப்பணியாற்றி  முஸ்லிம்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல்  திமுகபக்கம் கொண்டு வந்திருக்கும். அந்த வாய்ப்பையும் கருணாநிதி நழுவ விட்டு விட்டார். என்று எழுதியிருந்தனர்.
 
அதாவது  கருணாநிதி அவசரசட்டம் பிறப்பித்தால் தான் ஆதரிப்போம் என்று சொன்ன தனிநபர்வாதிகள், கருணாநிதியின் எந்த அவசர சட்டத்தைப்  பார்த்து ஆதரவு நிலை எடுத்தார்கள் என்பது அவர்களுக்கும் அல்லாஹ்வுக்குமே வெளிச்சம். ஒருவேளை தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ள இந்த  காலகட்டத்தில்  அவசரசட்டம் பிறப்பித்தார் என்று சொல்லப் போகிறார்களா?
 
அடுத்து, பொதுக்குழுவில் அவிழ்க்கப்படாத முடிச்சுகள்  பல உள்ளன. திமுகவுக்கு ஆதரவு  என்று தான் சொல்லியுள்ளார்களே தவிர, திமுக கூட்டணிக்கு ஆதரவு என்று சொல்லவில்லை. எனவே,
  • மத்தியில் இட ஒதுக்கீடு விசயத்தில் தொடர்ந்து துரோகமிழைக்கும் காங்கிரஸ் விசயத்தில் இவர்களின் நிலை என்ன?
  • ஜெயலலிதா இரு முஸ்லிம்களை மட்டுமே நிறுத்தியுள்ளார் என முறுக்கிக்கொண்ட இவர்கள், ஒரு முஸ்லிமை கூட நிறுத்தாத பாமக விஷயத்தில் நிலை என்ன?
  • சிறுத்தைகள் மற்றும் இதர கட்சிகள் விசயத்தில் இவர்களின் நிலை என்ன?
  • மமக மற்றும் முஸ்லிம் லீக் கட்சியை ததஜ கணக்கிலேயே எடுப்பது  கிடையாது என்று எழுதிய இவர்கள், முஸ்லிம்லீக் விசயத்தில் எடுக்கும்  நிலை என்ன?
  • முஸ்லிம் லீக்கை கணக்கிலெடுக்க இப்போது இவர்கள் முன் வந்தால் அதே நிலையில் உள்ள மமகவை மட்டும் புறக்கணிப்பது ஏன்? 
ஆக, தனிநபர் ஜமாஅத்தின் முடிவு, வேறு வழியின்றி எடுக்கப்பட்டதாகவும், வலிமையான சமுதாய நலன் புறந்தள்ளப் பட்டதும் உள்ளங்கை நெல்லிக்கனியாக  'சிந்திப்பவர்களுக்கு' புலப்படும்.
 
அல்லாஹ்வே மிக அறிந்தவன். 
 

0 comments:

Post a Comment