Thursday, November 11, 2010

ஜார்ஜ் புஷ் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும்!



இந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதிகள் விமர்சனத்திற்கு உள்ளாகும் வாரம் போலிருக்கிறது. இந்நாள் ஜனாதிபதி மக்கள் படுகொலையைப் பற்றி ஒன்றுமே சொல்லாததால் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதியோ தான் செய்த படுகொலையை மறைமுகமாக ஒத்துக் கொண்டதால் உலக மக்களின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

கால் நூற்றாண்டுகளுக்கு முன் மத்திய பிரதேசம் போபாலில் அமைந்துள்ள யூனியன் கார்பைடு ஆலையில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்வர்கள் கொல்லப்பட்டார்கள். 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் குற்றுயிரும் குலையுருமாக மாறிப் போனார்கள்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான இழப்பீட்டுத் தொகை இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்த பின்பும் இன்னும் சென்று சேரவில்லை.
போபால் விஷவாயு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சன் அமெரிக்காவில் பாதுகாப்பாக இருக்கிறார். அவரை விசாரணைக்காக இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கச் சட்டங்கள் தடையாக இருக்கின்றன.

முதலாளியால் பல்லாயிரக்கணக்கான இந்திய மக்கள் மாண்ட போதும், அதற்கான இழப்பீடுகளைக் கூட தர அந்த கல்நெஞ்சுக்காரன் மறுத்து வரும் நிலையில் கொஞ்சம் கூட மனசாட்சியின்றி அடுத்த வியாபார ஒப்பந்தங்களை போட தொழிலதிபர்களோடு இந்தியா வந்துள்ளார் அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா?

மனசாட்சியே இல்லாத காரணத்தால் தான் தன்னுடைய சுற்றுப் பயணத்தில் பாரக் ஒபாமா போபாலைப் பற்றி மறந்தும் கூட பேசவில்லை. இந்திய ஆட்சியாளர்களும் அமெரிக்க அதிபரிடம் வாரன் ஆண்டர்சனை ஒப்படைக்கும்படி வற்புறுத்தவும் இல்லை, வலியுறுத்தவும் இல்லை. இந்தியாவை ஆள்பவர்கள் சொரணையின்றி அமெரிக்க அடிமைகளாக மாறிப் போன பின்பு அமெரிக்க ஜனாதிபதியை நொந்து என்ன பயன்?

இந்நாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா நிலையாவது ஓரளவு பரவாயில்லை. முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷோ புத்தகம் எழுதுகிறேன் பேர்வழி என்று கிளம்பி உலகம் முழுமையிலிருந்து கிளம்பியுள்ள கண்டனக் கணைகளால் நொந்து நூடுல்ஸôகியிருக்கிறார்.

1990ஆம் ஆண்டு தன்னுடைய எண்ணெய் வளத்தை குவைத் நாடு சூறையாடியதாகக் கூறிய ஈராக் அதன் மீது போர் தொடுத்து அதனைத் தன் வசமாக்கிக் கொண்டது.
குவைத்தை விடுவித்த பிறகும் அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரணமாக ஐ.நா. சபை ஈராக் மீது பொருளாதாரத் தடை விதித்தது. பொருளாதாரத் தடை காரணமாக நாட்டில் பஞ்சமும் பசியும் தலை விரித்தாடியது.

ஊட்டச் சத்து மற்றும் மருத்துவப் பொருட்கள் தட்டுப்பாடுகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் மரணத்தைத் தழுவிய போதும், இராக் மக்கள் மீது கருணை காட்டாமல் அமெரிக்க அந்நாட்டின் மீது விஷத்தையே கக்கியது.

இராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் குற்றஞ் சாட்டியது. பலமுறை ஐநாவின் ஆய்வாளர்கள் சோதனையிட்ட போதும், அதற்கான ஆதாரங்கள் கிடைக்காத நிலையிலும் தனது குற்றச்சாட்டை வாபஸ் பெறாதது மட்டுமல்லாமல் பொருளாதாரத் தடைகளை கடுமையாக்கியது.

இத்தனை அநியாயங்கள் தொடர்ந்த போதும் திருப்தியடையாத அமெரிக்கா இராக் மீது படையெடுத்து அதனை கைப்பற்றியது. சதாமைப் பிடித்து தூக்கிலேற்றியது.
சதாமை தூக்கிலிட்ட பிறகும் அமெரிக்காவின் அட்டூழியங்கள் இராக்கில் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன. இராக்கை வெற்றி கொண்டால்தான் பெரிய ஹீரோவாக மதிக்கப்படுவோம் என்று புஷ் கனவு கண்டார். ஆனால் இராக்கில் அமெரிக்கப் படைகள் நிகழ்த்திய அநியாயங்கள் உலக மக்கள் மத்தியில் புஷ்ஷுக்கு அவப் பெயரையே தேடித் தந்தது. புஷ்ஷின் பதவி பறிபோனது.

பதவியிலிருந்து ஓய்வு பெறும் அரசியல் தலைவர்கள் தங்களது சுயசரிதைகளை அல்லது அனுபவங்களை எழுதி புத்தகங்களாக வெளியிடுவது வாடிக்கையான ஒன்றுதான்.
ஜார்ஜ் புஷ்ஷும் தனது அனுபவங்களை டெசிஷன் பாயிண்ட் என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். அந்தப் புத்தகம் அந்த வாரம் வெளியிடப்படவுள்ளது.

அந்த நூலில் புஷ் எழுதிய சில விஷயங்களை நியூயார்க் டைம்ஸ், ராய்ட்டர்ஸ் போன்ற செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. முன்னாள் இராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுசேன் பேரழிவு ஆயுதங்களைக் குவித்து வைத்திருப்பதாக அமெரிக்காவின் பல புலனாய்வு அறிக்கைகள் தவறாக தெரிவித்ததாகவும், இராக் போரில் தன்னால் பல தவறுகள் இழைக்கப்பட்டிருப்பதாகவும் ஒத்துக் கொண்டுள்ளார்.

புஷ் தன்னுடைய தவறுகளை ஒத்துக் கொண்டுள்ள போதிலும் தான் செய்த தவறுகளுக்காக உலக சமுதாயத்திடம் குறிப்பாக இராக் மக்களிடம் மன்னிப்பு கோரவில்லை.

புஷ் நடத்திய இராக் போர் ஒரு சமூகப் படுகொலை - இப் படுகொலைகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச அரங்குகளில் நாஜீக்கள் செக்கோஸ்வாக்கியா மீதும் போலந்து நாட்டின் மீதும் நடத்திய கொடுமைகள் தான் போர்க் குற்றங்களாக பேசப்படுகிறது.

அதை விட பல மடங்கு காட்டுமிராண்டித் தனமான போர்க் குற்றத்தை நிகழ்த்தியுள்ள புஷ் தனது அநீதியை ஒப்புதல் வாக்குமூலமாக அளித்திருக்கிறான்.

உலகின் ஜனநாயகவாதிகளாக தங்களை அடையாளங் காட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்கர்கள் தங்களது முன்னாள் ஜனாதிபதி புஷ் நிகழ்த்திய அநீதிகளுக்கு நியாயம் வழங்க முன் வர வேண்டும்.

ஐ.நா. சபைக்கு ஆண்மை உள்ளது உண்மையென்றால் ஜார்ஜ் புஷ் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும், அதற்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.
அமெரிக்கர்களும், ஐ.நா. சபையும் இதற்கு தயாரில்லை என்று சொல்லட்டும்! புஷ் செல்லும் திசையெல்லாம் முன்டாசர் போல செருப்பு வீச சர்வதேச சமுதாயமே தயாராக இருக்கிறது.
========

0 comments:

Post a Comment