Friday, November 5, 2010

காங்கிரசையும் , கருணாநிதியையும் திருப்திபடுத்த வைகோவை கண்டிக்கும் த.த.ஜ.



ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...


ஒரு நாட்டின் அதிபர், அமைச்சர்கள் மற்றும் அரசின் முக்கிய பிரமுகர்கள் அடுத்த நாட்டிற்கு அரசுமுறைப் பயணமாகவோ, அல்லது சிறப்பு விருந்தினராகவோ கலந்து கொள்வது இயல்பாக தொன்று தொட்டு நடந்துவரும் நிகழ்வாகும். அயல்நாட்டு அதிபரோ, அந்நாட்டின் அரசு சார்ந்த முக்கிய பிரமுகரோ நமது நாட்டிற்கு வருகை தருவதை எதிர்க்கவேண்டுமெனில், அதற்கு ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தலாம். கண்டன போஸ்டர்கள் மூலம் நம் எதிர்ப்பை காட்டலாம். வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பை பதிவு செய்யலாம்.

அந்த வகையில் நரமாமிச நரேந்திரமோடி தமிழகம் வந்தபோது, தமுமுக, விடுதலை சிறுத்தைகள் அடங்கிய பாசிச எதிர்ப்பு முன்னணி சார்பாக, மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.[ அப்போது அப்போராட்டத்தில் கலந்து கொள்ளாததோடு, அதுபற்றி அண்ணன் உணர்வில் கிண்டலடித்தது தனி விஷயம்]. மேலும் சமீபத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே, காமென்வெல்த் போட்டியின் இறுதி நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள வருகை தந்தார். அவரது வருகையை கண்டித்து போராட்டம் நடத்தி வைகோ கைதானார். இப்போது ஒபாமாவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரிகள் வரும் 8 ம் தேதி போராட்டம் நடத்தவுள்ளார்கள்.

இதை இங்கே குறிப்பிடுவதற்கு காரணம், ஒபாமாவின் இந்திய வருகையை எதிர்ப்பது ததஜவின் நோக்கம் எனில், இடது சாரிகள் பாணியில் போராட்டம் அறிவித்திருக்க வேண்டும். அல்லது உடனே போராட்டம் நடத்த இது ஒன்றும் அண்ணன் சம்மந்தப்பிரச்சினை இல்லை என்று கருதினால்,ஒபாமாவின் வருகையை எதிர்க்கிறோம் என்று பத்திரிக்கை அறிக்கை வெளியிட்டுவிட்டு பம்மியிருக்க வேண்டும்! ஆனால் இவைகளை விட்டுவிட்டு நேர் மாற்றமாக, ஒபாமாவை வரவேற்க வேண்டும் என்று சொன்னதற்காக வைகோவை கண்டித்து கண்டன போஸ்டர் ஓட்டப்போகிறதாம் அண்ணன் ஜமாஅத்.

எதற்க்காக வைகோவை கண்டித்து போஸ்டர் என்றால், ஒபாமாவை எதிர்த்து இடதுசாரிகள் நடத்தும் நியாமான போராட்டத்தை வைகோ விமர்சித்து அறிக்கை வெளியிட்டாராம். அதனால் வைகோ அமெரிக்க கைக்கூலி ஆகிவிட்டாராம். எனவே ஒபாமாவை வரவேற்றால் முஸ்லிம்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லியாக வேண்டும். அதனால் தான் அமெரிக்காவின் கைக்க்கூலி வைகோவை கண்டிக்கிறோம் என்று நாடெங்கும் சுவரொட்டிகளை தவ்ஹீத் ஜமாஅத் ஒட்டியுள்ளது என்று விளக்கமளிக்கிறார் அண்ணன்.
அண்ணனின் விளக்கத்தில் வைகோவை கண்டித்தாறேயன்றி, ஒபாமாவின் வருகையை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம் என்ற வாசகம் உண்டா? இல்லை. இவர் மட்டுமல்ல இவரது ஜமாஅத்தின் துணைத்தலைவர் விடுத்துள்ள பத்திரிக்கை அறிக்கையிலாவது ஒபாமாவின் இந்திய வருகையை எதிர்க்கிறோம் என்ற வார்த்தை இல்லை. அதை கீழே படியுங்கள்;

''உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும், அதிகமான மக்களால் வெறுக்கப்படுகின்ற நாடாகவும் விளங்குகின்ற அமெரிக்க நாட்டின் அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு இந்த வார இறுதியில் வருகை தருகின்றார். அவரின் வருகையை அறிவுஜீவிகளும், அமைதியையும், மனித நேயத்தையும் நேசிக்கின்ற அனைத்து தரப்பு மக்களும் எதிர்க்கின்றனர். ஏனெனில் இலட்சக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரை ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க கூட்டுப்படைகள் பலி வாங்கியிருக்கின்றன. மேலும் கூடுதல் படைகளை ஆப்கானிஸ்தானத்திற்கு ஒபாமா அனுப்பி வைத்திருக்கிறார். அங்கே தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து தனது ஆதரவை மத்திய கிழக்கின் போக்கிரி நாடான இஸ்ரேலுக்கு வழங்கி பலஸ்தீன மக்களுக்கு எதிராக பெரும் அட்டூழியங்கள் செய்வதற்கு உதவி வருகிறது. ஈரான், சிரியா, லிபியா, வட கொரியா என பல நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து மிரட்டி வருகிறது. போரின் மூலமாக ஈராக்கை நிர்மூலமாக்கி விட்டு இப்போது ஈரானுக்கு எதிராக போர் தொடுக்க தன்னை ஆயத்தப்படுத்தி வருகிறது. அமெரிக்கா என்றால், மனித குலத்தின் முதல் விரோதி என்பது இன்று ஒரு சிறுபிள்ளைக்கும் நன்கு தெரியுமளவிற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் நடந்து கொள்கிறது.
இவ்வாறு உலகின் மிகப்பெரிய அழிவு சக்தியாக இருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிபருக்கு ஆதரவாக அறிக்கை கொடுத்து அவரை முகமலர்ச்சியுடன் வரவேற்கின்ற வைகோவின் நடவடிக்கை அமெரிக்க சி.ஐ.ஏ வின் கைக்கூலியாக வைகோ மாறிவிட்டார் என்ற சந்தேகத்தை உறுதிபடுத்துகிறது. உலகின் பல நாடுகளை தனது அதிகார வெறிக்கு தொடர்ந்து இரையாக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிபர் ஒபாமாவின் வருகையை ஆதரிக்கும் வைகோவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.
இப்படிக்கு
ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
மாநில துணைத் தலைவர்
[நன்றி; டி.என்.டி.ஜே.நெட்]

அவரின் வருகையை அறிவுஜீவிகளும், அமைதியையும், மனித நேயத்தையும் நேசிக்கின்ற அனைத்து தரப்பு மக்களும் எதிர்க்கின்றனர். என்று சொன்ன துணைத்தலைவர், ஒபாமாவின் வருகையை ததஜ எதிர்க்கிறது என்று மட்டும் கூற வசதியாக மறந்துவிட்டார். ஒபாமாவின் வருகையை ஆதரிக்கும் வைகோவையே நாங்கள் கண்டிக்கும் போது அது ஒபாமாவின் வருகையை எதிர்த்தது போன்றுதான் என்று வியாக்கியானம் தரலாம். அப்படியாயின் வார்த்தை இப்படி அமையவேண்டும். அதாவது,
''உலகின் பல நாடுகளை தனது அதிகார வெறிக்கு தொடர்ந்து இரையாக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அதிபர் ஒபாமாவின் வருகையையும், அவரது வருகையை ஆதரிக்கும் வைகோவையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.
என்று இருக்கவேண்டும்
. எனவே ஒபாமாவின் வருகையை எதிர்க்கும் என்னம் இவர்களுக்கு இல்லைவே இல்லை என்பது திண்ணம்.

அடுத்து வைகோவை கண்டிப்பதாவது அறிவுப்பூர்வமானதா என்றால் இல்லை. ஏனெனில், ஒபாமாவின் வருகை எதிர்ப்பதற்கு இடதுசாரிகளுக்கு எப்படி ஜனநாயக உரிமை உள்ளதோ, அதுபோன்று ஒபாமாவை வரவேற்று அறிக்கை விடவும், அவரை புகழவும், அவரது வருகையை எதிர்ப்பவர்களை விமர்சிப்பதற்கும் வைகோவுக்கு ஜனநாயக உரிமை உண்டு. இடதுசாரிகளின் போராட்டத்தை வைகோ விமர்சித்ததையும், அறிவுரை சொன்னதையும் இடதுசாரிகளே கண்டுகொள்ளாதபோது அண்ணன் ஜமாஅத் குதிப்பது ஏன்?

மேலும் வைகோவின் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு விரோதமான வார்த்தைகள் ஏதேனும் கூறினாலாவது அவரை கண்டிக்கலாம்; போஸ்டர் ஓட்டலாம். அவரது அறிக்கையில் முஸ்லிம் விரோத கருத்தை முன்வைத்திருந்தால் இந்நேரம் அண்ணன் ஜமாத்தினர் பட்டியலிட்டிருப்பார்கள். எனவே வைகோவை கண்டிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

எனவே அண்ணன் ஜமாஅத்திற்கு துணிவிருந்தால் ஒபாமாவின் வருகையையும், ஒபாமாவை வரவேற்கும் காங்கிரஸ் அரசையும், வைகோவையும் வன்மையாக எதிர்க்கிறோம் என்று அறிக்கை வெளியிடட்டும். அதைவிட்டுவிட்டு, பீஜே எனும் தனிநபர் மீதான செய்தி வெளியிட்டமைக்காக நக்கீரனை சமுதாயத்திற்கு எதிரானதாக திருப்பி ஒரு நாடகம் ஆடியது போல், சும்மா கிடக்கும் வைகோவையும் சமுதாயத்திற்கு எதிராக திருப்ப அண்ணன் ஜமாஅத் முயல்வது, அண்ணன் ஜமாஅத்திற்கு விளம்பரத்தையும், சமுதாயத்திற்கு பாதிப்பையுமே உண்டாக்கும் என்று நடுநிலையாளர்கள் விளங்கவேண்டும்.

குறிப்பு; வைகோவை கண்டித்து போஸ்டர் ஓட்டுவது அறிவீனமானது என்று நாம் இங்கே கூறியுள்ளதால், நம்மையும் ஒபாமா ஆதரவாளராகவோ, வைகோ ஆதரவாளராகவோ சித்தரிக்க அண்ணன் ஜமாஅத் முயலாமல், கேட்ட கேள்விக்கு அறிவிப்பூர்வமாக பதிலளிக்க முன்வரட்டும். ஏனெனில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போரையும், வைகோவின் புலி ஆதவு நிலைப்பாட்டையும் நாம் அண்ணன் ஜமாஅத்தைவிட கூடுதலாக கடுமையாக எதிர்க்கிறோம் என்றும் இங்கே பதிவு செய்கிறோம்.





--
11/04/2010 09:21:00 AM அன்று இயக்கங்களின் மறுபக்கம். இல் abdul muhaimin ஆல் இடுகையிடப்பட்டது

0 comments:

Post a Comment