Thursday, November 11, 2010

ஏமாற்றமடைந்த ஹஜ் பயணிகள் - யார் காரணம்? மக்கள் ரிப்போர்ட் களத்தொகுப்பு!





இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜை இந்த வருடம் நிறைவேற்றுவோம் என்று ஆவலுடன் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த 2500 ஹஜ் பயணிகள் கடைசி நேரத்தில் ஏமாற்றம் அடைந்திருப்பது இஸ்லாமிய மக்களிடையே வருத்தத்தையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய அளவில் சுமார் பனிரெண்டாயிரம் ஹஜ் பயணிகள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். தமிழக ஹஜ் பயணிகள் பாதிகப்பட்டதற்கு இவர்தான் காரணம் என சென்னை மக்கா பள்ளிவாசல் இமாமான ஷம்சுத்தீன் காசிமியை நோக்கிச் சிலர் குற்றச்சாட்டை எழப்ப... பதறிப்போன காசிமி கடந்த 3ந் தேதி சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விளக்கம் அளித்திருக்கிறார்.

அச்சந்திப்பில், ஹஜ் பயணிகள் ஏமாற் றம் அடைந்ததற்கு காரணங்களைச் சொன்ன காசிமி மத்திய அரசின் நடவடிக்கைகளைக் குற்றம் சுமத்தியதோடு, ""ஏற்கனவே ஹஜ்ஜுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களுக்கே ஒதுக்கீடு என்பதில் மாற்றம் கொண்டு வர வேண்டும் எனப் பேசியது. ஹஜ்ஜுக்கான ஒதுக்கீட்டைப் பெற்று வரும் தனியார் ஹஜ் சர்வீஸ் நிறுவனங்களைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது.

இதனால் தனியார் ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சங்கம் தீபாவளிக்கு மறுநாள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி எங்கள் உரிமையில் எப்படி கை வைக்கலாம் எனப் பதிலடி கொடுத்திருக்கிறது. (இந்த சந்திப்பில் பாதிக்கப்பட்ட சிலரும் மேடையேறி தாங்கள் ஏமாற்றப்பட்டதை சொல் லிப் புலம்பினர்.)

இது தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்த நிலையில், நம்மைத் தொடர்பு கொண்ட தனியார் ஹஜ் நிறுவன அதிபர்கள் சிலர் ஹஜ் பயணிகள் கடைசி நேரத்தில் ஏமாற்றப்பட்டது கவலையளிக்கிறது. இதனால் எங்களைப் போன்று தரமான சர்வீஸ் செய்பவர்களையும் பொதுமக்கள் சந்தேகப்படும் நிலை ஏற்பட்டுள்ளது ""என தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டவர்கள் என்ன நடந்தது என்று விசாரித்து எழுதுங்கள் என்ற கோரிக்கையையும் வைத்தனர்.

பிரச்சினையின் மையப் புள்ளியாக சுழலும் மக்கா மஸ்ஜித் இமாம் ஷம்சுத்தீன் காசிமியை தொடர்பு கொண்டு, ஹஜ் பயணத்தில் என்னதான் நடந்தது என்றோம்.

""இப்படி நடந்ததற்கு மத்திய அரசின் தப்பான அணுகுமுறைதான் காரணம். சவூதி அரசு இந்தியாவிற்கென ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு கோட்டாவை ஒதுக்குகிறது. இது போதுமானது அல்ல, இதற்கு காரணம் சென்ட்ரல் கவர்மெண்ட் உண்மையான மக்கள் தொகை கணக்கை சவூதி அரசுக்கு கொடுப்பதில்லை. இதனால் தேவையான கோட்டாவை சவூதி அரசு தருவதில்லை. பத்து வருஷத்துக்கு முன்பு கொடுத்த கோட்டாவையே கொடுக்கிறது. ஆனால் ஹாஜிகள் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்தபடியே உள்ளது.

சவூதி அரசு தருகிற 1 லட்சத்து 75 ஆயிரம் கோட்டாவில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஹஜ் கமிட்டிக்குப் போக 55 ஆயிரம் கோட்டாவைத்தான் பிரைவேட் ஹஜ் சர்வீசுகளுக்கு ஒதுக்குகிறார்கள்.

இந்த 55 ஆயிரம் கோட்டாவைக் கூட முறையாக ஒதுக்குவதில்லை. அர சியல் பின்னணி உள்ளவர்கள், லஞ்சம் கொடுப்பவர்களுக்கு ஒதுக்கப்படு கிறது. அவர்கள் மிஸ்யூஸ் பண்ணுகிறார்கள். உதாரணமாக மும்பையில் ஒரு ஹஜ் நிறுவனத்துக்கு 600 கோட்டாவை மத்திய அரசு ஒதுக்குகிற தென்றால், அந்த நிறுவனம் 10 ஹாஜிகளைக் கூட அழைத்துச் செல்வ தில்லை. பிளாக்கில் சுமார் 60, 65 ஆயிரம் ரூபாய்க்கு கோட்டாவை விற்று விடுகிறார்கள்.

ஆனால் எங்களை மாதிரி சின்னச் சின்ன சர்வீசுகள் 100 பேர், 200 பேர் என்று சேர்த்து தரமான சர்வீûஸ தருகிறோம். மக்கா, மதினாவில் சிறப் பான ஏற்பாடுகளை செய்து, கோட்டா வேண்டுமென கவர்மென்டை கெஞ்சுகிறோம் எங்களை மாதிரி ஆட்களுக்குத் தருவதில்லை. கேட்டால் பழைய ஆட்களுக்குத்தான் கொடுப்போம் என்கிறது மத்திய அரசு.

ஆனால் 200 கோட்டா, 300 கோட்டா என்று வைத்திருக்கிற தமிழக ஹஜ் நிறுவனங்கள் ஹாஜி களுக்கு ஒழுங்காக சர்வீஸ் கொடுப்பதில்லை. ஏன் கொடுப்ப தில்லை என்றால் நாங்கள் தமி ழகத்தில் எஸ்டாபிலிஷ் ஆகிட் டோம் நமக்கென்று நல்ல பெயர் இருக்கிறது. அதனால் ஆள் சேர்ந்தாலும், சேரலைன்னாலும் வெளியே விற்று விடுவார்கள். ஆனா எங்களை மாதிரி சர்வீஸ் ஆரம்பிச்சு 3 வருஷம், 4 வருஷம் ஆனவர்கள் நூறு சதவிகிதம் குவாலிட்டியான சர்வீஸ் கொடுக்கிறோம். அப்போதுதான் கால் ஊன்ற முடியும் என்று குவாலிட்டியான சர்வீஸ் கொடுக்கிறோம். இந்த வருஷம் பார்த்தீர்கள் என்றால் நிறைய பிரைவேட் சர்வீஸ்கள் ஆள் சேராம கோட்டாவை வெளிú விற்றிருக்கிறார்கள். இதனால் இந்த வருஷம் எங்களோட 28 கம்பெனியைச் சேர்ந்த 2500 ஹாஜிகள் பாதிக்கப் பட்டிருக்காங்க. ஜனவரி மாசமே நாங்கள் புக்கிங் போட்டு விட்டோம். கடைசி நேரத்துல எங்களுக்கான விசாவை மறுத்து விட்டார்கள்.

நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால் பழைய கம்பெனி, புதிய கம்பெனி என்று பங்கு வைத்துக் கொடுக்கனும். இதைத்தான் உயர்நீதி மன்ற நீதிபதி நாக முத்துவும் ஜட்ஜ் மென்ட்டா கொடுத் திருக்கார். அதே மாதிரி சென்னை, போபால், திருவனந்த புரம் உயர்நீதி மன்றங்கள் கூட புது ஆளுங்களுக்கு கோட்டா தரச் சொல்லியிருக்கிறது. ஆனா லைசன்ஸ் ஹோல்டர்களும், கவர்மெண்ட்டும் கைகோர்த்துக் கொண்டு சுப்ரீம் கோர்ட்டில் போய் இதற்கு ஸ்டே வாங்கி விட்டார்கள்'' என்று பேசிக்கொண்டே போன காசிமியை இடைமறித்து, உங்களுடைய டிமாண்ட்தான் என்ன?என்றோம்.

""எங்களுடைய தென்னிந்திய ஹஜ், உம்ரா ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் சார்பாக, கோட்டா சிஸ்டத்தையே எடுத்துவிட வேண்டும். இதனால் அநியாயம் நடக்கிறது. இதை எடுத்துட்டு இந்த தேதிக்குள் யார் பாஸ்போர்ட்டை சப்மிட் பண்ணுகிறார்களோ அவர்களுக்குத்தான் விசா என்ற நடைமுறை கொண்டு வரவேண்டும் என்று கவர்மெண்ட்டுக்கு பிரஷர் தரப் போகிறோம். அந்த தேதிக்கு பிறகு வருகிறவர்களுக்கு அனுமதி தரக்கூடாது. கோட்டா சிஸ்டம் இருப்பதினால் கடைசி வரைக்கும் விசா கிடைத்து விடும் என்று நம்பி ஏமாறும் அசிங்கமான நிலை இருக்குது''. என்றவரிடம்,

நீங்கள் ஏமாற்றி விட்டதாக குற்றச்சாஙட்டு எழுகிறதே? என்றோம்.

நாங்கள் யாரையும் 5 பைசா ஏமாற்றவில்லை. ஹன்ட்ரட் பர்சன்ட் மும்பையில் இருந்து கொண்டு முயற்சி பண்ணினோம். எஸ்.எம். கிருஷ்னா வரைக்கும் பிரச்சினையை கொண்டுபோனோம். ஹாஜிகளிடம் வாங்கியதில் ஒரு பைசா கூட குறைக்காமல் திருப்பிக் கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். இந்த வகையில் என்னுடைய 100 ஹாஜிகளிடம் இதுவரை (நாம் பேட்டியெடுத்த 5ந் தேதி வரை) 658 ஹாஜிகளுக்கு சுமார் ஓன்னேகால் கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்து விட்டேன் வேண்டுமானல் அவர்களது போன் நம்பர் தருகிறேன் கேட்டுப் பாருங்கள்'' என்று தன் மீதான குற்றாச்சாட்டுகளை மறுத்தார் ஷம்சுத்தீன் காசிமி.

தனியார் ஹஜ் நிறுவனங்கள் மீதான ஷம்சுத்தீன் காசிமியின் விமர்சனம் குறித்து அந்த தரப்பு என்ன சொல்கிறது என்பதை அறிய, தமிழ்நாடு ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சங்கத் தலைவரும் தீன் ஹஜ் சர்வீஸின் நிறுவனருமான அஹமது தம்பியிடம் பேசினோம்.

""தம்பி ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்குங்க, ஜுன் மாதம் மத்திய அரசாங்கம் அப்ளிகேஷன் வாங்கியது. செப்டம்பர் மாதத்தில் கோட்டாவை இஷ்யூ பண்ணியது. இவர்கள் ஜனவரி மாதமே புக்கிங் பண்ணிட்டோம் என்று சொல்கிறார்கள். எந்த அடிப்படையில் புக்கிங் போட்டார்கள்.
ஜுன் மாதம் மத்திய அரசு அப்ளிகேஷன்ஸ் வாங்கும் போது தெளிவாக வெப் சைட்டில் போட்டிருக்கிறது. இன்றைக்கு கூட எடுத்துப் பார்க்கலாம் எந்த கம்பெனிகளுக்கெல்லாம் 2009ல் மத்திய அரசு கோட்டாவை இஷ்யூ பண்ணியதோ அவர்களுக்கு மட்டும்தான் 2010ம் வருட ஹஜ்ஜுக்கு மனு செய்ய முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இதை பிரைவேட் நிறுவனங்கள் அறிவிக்கவில்லை. இந்த நிலைமையில் இப்பொழுது மத்திய அரசை குறை சொல்பவர்களுக்கு ஜுன் மாதமே தங்களுக்கு கோட்டா இல்லை என்பது நன்றாகவே தெரியும். அப்படியிருக்கும்போது எந்த அடிப்படையை வைத்து இவர்கள் ஹாஜிகளை புக் பண்ணினார்கள்? ஆக, தங்களுக்கு கோட்டா இல்லை என்று தெரிந்த பின்னர் ஹாஜிகளிடம் வாங்கிய பணத்தை அப்பொழுதே திருப்பித் தந்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஹாஜிகள் பயணத்திற்கு தயாராகி விட்ட நிலையில் விசா கிடைக்கவில்லை என்று சொன்னால் அது எந்த விதத்தில் நியாயம்? எந்த விதமான உத்திரவாதமும் இல்லாமல் இவர்கள் ஹாஜிகளை சேர்த்தது முதல் தவறு. ஜுன் மாதம் மத்திய அரசின் அறிவிப்பை தெரிந்து கொண்ட பின்பும் கடைசி நேரம் வரை ஹாஜிகளை அலை கழித்தது இரண்டாவது தவறு'' என்று நிறுத்தியவரிடம்,

""தனியார் நிறுவனங்களுக்கான கோட்டாவில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்ற கருத்தை ஏற்கிறீர்களா? எனக் கேள்வியெழுப்பினோம்''

""தனியார் நிறுவனங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் உரிமையை தடை செய்ய இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இது ஜனநாயக நாடு. அவர்களுக்கும் உரிமை இருக்கிறது. அரசாங்கத்திடம் கேட்கட்டுமே "அடுத்தவருக்கு கட் பண்ணி எனக்குக் கொடு' என்று கேட்பதற்கு என்ன உரிமை இருக்கிறது'' என்று கோபத்தை வெளிப்படுத்திய அஹமது தம்பியிடம்,

புதுக் கம்பெனிகளுக்கும் வாய்ப்பு தருவதில் என்ன பிரச்சினை?' என இடைமறித்தோம்.

""அதை அரசாங்கத்திடம் கேட்கட்டும். கடந்த சில வருடங்களாக சவூதி அரசாங்கம் ஐந்தாயிரம், பத்தாயிரம் என்று இந்தியாவுக்கான கோட்டாவை அதிகப்படுத்தி வந்திருக்கிறது. அந்த கோட்டாவை இதுபோன்ற புதுக் கம்பெனிகளுக்கு பிரித்துக் கொடுக்க அரசங்கத்திடம் சொல்லி வருகிறோம். ஆனால் மத்திய அரசு ஹஜ் கமிட்டிக்காக அதை எடுத்துக்கொள்கிறது.
கடந்த 2008 வரைக்கும் 1 லட்சத்து 20 ஆயிரம் கோட்டாவுல 75 ஆயிரம் ஹஜ் கமிட்டிக்கும் 45 ஆயிரம் கோட்டா பிரைவேட் ஹஜ் சர்வீசுக்கும் இருந்தது. இப்பொழுது 1 லட்சத்து 70 ஆயிரம் கோட்டா ஆகிவிட்டது. இப்படி சவூதி அரசு அதிகப்படுத்திதை அப்படியே ஹஜ் கமிட்டிக்கு ஒதுக்கிவிட்டு தனியார் நிறுவனங்களுக்கு அதே 45 ஆயிரம் கோட்டாவைதான் தருகிறது மத்திய அரசு.

ஆனால் 2009ல் புதுக் கம்பெனிகள் கேஸ் போட்டதால தனியார் நிறுவனங்களுக்கான கோட்டாவில் 30 சதவிகிதம் கட் பண்ணி 600 புதுக் கம்பெனிகளுக்கு கொடுத்தது. அதே சமயம் 2010ல புதுக் கம்பெனிகளுக்கு மறுத்து விட்டது மத்திய அரசு. இப்படி மத்திய அரசு இந்த வருடம் புதுக் கம்பெனிகளுக்கு இல்லை என்று மறுத்து விட்ட பின், எங்களுக்கு கோட்டா கிடைக்கவில்லை என்று சொல்வது தவறு. ஆலிம்களாக இருப்பவர்கள் இப்படி தவறான தகவல் தரக்கூடாது. அப்ளிகேஷனே அரசாங்கம் வாங்காதபோது, எப்படி பரிசீலனை செய்யும்? எப்படி கோட்டா ஒதுக்கும்? என்றைக்கு அரசுத் தரப்பிலிருந்து கோட்டா ஒதுக்குவதாக உறுதி கொடுக்கப் படுகிறதோ அன்றைக்குத்தான் இவர்கள் புக்கிங் எடுக்க வேண்டும்''

என்றவர் தொடர்ந்து, ""எங்களிடம் ஹாஜிகள் சேருவதில்லை அதனால் நாங்கள் சப் ஏஜென்டுகளிடம் கோட்டாவை விற்று விடுகிறோம் என்ற விமர்சனமும் செய்கிறார்கள்.

இதில் உண்மையில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை 50 கோட்டா வாங்குற ஹஜ் நிறுவனமாக இருந்தாலும், 200 கோட்டா வாங்குற நிறுவனமாக இருந்தாலும் கோட்டாவை விட அதிகமான ஹாஜிகளே வருகிறார்கள். ஆனால் சப் ஏஜென்ட்டாக இருக்குற இவர்கள், லைசன்ஸ் உள்ள ஹஜ் நிறுவனம் சொல்ற தொகையைவிட குறைவாக புக்கிங் போட்டுக் கொண்டு, எங்களிடம் இத்தனை ஹாஜிகள் இருக்கிறார்கள் என்று லைசன்ஸ் உள்ள நிறுவனங்களிடம் இவர்கள்தான் பேரம் பேசுகிறார்கள். இந்த கமிஷன்பேஸ்டு பேரத்தை தடுக்க எங்கள் சங்கம் சார்பாக, எங்களோட 28 உறுப்பினர்களுக்கும் கோட்டாவை வெளியாட்களுக்கு விற்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியிருக்கிறோம். இருந்தாலும் பொதுமக்கள் லைசன்ஸ் உள்ள நிறுவனங்கள் மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்வதுதான் சிறந்தது'' என்று விளக்கம் அளித்தார் அஹமது தம்பி.

இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவரும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் தலைவருமான பிரசிடென்ட் அபுபக்கரிடம் இப்பிரச்சினையைக் கொண்டு சென்ற நாம், ஹாஜிகள் ஏமாற்றப்படாமல் இருக்க ஹஜ் கமிட்டி என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது? இது போன்ற சந்தர்ப்பங்களில் ஹஜ் கமிட்டி ஒதுங்கி நிற்பதாக விமர்சனம் வருகிறதே எனக் கேட்டோம்.

""இது போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க மத்திய அரசு தெள்ளத் தெளிவாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்களுக்கு தூர்தர்ஷன் மூலமாக வும், பத்திரிகைகள் மூலமாகவும், போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள். அரசு உரிமம் பெற்ற பிரைவேட் டூர் அண்டு டிராவல்ஸ்களை மட்டுமே அணுகுங்கள்.

மத்திய அரசின் கீழ் உள்ள ஹஜ் கமிட்டி மூலம் ஒன்னேகால் லட்சத்தில் கிடைக்காதவர்கள், உரிமம் பெற்ற தனியார் ஹஜ் நிறுவனங்களை அணுகலாம். அணுகி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 45 ஆயிரம் கோட்டாவை பயன்படுத்தி ஹஜ்ஜை மேற்கொள்லலாம். மற்றவர்களிடம் செல்ல வேண்டாம். ஹாஜிகள் ஏமாற்றப்பட்டால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். என்று அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மக்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். அதே சமயம் இந்தப் பிரச்சினையை மத்திய அரசின் கவனத்திற்கு கண்டிப்பாக எடுத்துச் செல்கிறேன். பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம்'' என்றார் அபு.

ஆண்டு தோறும் ஹாஜிகள் சென்னைக்கு வரவழைக்கப்படு வதும், கடைசி நேரத்தில் விசா கிடைக்கவில்லை என்று கூறப்பட்டு அலை கழிக்கப்படுவதும், ஹாஜிகள் மன உளைச்சலுக்கு ஆளாவதும் தொடர்ந்து கொண்டிருப்பது கவலைக்குரிய விஷயம். இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டிய மத்திய அரசும், அதன் தமிழக பிரதிநிதியான தமிழ்நாடு ஹஜ் கமிட்டியும் கண்டும் காணாமல் இருப்பதும் ஆண்டுதோறும் சொல்லி வைத்தாற்போல் இது போன்ற சம்பவங்களை ஹாஜிகள் சந்திக்க நேரிடுகிறது.

மத்திய அரசும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டியும் விலகி நிற்காமல் முறையான நெறிமுறைகளை வகுக்த்து அதனை கண்காணித்து கண்டிப்புடன் நிறைவேற்றாத வரை ஹாஜிகளின் புலம்பல்களுக்கு முடிவில்லை.
- ஃபைஸல்

0 comments:

Post a Comment